சமுதாயத்திற்குப் பங்காற்ற விரும்பும் பிரெமிக்கா

- ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்

சமூகத் தொண்டூழியர், கவிஞர், இளைய தலைவர் என்று பல பரிமாணங்களில் வலம்வரும் இளைஞர் மா. பிரெமிக்கா, சென்ற மாதம் 14ஆம் தேதியன்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றார்.

சிறு வயதிலிருந்தே பிரெமிக்காவுக்கு மருத்துவத் துறையில் ஆர்வம் உண்டு. தனக்கு மட்டுமல்லாது தன்னைச் சுற்றியுள்ளவர்கள் நோய்வாய்ப்படும்போதும் அந்த நோயைப் பற்றிப் படித்து மேலும் அறிந்துகொண்டாராம்.

உயர்நிலைப் பள்ளி பருவத்தில் சமூகத் தொண்டூழிய நடவடிக்கைகளில் விரும்பி ஈடுபடத் தொடங்கினார். சமூகத்திற்கு உதவி செய்வதில் தனக்கு ஆர்வம் இருப்பதை உணர்ந்தார்.

“அறிவியலையும் சமூக சேவையையும் இணைக்கும் ஒரு தொழிலில் ஈடுபட ஆசைப்பட்டேன். அதற்கு மருத்துவமே சிறப்பான தெரிவாக இருக்கும் என்று நினைத்தேன்,” என்று பிரெமிக்கா கூறினார்.

தன் பட்டப்படிப்பு காலத்தின்போது மருத்துவம் தொடர்பான பல ஆய்வுகளில் பிரெமிக்கா ஈடுபட்டார். மேலும் தன் மருத்துவப் படிப்பின் மூன்றாம் ஆண்டில், இந்தியாவின் வேலூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மாணவராகப் பணியாற்றினார். அங்கு ஒரு மாதம் பயிற்சி பெற்ற பிரெமிக்கா, “சிங்கப்பூரில் இருக்கும் வசதிகள் அங்கே இல்லை. ஆனாலும் அங்கே வழங்கப்பட்ட சிகிச்சையின் தரம் சிங்கப்பூருக்கு ஈடாக இருந்தது. அது எனக்கு வியப்பூட்டியது. தரமான மருத்துவச் சேவையை வழங்குவதற்குப் போதுமான வசதிகள் மட்டும் இருந்தால் போதாது. நோயாளிகளியின் தேவை அறிந்து அதற்கு ஏற்பச் செயல்படும் திறனும் மிகவும் முக்கியம். அத்திறன் இருந்தால்தான் உண்மையிலேயே ஒரு சிறந்த மருத்துவராக இருக்க முடியும்,” என்று பிரெமிக்கா கூறினார்.

தற்போது தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றும் பிரெமிக்கா, எதிர்காலத்தில் பொது மருத்துவத் துறையில் முதுகலை பட்டம் படிக்க விரும்புகிறார். மருத்துவர்கள் பெரும்பாலும் நோயாளிகளைச் சந்திக்கும்போது என்ன நோய் இருக்கிறது என்று கண்டறிந்து, அதை குணப்படுத்துவதற்காக தகுந்த மருந்துகள் அளித்து, அந்த நோயாளி குணமடைந்துவிட்டாரா என்று விசாரிப்பதே வழக்கமாகும் என்று பிரெமிக்கா பகிர்ந்துகொண்டார்.

“பொது மருத்துவம் எனும்போது, ஒரு நோய் எவ்வாறு உருவாகிறது என்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதைப் தடுப்பதற்கான ஆராய்ச்சியிலும் முயற்சிகளிலும் ஈடுபடலாம். எனவேதான் பொது மருத்துவத்தில் நான் முதுகலை பட்டம் பெற விரும்புகிறேன்,” என்று பிரெமிக்கா கூறினார். குறிப்பாக மகப்பேறு மற்றும் மகளிர் துறை சார்ந்த மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற விரும்புகிறார். “ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் பல மாற்றங்கள் என்னைப் பிரம்மிக்க வைக்கின்றன. குழந்தைப் பிறப்பு என்பது புனிதமான ஒன்று. அதில் நானும் ஓர் அங்கமாக இருக்க விரும்புகிறேன்,” என்றார் பிரெமிக்கா.

