'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்

பெரும்பாலான பள்ளிகளில் இன நல்லிணக்க நாள் கொண்டாட்டங்கள் கலைநிகழ்ச்சிகளாக நடைபெறும். ஆனால் சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி கடந்த 15 ஆண்டுகளாக சற்று வித்தியாசமாக இன நல்லிணக்க நாளைக் கொண்டாடி வருகிறது.

இந்த இன நல்லிணக்க நாள் கொண்டாட்டங்களின்போது, சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளியின் மாணவர்கள் மூன்று இனங்களின் பாவனை திருமணங்களை மேடையேற்றி வருகிறார்கள். 

இந்து திருமணம், மலாய், முஸ்லிம் திருமணம், சீன திருமணம் ஆகியவற்றை மாணவர்களும் ஆசிரியர்களும் நாடக வடிவில் நடித்துக் காட்டினார்கள்.  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளியில் இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர்  ஓங்  யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் இரண்டு வாரங்களாக ஈடுபட்டனர். 

“சிங்கப்பூரிலுள்ள பல இனத்தவரின் கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன. அவர்கள் மற்ற இனத்தவர்களின் கலாசாரத்தையும் பண்பாடுகளையும் புரிந்து, ரசித்து, பின்னர் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்,”  என்று கூறினார் பள்ளியின் மானுடவியல் பிரிவின் தலைவரான ஆசிரியர் திருவாட்டி இபாய்டா இப்ராஹிம்.

“ஆனால் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த கலாசாரத்தை நன்கு புரிந்து, அதை அரவணைத்த பிறகே மற்ற இனக் கலாசாரங்களையும் பண்பாடுகளையும் புரிந்து கொண்டாட வேண்டும்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.  “இந்து திருமணத்திற்கு தோரணம் கட்டினோம். சீன திருமணத்திற்கு சீன வார்த்தைகளை அலங்காரத்திற்காக எழுதினோம். மலாய் திருமணத்திற்கு விருந்தினர்களுக்கு அன்பளிப்பான மிட்டாய் பைகளைத் தயார் செய்ய உதவினோம். மற்ற இன கலாசாரங்களின்படி எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொண்டோம்,” என்றார் உயர்நிலை மூன்று மாணவரான 15 வயது ரிதர்நிகா சாமிநாதன்.

“மற்ற இனத்தவர்களின் திருமண விழா எப்படி நடக்கும் என்று பார்ப்பது இதுவே முதல் அனுபவம். மற்ற இன நண்பர்களுடன் இனைந்து செயல்பட இது நல்ல வாய்ப்பாக அமைந்தது,” என்று கூறினார் உயர்நிலை இரண்டில் பயிலும் 14 வயது மாணவர் யாழினி சரவணன். “மாணவர்களும் ஆசிரியர்களும் ஏற்பாடுகளில் ஈடுபடுவதால், எனக்கும் மற்ற இன மாணவர்களை சந்தித்து, அவர்களுடன் நம் இந்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டைப் பற்றி பகிர்ந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது,” என்றார் தமிழாசிரியர் திருமதி கங்கா பாஸ்கரன்.

“மேலும், சிங்கப்பூரில் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்து வரும் கலப்புத் திருமணங்களைப் பற்றி மாணவர்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்த திருமணங்களில் பல இன மணமக்கள் இருந்தனர்,” என்றும் திருமதி கங்கா கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்

12 Aug 2019

பழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்

முழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.
- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி

12 Aug 2019

கனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்

'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு

29 Jul 2019

அருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு