தொழில் கற்றுத் தந்த உள்ளகப் பயிற்சி; ‘பியர்’ தொழிலதிபர்களான இளையர்கள்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தபோது, செய்வது சட்டவிரோதமானது என்று தெரியாமலேயே, விடுதி வளாகத்தில் ‘பியர்’ தயார் செய்து விற்றதற்காக பிரச்சினைகளை எதிர்நோக்கிய மூவர் அதனால் தளர்ந்துவிடவில்லை.

விடுதி அதிகாரிகளிடம் சிக்கிய அவர்கள் அதன் பிறகு அங்கு ‘பியர்’ தயாரிக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டது. 

ஆனால், பத்து மாதங்கள் கழித்து, தற்போது வியாபார நோக்கில் ‘பிஞ்சாய் புரூ’ எனும் பெயரில் ‘பியர்’ தயாரிக்கத் தொடங்கினர். அதற்கான உரிமமும் பெற்றுள்ளனர் இவர்கள்.

கலிஃபோர்னியாவில் உள்ள சிறிய ‘பியர்’ தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில், 2017ஆம் ஆண்டு  வசந்தகால உள்ளகப் பயிற்சி மேற்கொண்ட திரு ராகுல் இம்மாந்திரா, நண்பர்களான திரு அபிலாஷ் சுப்பராமன், திரு ஹீதேஷ் அல்வானி ஆகியோருடன் சேர்ந்து ‘பியர்’ தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்டார்.

“பியர் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள், செய்முறை போன்றவற்றைக் கற்றுக்கொண்டோம். பொறியியல் பின்னணி கொண்ட நாங்கள், ஒரு தொழிலை எப்படி நடத்துவது என்பதைப் படிப்படியாகக் கற்று வருகிறோம். வெளிநாட்டு ‘எக்ஸ்சேஞ்ச்’ திட்டக் கல்வியும் தொழில் நடத்துவதைப் பற்றிய புரிதலைக் கொடுத்தது,” என்றார் அபிலாஷ். 

‘ரினாய்சன்ஸ் எஞ்சினியரிங் புரோக்ராம் (ஆர்இபி)’ திட்டத்தில் பயின்று வந்த அவர்களில் அபிலாஷ், ஹீதேஷ் ஆகிய இருவரும் அண்மையில் பட்டம் பெற்றனர். ராகுல் இம்மாந்திரா இன்னும் ஆறு மாதங்களில் படிப்பை முடிக்க இருக்கிறார்.

இணையம் வழியாகவும் கடைகள் வழியாகவும் விற்பனை செய்யும் இவர்கள், தற்போது விழாக்களிலும் பியர் விற்பனையைத் தொடங்கியுள்ளனர்.

மாதம் ஒன்றுக்கு $10,000 முதல் $15,000 வரை ஈட்டினாலும் இன்னும் லாபம் பார்க்கும் அளவுக்கு விற்பனை இல்லை என்கிறார் அல்வானி.

சொந்த செலவுகளுக்காக பகுதி நேர துணைப்பாட ஆசிரியராகப் பணியாற்றும் இவர் மட்டுமின்றி, மற்ற இருவரும்கூட இன்னும் ‘பியர்’ தயாரிப்புத் தொழிலில் இருந்து வருமானம் எதையும் ஈட்டவில்லை.

“சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் எங்களது ‘பியர்’ தயாரிப்பை மேற்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். பார்லி அல்லது கோதுமைக்குப் பதிலாக விற்பனையாகாத ரொட்டித் துண்டுகளைப் பயன்படுத்தலாமா என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம்.

“நிகழ்ச்சிகளில் பியர் விற்பனைக்குச் செல்லும்போது தங்களது கோப்பையையோ அல்லது ஏற்கெனவே பயன்படுத்திய கோப்பையையோ மீண்டும் பயன்படுத்துவோருக்கு $1 தள்ளுபடி கொடுக்கிறோம். 10 காசு, 20 காசு என சிறிய அளவில் தள்ளுபடி கொடுத்தால், நெகிழிக் குவளைகளைப் பயன்படுத்துவதைக் கைவிடத் தோன்றாது. $1 என்பது சிறிய தொகை அல்ல. எனவே, சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்க இது வலுவான வாய்ப்பை ஏற்படுத்தும்,” என்ற அபிலாஷ், தள்ளுபடி அளிக்காமல் இருந்தால் தங்களது வருமானம் வெகுவாகக் கூடியிருக்கும் என்றார்.

“எதிர்காலத்தில் எந்த நிலையை அடைய வேண்டும் என்று எங்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும், இந்தப் பயணத்தில் இடையில் என்ன நடக்கும் என்பது கணிக்க இயலாததாகவே உள்ளது,” என்று கூறும் அபிலாஷ், “செய்துதான் பார்ப்போமே,” என்ற எண்ணத்தில்  இந்தத் தொழிலில் இறங்கி இருப்பதாகச் சொல்கிறார்.