என் பள்ளி வாழ்க்கையில் பாலர் பள்ளி முதல் இன்றுவரை கற்றல் கற்பித்தலில் எத்தனையோ பாடல்கள் இடம்பெறச் செய்துள்ளனர் என் ஆசிரியர்கள்.
குறிப்பாகத் தமிழ் வகுப்பில் இசைத்தமிழின் அறிமுகத்தோடு தான் இயற்றமிழும் நாடகத்தமிழும் ஒருங்கிணைந்து நிற்கின்றன.
மாணவர்களை ஊக்குவிக்க எத்தனையோ பாடல்களும் பாடல் காட்சிகளும் ஒருங்கிணைத்துக் கற்பிக்கப்படுகின்றன.
அவ்வாறு கற்பிக்கப்பட்ட பாடலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், “தஞ்சாவூரு மண்ணு எடுத்து, தாமிரபரணி தண்ணிய விட்டு, சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை, இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை” என்ற பாடலாகும்.
இந்தப் பாடல் நம் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் திரு. எஸ். ஆர். நாதன் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.
அவருடைய இறுதிச்சடங்கிலும் இப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.
சிங்கப்பூரின் நல்லிணக்கத்தின் அடையாளமாகவும், தமிழகத்தில் தம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீகத்தைப் பற்றிய தேடலாகவும் இப்பாடல் அமைந்திருந்ததால் அதை மிகவும் விரும்பிக் கேட்டதாக கவிஞர் வைரமுத்துவிடம் அவரே தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
இப்பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் கவிஞர் வைரமுத்துவோ, பாடலைப் பாடிய எஸ். பி. பாலசுப்ரமணியமோ, சிலையை உருவாக்கும் மட்பாண்டக் கலைஞனோ என் கண்முன் நிற்கவில்லை.
மாணவர்களாகிய எங்களை முழுமையான ஆளுமை வளர்ச்சி பெற்ற மாணவர்களாக, பண்பட்ட, பக்குவப்பட்ட நற்குடிமக்களாக உருவாக்கும் என் பள்ளி ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மட்டுமே கைதேர்ந்த கலைஞர்களாக என் கண்முன் நிற்கிறார்கள்.
பாடலில் இடம்பெற்றுள்ள உயிரற்ற மண்ணுக்கு உருவம் கொடுத்து, உயிர்கொடுத்து சிலையாய் வாழ்விக்கும் கலைஞர்களைப்போல் கல்வியுடன் நற்பண்புகள், நல்ல பழக்கவழக்கங்கள் போன்றவற்றை ஒருங்கிணைத்துக் கற்பிக்கும் வகுப்பாசிரியர்களும் நாட்டு வரலாற்றையும் நல்லிணக்கத்தையும் மாணவர்களின் உள்ளத்தில் நிலைநிறுத்தும் வரலாறு, சமூக அறிவியல் பாடலாசிரியர்களும் சிங்கையின் எதிர்காலத் தலைவர்களாக எங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் கைத்திறன் மிக்க கலைஞர்களாக மிளிர்கின்றனர்.
தலைமைத்துவப் பண்புகள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு, நேர்மை, கட்டொழுங்கு, பணிவன்பு, கல்வியில் கடப்பாடு, விளையாட்டில் ஈடுபாடு போன்ற பண்புநலன்களை ஒவ்வொரு நாளும் போதித்து கண்ணும் கருத்துமாக எங்களை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மொழியாசிரியர்கள் எங்களுக்குத் தாய் மொழிப்பற்றுடன் அறநெறிப்பண்பு, பண்பாடு, பாரம்பரியம், மரபுவழிச் சிந்தனைகளைப் பதியவைத்து எங்களைப் பண்புள்ளவர்களாகப் பண்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல், தாவரவியல், புவியியல் பாடங்களில் அறிவார்ந்த சிந்தனைகளையும் அறிவியல் பார்வையையும் தொலைநோக்குப் பார்வையுடன் கற்றுக்கொடுத்து மெருகூட்டி வருகிறார்கள்.
ஒவ்வோர் ஆசிரியரும் மாணவர்களாகிய எங்களுக்குத் தன்னம்பிக்கை, தாய் மொழிப்பற்று, பண்பாடு, பொறுமை, நிதானம், பிற உயிர்களை நேசிக்கும் தன்மை, தன்னம்பிக்கை, மனவலிமை, கனிவு, நேர்மை, தலைமைத்துவ பண்பு போன்ற பல நற்குணங்களைக் குழைத்துச் சிறந்த குடிமக்கள் என்னும் சிலைகளாக உருவாக்குகின்றனர்.
வைரமுத்து ஒரு கலைஞனின் கைவண்ணத்தை சிலையாக வடித்துப் பாடலாக்கியுள்ளார்.
கலைகள் மிளிரும் சிங்கையில் ஓராயிரம் மாணவர்களை நாளைய தலைவர்களாக மாற்றிக்கொண்டிருக்கும் என் பள்ளி ஒரு சிறந்த கலைக்கூடம், பள்ளி ஆசிரியர்கள் கலைவண்ணம் மிக்க கலைஞர்கள் என்று கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்.