எதிர்காலத்தில் உலகச் சுகாதார அமைப்பில் பங்காற்ற பிரெமிக்கா விரும்புகிறார். “மருத்துவத் துறையில் இருப்பவர்கள் தங்களுடைய சொந்த நாட்டினருக்கு மட்டும் மருத்துவச் சேவை வழங்காமல் மற்றவர்களுக்கும் மருத்துவச் சேவை வழங்கவேண்டும். ஏழ்மையில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற அமைப்புகள் தக்க உதவி அளிக்கும். அத்தகைய உன்னத முயற்சியில் நானும் பங்குபெற விரும்புகிறேன்,” என்று பிரெமிக்கா கூறினார்.

மருத்துவத் துறையில் ஆர்வம் ஒரு பக்கம் இருக்க, பிரெமிக்காவுக்குத் தமிழ்மொழி மீதும் அதிக ஆர்வம் உள்ளது. “எனக்கு சிறு வயதிலிருந்தே தமிழ்மொழி மீது அதீத பற்று. தமிழ்ப்பாடங்களை மிகவும் விரும்பிப் படிப்பேன். மேலும் தமிழ்மொழி தொடர்பில் ஏற்பாடு செய்யப்படும் நடவடிக்கைகளில் கலந்துகொள்வேன். என் மொழியைக் காக்கும் கடமை எனக்கு இருக்கிறது. அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டுபோய் சேர்க்கவேண்டும்,” என்று பிரெமிக்கா கூறினார்.

பிரெமிக்கா பல சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதியிருக்கிறார். மேலும் தமிழ்மொழி மேல் உள்ள ஆர்வத்தால் தனது ‘ஏ’ நிலைத் தேர்வுகள் முடிந்து ‘தமிழ் முரசு’ நாளிதழில் வேலைப் பயிற்சியை மேற்கொண்டார். அந்த நான்கு மாத அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகக் கருதுகிறார். “பலரையும் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது. தகவல்கள் சேகரிப்பதுடன் உலக நடப்பு தொடர்பிலான என் பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள இது ஒரு நல்ல தளமாக இருந்தது. தமிழ்மொழியில் எழுதும் ஆர்வம் மேலும் வலுவானது,” என்று பிரெமிக்கா கூறினார். தமிழ் முரசின் மூலம் தான் எழுதிய முதல் கவிதையை வெளியிட்டதுடன் தொடர்ந்து கவிதைகள் எழுதத் தொடங்கியதாகவும் பிரெமிக்கா கூறினார்.

பள்ளியில் தமிழ் பாடம் படித்த காலம் முடிந்த பிறகு இன்றும் தமிழ்மொழிமீது பற்று கொண்டுள்ள பிரெமிக்கா, தமிழில் பேசுவது மிக முக்கியம் என்று கூறினார். “ஒரு மருத்துவராக இருந்தாலும் தமிழ்மொழி எனக்கு முக்கியமானது. தமிழ் பேசும் நோயாளிகளை நான் சந்தித்தால் அவர்களிடம் தமிழில்தான் பேசுவேன்,” என்று பிரெமிக்கா கூறினார். மேலும் தமிழில் பாடல்கள் கேட்பது, தமிழ் நிகழ்ச்சிகளுக்குச் செல்வது கவிதைகள் எழுதுவது என இவற்றின் மூலம் தன் மொழி ஆற்றலைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதாக பிரெமிக்கா கூறினார்.

“நம்மைச் சுற்றி சீனர்கள், மலாய்க்காரர்கள் போன்ற மற்ற இனத்தவர் இருக்கும்போது தமிழில் அடிக்கடி பேசுவது சவால்மிக்கது. ஆனால் நான் முடிந்தவரை தமிழில் பேசுகிறேன். முடிந்தவரை தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவேண்டும், வாய்ப்பு வரும்போது தமிழ்மொழி தொடர்பான திட்டங்களில் ஈடுபட விரும்புகிறேன்,” என்று பிரெமிக்கா கூறினார்.

பிரெமிக்கா இதுவரை பல தலைமைத்துவப் பொறுப்புகளையும் ஏற்றுப் பணியாற்றியுள்ளார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ் பேரவையின் துணைத் தலைவராகச் செயலாற்றியதுடன் சிண்டா மற்றும் தேசிய இளையர் மன்றம் போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டதில் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்றிருந்தார் பிரெமிக்கா. “நான் சமுதாயத்திற்கு என் பங்கை ஆற்ற விரும்புகிறேன். நாம் சேர்ந்து ஈடுபடும் முயற்சிகள் மற்றவர்களுக்குப் பயனளிக்கவேண்டும். மற்றவர்களையும் சமுதாயத்திற்குச் சேவையாற்ற நாம் ஊக்குவிக்கவேண்டும்,” என்று பிரெமிக்கா பகிர்ந்துகொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!