சமூக சேவையில் சத்யா

சிண்டாவின் இளைய தலைவர் திட்டத்தில் (எஸ்எல்ஒய்பி )கடந்த ஆண்டு பங்கேற்ற 21 வயது தேனப்பன் சத்யா சமூகத்திலுள்ள பிரச்சினை ஒன்றைத் தீர்க்க தொடர்ந்து முயற்சி செய்கிறார். 

ஒன்பது இளையர்களைக் கொண்ட அவரது குழு ‘எம்ப்ரேஸ் தி வேஸ்ட்’ என்னும் உணவு விரயத்தைக் குறைக்க முனையும் திட்டத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது. 

‘எஸ்எல்ஒய்பி’ திட்டம் 5 மாதங்களில் முடிவடைந்தாலும், தன்னுடைய குழு உருவாக்கிய திட்டத்தைத் தொடர்ந்து செயல் படுத்த, தாம் பயின்ற காமன்வெல்த் உயர்நிலைப் பள்ளியிலிருந்து சில மாணவர்களின் உதவியை நாடினார் சத்யா.

இந்த திட்டத்தின் முயற்சி களை மேம்படுத்த ஓர் இணையத்தளத்தையும் ஒரு சஞ்சிகையையும் அவர்கள் உருவாக்கினார்கள்.

 இவற்றின் மூலம் இந்தக் குழு உணவு விரயத்தைக் குறைப்பதன் முக்கியத்துவத் தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 

சென்ற ஆண்டிறுதியில், சத்யா தன் குழுவினருடன் சேர்ந்து தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சிகரெட்டுத் துண்டுகளைக் கண்ட இடங்களில் வீசும் பிரச்சினையைத் தீர்க்க திட்டம் ஒன்றை முன் மொழிந்தார்.

அந்தத் திட்டத்தைச்  செயல்படுத்த இவர்களுக்கு $3,000ஐ அந்தச் சமூக மன்றம் வழங் கியது. 

பீ‌‌ஷானில் நடைபெற்ற ‘கிளீன் அண்ட் கிரீன் கார்னிவலில்’ நிகழ்வில் கடந்த சில மாதங்களாக தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி மக்களிடம் இக்குழுவினர் விளக்கினர்.

“எஸ்எல்ஒய்பி திட்டத்தில் பங்கெடுக்கும் இளையர்கள் தங்களது திட்டங்களைக் கைவிடாமல், சிறப்பாக செயல் படுத்தினால் நல்லது,” என்றார் சத்யா. 

ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் ஜிசிஇ ‘ஏ’ நிலைத் தேர்வுகளை முடித்து, சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் தேசிய சேவையை நிறைவுசெய்தார் சத்யா.

இரு மாதங்களில் டார்த்மவுத் கல்லூரியில் பட்டக் கல்வியைத் தொடங்க இருக்கிறார் அவர்.