மனங்கவரும் மருதாணி ஓவியம்

பண்டிகைக் காலங்கள், திருமணம், வீட்டு விசேஷங்கள் என கொண்டாட்ட நிகழ்வுகளின்போது மருதாணி இட்டு அழகூட்டுவது இந்தியரின் பாரம்பரியப் பழக்கம். 

உடலுக்குக் குளிர்ச்சிதரும் மருதாணி, இன்று பலதரப்பட்ட வடிவங்களில் இடப்படுகிறது. 

அந்தக் கலையில் பயிற்சிபெற்று அழகிய வடிவங்களை வரைபவர்கள் இன்று பலர் உள்ளனர். இதில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் கலைஞர்களில் ஒருவர், ‘ஹென்னா ஃபெடிஷ்’ எனும் பெயரில் மருதாணி இடும் சேவையை வழங்கி வரும் சரஸ்வதி. இவர் சமூக ஊடகம் மூலம் தமது மருதாணி சேவையைப் பிரபலமாக்கியவர். கடந்த 15 ஆண்டுகளாக தீபாவளி சந்தையில் கடை நடத்திப் பலரது கைகளுக்கு மருதாணி இட்டு, அழகுபடுத்தி வரும் சரஸ்வதி இவ்வாண்டும் தமது கைவண்ணத்தைக் காட்டத் தயாராகிவிட்டார். 

“மருதாணியிடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மிகுதியான ஆர்வத்தால் நான் பல வடிவங்களைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறேன்,” என்றார் 30 வயதுடைய சரஸ். 

“சிறுவயதில் ஏற்பட்ட இந்த ஆர்வம், என் திறனை வளர்க்கும் ஒரு தளமாகவும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது,” என்றார். 

தமது புன்சிரிப்பாலும் திறமையாலும் சரஸ் பல வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளார். 

இவ்வாண்டு சரஸ், ‘ஜாகுவா’ மையை அறிமுகப்படுத்தியுள்ளார். இது பழச்சாறிலிருந்து தயாரிக்கப்படும் கறுப்பு மருதாணி. இது ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.   

முந்தைய ஆண்டுகளில் ‘ஏர்பிரஷ் டாட்டூ’ உட்பட பலவகையான மருதாணி சார்ந்த பொருட்களை இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இவரின் சேவையை மீண்டும் மீண்டும் நாடி வருவோரில் 30 வயது குமாரி திவ்யாவும் ஒருவர். 

“மருதாணி இட்டுக்கொள்வதில் எனக்கு கொள்ளை ஆசை. அனைவரும் பார்க்கும் விதத்தில் என் கைகளில் இருக்கும் மருதாணி அழகாக இருக்கவேண்டும் என்பதில் நான் கவனமாக இருப்பேன். அதனால் இதில் சிறந்து விளங்கும் சரஸை நான் தேடி வருவது வழக்கம்,” என்றார் அவர். 

சரஸின் இந்தப் பணி, தீபாவளி பண்டிகைக் காலத்தில் புதிய பரிணாமம் எடுக்கிறது.   

“இந்தக் காலங்களில்தான் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கிறது. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சிறப்பான முறையில் சேவை வழங்கினால் தொடர்ந்து அவர்கள் வருவார்கள்,” என்றார் சரஸ். 

மருதாணியால் தோலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் இவர் கவனமாக உள்ளார். உயர்தரமிக்க மருதாணியையே பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். இயற்கை முறைப்படி தயாரிக்கப்படும் மருதாணியைப் பலர் விரும்புவதால் அவற்றையே அதிகம் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார். இதில் மருதாணி நன்கு சிவக்கவேண்டும் என்பதும் முக்கியம். “சிவக்காமல் போனால் மருதாணி, மருதாணியாகவே இருக்காது,” என்று கூறும் சரஸ், புதுப் புது வடிவங்களைக் கலை நுணுக்கத்துடன் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கி வருகிறார்.

செய்தி: இர்–ஷாத் முஹம்–மது

Loading...
Load next