புத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை

சுவீடனைச் சேர்ந்த இளம் பெண் கிரேட்டா தன்பர்க், செப்டம்பர் மாதம் நடந்த ஐக்கிய நாட்டு பருவநிலை மாநாட்டில் அனல் பறக்க உரையாற்றி பருவநிலை விவகாரங்களின் முக்கியத்துவத்தை உலகத் தலைவர்கள் முன்னிலையில் வலியுறுத்தினார்.

ஒரு மாதம் கழித்து, கிட்டத்தட்ட அதே வயதைச் சேர்ந்த சிங்கப்பூர் இளையர் செல்லதுரை கமலினி தனது தோழியுடன் சேர்ந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள் ஒன்றைத் தயாரித்துள்ளார்.

சுற்றுச்சூழலைக் கட்டிக்காக்க எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளில் ஒரு பகுதியாக, பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பையும் பயன்பாட்டையும் குறைக்க உலகமெங்கும் இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்குப் பங்களிக்கும் வகையில் குவீன்ஸ்வே உயர்நிலைப்பள்ளி மாணவியான கமலினி, சக மாணவி கியீ தந்தார் ரெபெக்காவுடன் சேர்ந்து ‘இக்கோ பாக்ஸ்’ என்ற உணவுப் பெட்டி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
வழக்கமான பிளாஸ்டிக் பெட்டி களைப்போல் இல்லாமல் இது மக்கி அழியக்கூடியதாக இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது.
என்றுமே அழியாத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள், அளவுக்கு அதிகமாக தயாரிக்கப்பட்டு உலகெங்கும் குப்பை நிரப்பும் நிலங்களில் குவிகின்றன.

கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 736,400 டன் எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டன. இந்தப் போக்கு தொடர்ந்தால் குப்பை வீசக்கூட இடம் இல்லாமல் போகலாம் என்கிறார் கமலினி. கமலினியும் அவரது தோழியும் இவ்வாண்டின் ‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருதுப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

ஏற்கெனவே அவர்களுக்கு 3,000 வெள்ளி வர்த்தக உதவி நிதி வழங்கப்பட்டிருந்தது. அக்டோபர் 18 முதல் 20ஆம் தேதி வரை நடந்த அந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்த மாணவிகள் முதல் பரிசை வென்றனர்.
இந்தப் புதுவித உணவுப் பெட்டியின் மூடியின்மீது கரண்டி, முள்
கரண்டியைப் பொருத்தலாம். அந்தப் பெட்டியைப்போலவே இவை மறுபயனீடு செய்யக்கூடியவை என்று கமலினி கூறினார்.

இந்த உணவுப் பெட்டியை உணவங்காடிகள், விருந்து நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு மட்டுமின்றி உணவு விநியோகம் செய்வதற்கும் பயன்படுத்தலாம் என்கிறார் கமலினி.

‘எஸ்2 லேப்’, ‘ஸ்பிரிட்டல் சாஃப்ட்வேர்’ ஆகிய நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் முக்கிய பங்காளிகள் என கமலினி குறிப்பிட்டார்.

இந்த உணவுப் பெட்டியைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ‘எஸ் 2 லேப்’ நிறுவனம் வழங்கியதாகவும் உணவுப் பெட்டிக்கான பிரத்தியேக செயலியை ‘ஸ்பிரிட்டல் சாஃப்ட்வேர்’ உருவாக்கியதாகவும் இவர் கூறினார்.
சுற்றுச்சூழல், அறிவியல் மீதான ஆர்வம் இளம் வயதிலிருந்தே மெருகூட்டப்பட்டதாக கூறிய கமலினி, அறிவியல் சார்ந்த பல்வேறு சிறுவர் நிகழ்ச்சிகள் மூலம் அது தூண்டப்பட்டதாக சொன்னார். அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘மித் பஸ்டர்ஸ்’, அறிவியலை எளிதில் புரியும்படி விளக்கியதாக இவர் கூறினார்.

கமலினியின் ஆர்வத்திற்குப் பக்கபலமாக இவரது பெற்றோரும் ஆசிரியர்களும் உள்ளனர்.

“எங்களது இந்த யோசனை அடுத்த நிலையை எட்டும் என்ற நம்பிக்கை கொண்ட எங்களது ஆசிரியர், இதற்குப் பெரிதும் ஊக்கமளித்தார். எனது குடும்பத்தாரும் எனக்குப் பெரிதும் ஆதரவு அளித்தனர்.
“அவர்கள் தந்த யோசனைகள் மூலம் நான் பயனடைந்தேன். என்னுடைய ஆற்றல் மீது எனக்குச் சந்தேகம் ஏற்படும்போதெல்லாம், எனக்கு அவர்கள் உற்சாகம் அளிப்பர். எனது விருப்பங்களுக்கு குறுக்கே அவர்கள் என்றும் நின்றதில்லை,” என்றார் கமலினி.

பருவநிலை மாற்றப் பிரச்சினை தொடர்பில் மக்களிடையே போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுவதில்லை என்பது இவரது கருத்து.
பொருள் தேடும் மக்கள், பூமிக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து யோசிப்பதில்லை என்பது கமலினியின் வருத்தம்.

“குறைவான வளங்கள் படைத்தவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை” என்றார் இவர்.

இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கிரேட்டா தன்பர்க் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முனைப்புடன் போராடுவதைத் தாம் வியந்து பார்ப்பதாக கூறுகிறார் கமலினி.

நீடித்து நிலைத்திருக்கும் சுற்றுப்புறத்தைக் கட்டிக்காப்பதில் சிங்கப்பூர் முயற்சி எடுத்து வருவதை சுட்டிய கமலினி, தாம் பங்கேற்ற இந்தப் போட்டியையும் இத்தகைய முயற்சிகளில் ஒன்றாக கருதுகிறார்.
“உங்களுக்கு இருக்கக்கூடிய திறனை நீங்கள் சந்தேகிக்காதீர்கள். உலக சூழலை மேம்படுத்தும் திட்டம் உங்களுக்கு ஏதேனும் தெரிந்திருந்தால், அதனைச் செயல்படுத்த தயங்காதீர்கள்.

“பூமிக்குச் சிறந்தவற்றை உருவாக்க விரும்பும் இளையர்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.

“நமது சிந்தனைகளை ஒன்றுதிரட்டி பூமியை அனைவரும் வாழ்வதற்குரிய சிறந்த இடமாக மாற்றுவோம்,” என்பதே தன்னைப் போன்ற இளையர்களுக்கு கமலினி கூற விரும்பும் கருத்து.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!