உள்ளூர் எழுத்தாளர் ரஜித்துடன் இளையர்களின் கலந்துரையாடல்

கவிதை, கதை, கட்டுரை என ஒரு மொழியின் பல்வேறு வடிவங்களை ஒருவர் படித்துத் தேறினாலும் அப்படைப்புகளில் பொதிந்துள்ள உட்கருத்து, எழுத்தாளரின் சிந்தனை ஓட்டம் ஆகியவற்றை அறிந்துகொள்வது அத்தனை எளிதல்ல.  ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி மாணவர்களாகிய எங்களுக்கு இந்த அரிய வாய்ப்பு கிட்டியது.

உயர்நிலை நான்கில் பயிலும் நாங்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளூர் எழுத்தாளர் திரு யூசுப் ராவுத்தர் ரஜித் எழுதிய ‘உயர்ந்த உள்ளம்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் சிறுகதைகளை வாசித்து வந்தோம். 

அத்துடன் கதாசிரியர் சமுதாயத்திற்குச் சொல்ல விரும்பும் செய்தி, கதையைக் கூறத் தான் கையாண்ட உத்தி,  படைப்பின் சொல்லாட்சி, அதன் மொழிநடை முதலிய இலக்கியப் பண்புகளின் அடிப்படையில் விவாதித்து எங்களின் புரிந்துணர்வை விரிவுபடுத்திக்கொண்டோம். 

கதைகள் மூலம் தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் எழுத்தாளர் சொல்ல விரும்பும் வாழ்வியல் உண்மைகளையும் புரிந்துகொள்ள முயன்றோம். 

இந்த இலக்கியக் கதைத் தொகுப்பு, ஆழமான வாழ்க்கைப் பாடங்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்திருப்பதை மெல்ல மெல்ல உணர்ந்தோம். 

இவ்வாறிருக்க திரு ரஜித்தையே ஒருநாள் சந்தித்து உரையாடியது, எங்களின் இந்த இலக்கியத் தேடல் பயணத்தில் முத்தாய்ப்பாக அமைந்தது. 

திரு ரஜித்துடன் வகுப்பு நேரத்தில் உரையாட எங்களின் ஆசிரியர் திரு கும்பலிங்கம் உத்தமன் ஏற்பாடு செய்திருந்தார். 

திரு ரஜித் தமது அனுபவங்களையும் எண்ணங்களையும் இளையர்களுக்குப் புரியும் வகையில் அழகாக எடுத்துக் கூறினார். 

“உங்களுக்குள் மறைந்து கிடக்கும் தனித்திறமையை எவராலும் அசைக்கமுடியாது. நேரம் வரும்போது அதுவாக வெளிப்படும்,” என எங்களுக்குத் தைரியம் ஊட்டும் வகையில் கூறிய அவரின் சொற்கள், எங்களுக்கு ஒரு புது உத்வேகத்தையே அளித்தது. 

இதுபோன்ற பல வாழ்வியல், உலகியல் கருத்துக்களை சிங்கப்பூர் சூழலுடன் தொடர்புபடுத்தி திரு ரஜித் மிக நயமாக, உணர்ச்சிபூர்வமாக சொல்லிச் சென்றார். 

இந்தக் கலந்துரையாடலில் நாங்கள் அறிந்துகொண்ட தகவல்கள், எங்களின் வாழ்நாள் முழுவதற்கும் பொருந்தும் வகையில் பயனுள்ளதாகத் தொடரும் என்றே கூறவேண்டும். 

மாணவ எழுத்–தா–ளர்–கள்: 

ஆனந்–தன் விஷ்ணு வர்–தினி, 

மாத–வன் காருண்யா