‘தடமாற்றங்களால் ஏற்படும் தடுமாற்றங்கள்’

உயிர் மருத்துவ அறிவியல்  நிபுணத்துவ பட்டப்படிப்பை முடித்ததும் திருமணத்திற்கு வரன் வந்துள்ள நிலையில், மருத்துவத் துறை சார்ந்த மேற்படிப்பை மேற்கொள்ள முடிவெடுத்த குமாரி சர்மிலியின் கனவை நனவாக்குவதில் அவரது பெற்றோர் பக்கபலமாக இருந்தனர்.

மருத்துவத் துறையில் பணிபுரிய வேண்டும் என்ற சர்மிலியின் கனவை அறிந்த அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அது ஓர் ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் நரம்பியல் பாடத்தில் முனைவர் பட்டத்தைப் பெறுவதற்கு நான்கு ஆண்டுகள் ஆகும் என்றும் அக்கல்விப் பயணம் சர்மிலியின் திருமண வாழ்க்கைக்குத் தடையாக இருக்கும் என்றும் எண்ணி அவரது உறவினர்கள் தயங்கினர்.

கல்விக்குப் பிறகு நிரந்தர வேலை. நிரந்தர வேலைக்குப் பிறகு திருமணம், குழந்தைகள் என்று சமூகம் அமைத்த வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் தங்களது கனவுகளுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்ற கருத்தை ‘தடமாற்றங்களால் ஏற்படும் தடுமாற்றங்கள்’ என்ற தலைப்பில் இக்கருத்தரங்கில் முன்வைத்தார் 24 வயது சர்மிலி.

“நான் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்வதால் எனது திருமணம் தள்ளிப்போகும் என்று உறவினர்கள் என் பெற்றோரிடம் கவலை தெரிவித்தனர்.

“ஆனால், எனது வாழ்வில் திருமணம் மட்டுமின்றி, என் கனவுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை எடுத்துக்கூறி இத்துறையில் எனக்கு இருக்கின்ற அளவுக்கு அதிகமான ஆர்வத்தை அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன்.

“பெண்களான நாம் நினைத்ததை முடிப்பதில் பல தடைகளைச் சந்திக்கலாம். அதில் முதல் படிக்கல், நமது குறிக்கோள் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நெருக்கமானவர் களிடம் தெரியப்படுத்துதல்.

“நமது குடும்பத்தினரிடம் இந்த புரிதலை ஏற்படுத்துவது நமது கடமையாகும்,” என்கிறார், தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டு மாணவியாக இருக்கும் சர்மிலி.