நாடாளுமன்றத்தில் ஒருநாள்

மொழிபெயர்ப்பு என்றால் என்ன,  அது எவ்வாறு நடைபெறுகிறது, நாடாளுமன்ற அமர்வு எப்படி இருக்கும், பழைய நாடாளுமன்றத்திலிருந்து புதிய நாடாளுமன்றம் எவ்வாறு வேறுபட்டுள்ளது போன்ற சுவாரசியமான தகவல்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு சில உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கிட்டியது. 

சென்ற மாதம் 30ஆம் தேதியன்று நாடாளுமன்றத்திற்குக் கல்விச் சுற்றுலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 

செயின்ட் ஹில்டாஸ் உயர் நிலைப் பள்ளியின் ஏற்பாட்டில் அப்பள்ளி உட்பட, ஆங்கிலோ  சீன தன்னாட்சி உயர்நிலைப்பள்ளி, ஈஸ்ட் ஸ்பிரிங் உயர்நிலைப்பள்ளி, சிங்கப்பூர் சீனப்பெண்கள் உயர் நிலைப் பள்ளி, பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளி, உமறுப்புலவர் கல்வி நிலையம் ஆகிய பள்ளிகளும் கலந்துகொண்டன.

ஆறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றுகூட, நாடாளுமன்ற மூத்த மொழிபெயர்ப்பாளர் திரு பழனியப்பன் இன்முகத்துடன் அவர்களை வரவேற்றார். 

“இந்த அளவுக்குப் பல உயர் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் ஒன்றிணைந்து  நாடாளுமன்றத்திற்குக்  கல்விச் சுற்றுலா வருவது இதுவே முதல்முறை,” என்று குறிப்பிட்டார் திரு பழனியப்பன். 

நாடாளுமன்றத்தில் பணியாற்று பவர்களுடனான அறிமுகம் முடிந்த பின்னர் அனைவரும் நாடாளுமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்தார்கள். முதல் அங்கமாக 15 நிமிட காணொளி ஒன்று தமிழில் ஒளிபரப்பானது. அதில் நாடாளுமன்ற அமர்வு பற்றியும் அதன் வரலாறு பற்றியும் தகவல்கள் இடம்பெற்றன. 

பின்னர், பழைய நாடாளுமன்றம் எப்படி இருந்தது என்றும் புதிய நாடாளுமன்றம் எப்படி உள்ளது என்றும் புகைப்படங்கள் மூலம் திரு பழனியப்பன் விளக்கிக் கூறினார். 

அதையடுத்து நாடாளுமன்ற விவாதம் நடக்கும் இடத்திற்கு அனைவரையும் அழைத்துச்சென்று அங்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு இடம்பெறுகிறது என்பதை திரு பழனியப்பன் விளக்கினார். மொழிபெயர்ப்பு நடக்கும் இடத்தையும் மாணவர்கள் பார்வையிட்டனர். மாணவர்கள் உற்சாகத்துடன் மொழிபெயர்ப்பு குறித்து அறிந்து கொண்டனர். 

இடைவேளையின்போது திரு பழனியப்பன் மாணவர்களுடன் உரையாடியதுடன் மொழிபெயர்ப்பு நுணுக்கங்களைப் பற்றியும் அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

விடைபெற்றுக்கொண்ட மாணவர் குழுவிடம், நன்கு கற்று எதிர்காலத்தில் சிறந்த சமூகத் தலைவர்கள் ஆக கனவு காணு மாறு திரு பழனியப்பன் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராகும் கனவை நனவாக்கும் வகையில் உழைத்து முன்னேற வேண்டும் என்றார் அவர். 

மொத்தத்தில் நாடாளுமன்றத்திற்கு ஒருநாள் கல்விச் சுற்றுலா மேற்கொண்ட மாணவர்கள் முகத்தில் மகிழ்வும் எண்ணத்தில் தெளிவும் பெற்றனர்.