இலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்

சமுதாயத்தில் சிறந்த அங்கீகாரம் தரும் ஒரு குறிப்பிட்ட வேலைக்குத்தான் செல்லவேண்டும் என்று நினைத்து அதற்கான மேற்படிப்பை மேற்கொள்ளும் இளையர்களுக்கு இடையே ஷர்மா நிஹாரிகா, 23, சற்று வித்தியாசமானவர்.

‘ஏ’ நிலை தேர்வுக்குப் பின் தாம் மேற்கொள்ளவேண்டியிருந்த பட்டப் படிப்பை நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்ததாக இவர் கூறுகிறார்.

“எனக்குப் பொருத்தமான பாடத்தைத் தேர்வு செய்வதற்காக சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகம் (எஸ்எம்யு) ஏற்பாடு செய்திருந்த பொது அறிமுக நிகழ்விற்குச் சென்றேன்.

“அங்கு வர்த்தக நிர்வாகத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்வது பற்றி தகவல் அளிக்கும் கூடம் ஒன்றுக்குச் சென்ற பிறகு சட்டத்துறை தொடர்பான கூடத்திற்கு வந்தேன்.

“அந்த நொடியில், சட்டத்துறையின் மீது எனக்கு ஏற்பட்ட திடீர் ஆர்வத்தை இறைவனின் ஆசியாகக் கருதி இந்தத் துறையில் இளநிலை பட்டக்கல்வியை மேற்கொள்ள முடிவெடுத்தேன்,” என்றார் நிஹாரிகா.

இத்துறையில் நான்கு ஆண்டுகால பட்டப்படிப்பை முடித்துள்ள இவர், தாம் கடந்து வந்த பயணத்தைப் பற்றி தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.

சட்டத்துறை குறித்து நூல்களில் படித்ததோடு நின்றுவிடாமல் விடுமுறை நாட்களிலும் இலவச சட்ட ஆலோசனை சேவையை இவர் வழங்கினார்.

“சீனம், மலாய், தமிழ் ஆகிய தாய்மொழிகளில் எனக்குப் பேசத் தெரியாது. எனது தாய்மொழி இந்தி என்பதால் இலவச சட்ட சேவை புரிவதில் நான் பல சிரமங்களைச் சந்தித்தேன்.

“இருப்பினும், தொண்டூழியர்கள், சக வழக்கறிஞர்கள் ஆகியோரின் உதவியுடன் என்னிடம் சட்ட ஆலோசனை பெறுபவர்களின் பிரச்சினைகளைப் பற்றி தெரிந்துகொண்டேன்,” என்றார் நிஹாரிகா.

எஸ்எம்யு மாணவர்கள் இலவச சட்ட சேவை புரிவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்த தனிமனிதர்கள், அமைப்புகள், வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க கடந்த மாதம் 20ஆம் தேதி பாராட்டு விழா ஒன்று நடைபெற்றது.

எஸ்எம்யு வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் சட்ட, சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மூன்று சிறப்பு விருதுகளையும் இவ்வாண்டின் சட்டத்துறை பட்டதாரிகள், தொண்டூழிய சேவை புரிந்த வழக்கறிஞர்கள் ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். சட்டத்துறையில் இவ்வாண்டு இளநிலைப் பட்டப்படிப்பை முடித்த 30 பட்டதாரிகளில் ஒருவரான குமாரி நிஹாரிகா, இலவச சட்ட சேவை வழங்குவதன் மூலம் ஒருவர் பயனுள்ள அனுபவங்களைப் பெறலாம் என்றார்.

பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களிடம் உரையாடி அவர்களது பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு உதவியதில் தமக்கு மனநிறைவு கிடைத்ததாக இவர் குறிப்பிட்டார்.

“சட்டத்துறையைப் பற்றி புத்தகத்தில் தெரிந்துகொள்வதோடு நின்றுவிடாமல் அனுபவபூர்வமாக இச்சேவையைப் புரிவதன் மூலம் சட்டத்துறையின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளலாம்,” என்றார் நிஹாரிகா.

பேச்சாற்றல் திறன் கொண்ட இளையர் வழக்கறிஞரானார்

பேச்சாற்றல் திறன் கொண்ட தேவதாஸ் சத்தியநாதன், 31, சட்டத்துறையில் இன்று பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

‘ராஜா அண்ட் டான்’ சட்ட நிறுவனத்தில் மூத்த நிர்வாகியாகவும் எஸ்எம்யுவில் துணை விரிவுரையாளராகவும் பணியாற்றும் தேவதாஸ், சட்டத் துறையில் நுழைவோம் என தாம் சிறு வயதில் ஒருபோதும் கனவு கண்டதில்லை என்று கூறினார்.

இவர் திட்டமிட்டு இத்துறையில் கால் பதிக்காவிட்டாலும் அதில் நுழைந்த பிறகு தமக்கு கிடைத்த அனுபவங்கள் ஏராளம் என்றார்.

சட்ட சேவையைத் தமது வாழ்வில் ஓர் அங்கமாக்கிக்கொண்டார் இவர்.

எஸ்எம்யுவின் முன்னாள் மாணவரான தேவதாஸ், அப்பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச சட்ட சேவை மையத்தில் வழக்கறிஞராகத் தொண்டூழியம் புரிந்து வருகிறார்.

இந்த மையத்தில் உள்ள வழக்கறிஞர்களிடமிருந்து 20 நிமிடங்களுக்கு மக்கள் சட்ட ஆலோசனையை இலவசமாகப் பெறலாம்.

கடந்த ஓர் ஆண்டு காலமாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவச சட்ட சேவையை வழங்கி வரும் தேவதாஸ், பெரும்பாலானோர் சம்பளப் பிரச்சினைகளால் தமது உதவியை நாடியதாகக் குறிப்பிட்டார்.

“ஊழியர்களுக்குச் சேரவேண்டிய சம்பளத்தை சில முதலாளிகள் பிடித்து வைத்துக்கொள்வதால் அதுகுறித்து ஆலோசனை பெற ஊழியர்கள் என்னிடம் வந்தனர்.

“ஒரு சிலருக்கு பல மாதங்களாகவே சம்பளம் வழங்கப்படவில்லை. தங்களுக்குரிய உரிமைகளை ஊழியர்கள் தெரிந்து வைத்துக்கொள்ளாததால் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண முடியாமல் தவிக்கின்றனர்.

“பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவர்கள் என்னிடம் வரும்போது அவர்களுக்குரிய உரிமைகள் குறித்து எடுத்துரைப்பதுடன் முதலாளிகளுக்கு எதிராக வழக்கு தொடுப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றியும் விவரிப்பேன்.

“இதன் மூலம் அவர்களுக்குத் தெளிவு கிடைப்பதுடன் தங்களுக்குரிய உரிமை குறித்தும் விழிப்புணர்வு கிடைக்கிறது,” என்றார் தேவதாஸ். மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங்கிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுக்கொண்ட 25 வழக்கறிஞர்களில் ஒருவரான தேவதாஸ், சமூக மேம்பாட்டுக்குப் பங்களித்துள்ளது குறித்து தாம் பெருமைகொள்வதாகச் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!