அனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’

சீனிவாசன் ஸாந்தினி

குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட விரும்புவோர் மத்தியில் இங்கு பயிலும் சில வெளிநாட்டு மாணவர்களால் தங்களின் தாயகம் திரும்பி அதனைக் கொண்டாட முடியாத சூழல். 

அவர்களுக்குப் பண்டிகை உணர்வைக் கொடுக்கும் அதே நேரத்தில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும்  இந்திய கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் பல்கலைக்கழகத்தில் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 14ஆம் தேதியன்று நடந்தேறியது.

‘என்டியு தீபத் திருநாள்‘ விழாவுக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம், சீக்கிய மன்றம், முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன. காலை முதல் பல்கலைக்கழக வளாகத்தில், இந்திய கலாசாரத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் வெவ்வேறு கூடாரங்கள் அமைக்கப்பட்டன.

மருதாணி இடுதல், பரமபதம் ஆட்டம், பல்லாங்குழி ஆட்டம், கரகாட்டம் என பல்வேறு பாரம்பரிய அம்சங்களைப் பற்றி வேற்றின என்டியு மாணவர்கள் தெரிந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்த நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் சுப்ரா சுரேஷ், கலாசார கூடாரங்களைப் பார்வையிட்டார்.

அத்துடன் மாலை வேளையில் நடந்த கலைநிகழ்ச்சியில் ‘பாலிவுட்’ பாடல் ஒன்றுக்கு ஆடி அபிநயம் பிடித்து மாணவர்களை மகிழ்வித்தார்.

என்டியுவின் நன்யாங் அரங்கில் மேடையேறிய பலதரப்பட்ட இந்திய கலாசார படைப்புகளில் பு.ஹரனும் அவரின் சக குழுவினரும் பல தமிழ்ப் பாடல்கள் அடங்கிய கதம்பத்தை மேடையேற்றினர்.

“தமிழர் கலாசாரத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது. அதோடு கலாசாரத்தைப் பின்பற்றவும் இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கின்றன,’’ என்று கூறினார் 21 வயது ஹரன். 

மற்ற இந்திய மொழிப் பாடல்களுக்கும் நடனங்களுக்கும் இடையே, தமிழ் இலக்கிய மன்றத்தின் விறுவிறுப்பான நடனப் படைப்பு, அரங்கிலிருந்த 800க்கும் மேற்பட்டவர்களை ஆடவைத்தது.

பல்–சுவை இந்–திய உண–வைச் சுவைத்–த–வாறு, நண்–பர்–க–ளு–டன் சேர்ந்து தீபா–வ–ளி–யைக் கொண்–டா–டிய அனு–ப–வத்தை இவ்–விழா மாண–வர்–க–ளுக்கு வழங்–கி–யது. படங்–கள்: ஹரி–ஹ–ரன்