சொற்களத்தில் விவாதப்போர்

சொற்களத்தில் விவாதப்போர்

fallback-0

19 Feb 2018 - 8:54 am

1 mins read

மக்கள் கழக நற்பணிப் பேரவை, மத்திய வட்டார 30 இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் இணைந்து 'சொற்களம்' எனும் உயர்நிலைப்பள்ளி மாணவர் களுக்கான தமிழ் விவாதப் போட்டியைத் தொடங்கியுள்ளன. ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தப் போட்டி களுக்கு மொத்தம் 30 பள்ளிகள் இவ்வாண்டு பதிவுசெய்துள்ளன. முதல் சுற்றுப் போட்டிகள் இம்மாதம் 10ஆம் தேதி பெண்டமியர் உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டன. 'சிங்கப்பூரர்கள் எளிதில் ஏமாறக்கூடியவர்கள்' எனும் தலைப்பு முதல் சுற்றில் வழங்கப்பட்டது. தலைப்பை ஒட்டியும் வெட்டியும் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர் கள் விவாதித்தனர். ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த பேச்சாளர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 15 பேருக்கு அதே நாளில் பரிசுகள் வழங்கப்பட்டன.

சொற்களம் போட்டிகளின் இரண்டாவது சுற்று எதிர்வரும் 24ஆம் தேதி பெண்டமியர் உயர்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளன.

யீ‌ஷூன் டவுன் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடனான போட்டியில் தலைப்பை வெட்டிப்பேசிய மான்ட்ஃபோர்ட் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுள் ஒருவரான அரிவர்மன் சிறந்த பேச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்குப் பரிசளிக்கப்பட்டது. சொற்களம் போட்டியில் கலந்துகொள்ள வேண்டுமென்ற அரிவர்மனின் நெடுநாள் விருப்பம் நிறைவேறியது. படம்: பாலாஜி