சுடச் சுடச் செய்திகள்

ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்

ஒரு ஹாலிவுட் திரைப்படம் போதாது என்று நான்கு திரைப்படங்களில் தன் பெயரை முத்திரை பதித்துள்ளார் அக்‌ஷ்யா ரமே‌ஷ்குமார் (படம்). உலகெங்கும் அண்மையில் சக்கைப் போடு போட்ட பிரபல ஹாலிவுட் திரைப்படம் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்'. படத்தின் வெற்றிக்குத் தானும் கைகொடுத்திருக்கிறார் என்று எண்ணுவதில் பெருமிதம் கொள்கிறார் இந்த இருபது வயது இளையர்.

சிறுவயதிலிருந்தே திரைப்பட மோகம் இருந்த அதே சமயம், இவருக்கு விளம்பரங்கள் மீதும் ஓர் ஈடுபாடு ஏற்பட்டது. இதுவே வடிவமைப்புத் துறை மீது ஓர் ஈர்ப்பையும் ஏற்படுத்தியது. 

'யுடியூப்' இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட  காணொளிகள் சிலவற்றில் பாடல் வரிகளுக்கு ஏற்ப வார்த்தைகள் இடம்பெறும். சிறு வயதில் இதைப் பார்த்தே ஆர்வம் கொண்ட அக்‌ஷ்யா, அசையும் வரைகலை சித்திரம் உருவாக்கும் துறையில் ஈடுபாடு கொண்டார். 

அதற்குப் பிறகு தன்னுடைய சொந்த 'யுடியூப்' ஒளியலையைத்  துவங்கிய இந்த இளையர், தன்னுடைய சொந்த முயற்சியில் பாடல் வரிகள் கொண்ட காணொளிகளைத் தயாரித்து அவற்றை வெளியிடத் தொடங்கினார். 

இந்த ஆர்வத்தை மேம்படுத்தி ஒரு திறனாக மாற்ற விரும்பிய அக்‌ஷ்யா, நன்யாங் பலதுறை தொழிற்கல்லூரியின் 'Diploma in Motion Graphics and Broadcast Design' பட்டயக் கல்வியில் பயில முடிவெடுத்தார். தன்னுடைய இரண்டாம் ஆண்டில் அசையும் வரைகலை சித்திரத்தின் மேலிருந்த ஆர்வம், அமெரிக்காவிலுள்ள 'கெண்டினா க்ரியேட்டிவ்ஸ்' என்ற நிறுவனத்தை அணுகிப் பயிற்சி பெறும் வாய்ப்பை நாடத் தூண்டியது.

ஒரு பயிற்சி மாணவராகச் சேர விரும்புவதாக நிறுவனத்திற்கு அவர் ஒரு மின்னஞ்சலை அனுப்பினார். 'ஸ்கைப்' மூலம் பேட்டி நடந்தது. அதைத் தொடர்ந்து  உடனே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.  

தன்னுடைய மூன்றாம் கல்வி ஆண்டில் அக்‌ஷ்யா, அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சலிஸ், கலிபோர்னியா நகருக்குச் சென்று 'கெண்டினா க்ரியேட்டிவ்ஸ்' நிறுவனத்தில் இணைந்து தன் பணியைத் தொடங்கினார். 

புகழ்பெற்ற நிறுவனத்தின்கீழ் பணியாற்றுவது சிரமமாக இருக்கும் என்று அக்‌ஷ்யா ஆரம்பத்தில் நினைத்திருந்தார். ஆனால், தான் எதிர்பார்த்ததைவிட வேலை சுற்றுச்சூழல் இதமாகவே இருந்தது என்றும் அனைத்து ஊழியர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் பழகினர் என்றும் அவர் பின்னர் உணர்ந்தார்.

நிறுவனத்தில் வேலை செய்ததன் மூலம் அக்‌ஷ்யாவிற்கு 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படம் உட்பட மொத்தம் நான்கு படங்களில் பணியாற்றும் அரிய வாய்ப்பு கிட்டியது.

"என்னுடைய வேலை, இப்படிப் பெரிய திரையில் வெளிவரும் என்று நான் நினைக்கவே இல்லை. கனவா நனவா என்றுகூட தோன்றியது," என்றார் அக்‌ஷ்யா.

தன் வேலையின் இறுதி இரண்டு மாதங்களில் அக்‌ஷ்யாவிற்கு பணிப் பொறுப்புகள் அதிகமாகின. பல வேலைகளைச் சமாளிப்பது ஒருபுறம் இருக்க, அவற்றைச் சிறப்பாகச் செய்து முடிப்பதும் ஒரு பெரும் சவாலாக இருந்தது. தொடர்ந்து அவர் கடினமாக உழைத்துத் தன்னுடைய பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார். 

இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் தன் பட்டயப் படிப்பை முடித்த அக்‌ஷ்யா, தற்போது தன்னுடைய அசைவு வரைகலை சித்திரத் திறமைகளை வளர்க்க முனைந்துள்ளார். மீண்டும் நிரந்தரமாக நிறுவனத்துடன் சேர்ந்துகொள்ள அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்தும் தற்போது அக்‌ஷ்யா சிங்கப்பூரில்தான் இருக்கிறார். 

இத்துறையில் குறிப்பிட்டு எந்த அம்சம் தனக்கு அதிக ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது என்று அறிந்துகொள்வதற்காக 'கம் க்ரியேட்டிவ்ஸ்' (Cum Creatives) என்கிற சிங்கப்பூர் நிறுவனத்தில் அசைவு வரைகலை சித்திர ஓவியராகப் பணியாற்றி வருகிறார். 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon