இருளில் உணவு சாப்பிட்டு கண்பார்வையற்றோர் எதிர்நோக்கும் சவால்களை உணர்வுபூர்வமாக அறிவதற்கு இருநூற்றுக்கும் அதிகமான இளையர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
‘டைன் இன் தி டார்க்’ எனப்படும் அந்த நிகழ்ச்சி ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. சிங்கப்பூர் பார்வை குறைபாடுள்ளோருக்கான சங்கத்தி ஆதரவுடன் மக்கள் கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பார்வை குறைபாடு உள்ளவர்கள் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி இளையர்கள் தெரிந்துகொண்டனர்.
கும்மிருட்டான சூழலில் மதிய உணவு சாப்பிட்டு பல்வேறு விளையாட்டுகளில் அவர்கள் ஈடுபட்டனர். இதன் மூலம் தொட்டுணர்வு, நுகர்வு, செவிப்புலன் உள்ளிட்ட மற்ற புலன்களின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டனர்.
‘ஸ்பெகட்டி’, வறுத்த கோழித் துண்டுகள், எலுமிச்சை சாறு பிழியப்பட்ட மீன், இனிப்புப் பதார்த்தங்கள் அடங்கிய மேற்கத்திய உணவு பங்கேற்பாளர்களுக்குப் பரிமாறப்பட்டது. சாப்பாட்டுக்காக அமர்ந்த பிறகுதான் தாங்கள் என்ன சாப்பிடப்போகிறோம் என்பதைப் பங்கேற்பாளர்கள் தெரிந்துகொண்டனர்.
கும்மிருட்டான சூழலில் உணவு விருந்தில் பங்கேற்பது இதுவே முதல்முறை என்று தெரிவித்த ‘லாசெல்’ கலைப்பள்ளி மாணவர் எஸ்.சைஷேத்ரா, கண்பார்வையின்றி இருட்டில் சாப்பிட்ட அனுபவம் முற்றிலும் மாறுபட்டது என்று கூறினார். இருட்டில் சாப்பிட்டபோது தொடக்கத்தில் பயமாக இருந்ததாக கூறிய அவர், என்ன சாப்பிடு கிறோம் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருந்ததாகக் கூறினார்.
இத்தகைய ஓர் அனுபவம் கிடைத்திருக்காவிட்டால், பார்வை குறைபாடு உள்ளோருக்கு அனுதாபப்படுவதைத் தவிர, அவர்களது சிரமத்தை இவ்வளவு நுட்பமாகப் புரிந்துகொள்ள முடியாது என்றார் அவர்.
பார்வை குறைபாடு உடையோர் அன்றாடம் எதிர்நோக்கும் சவால்களை உணர்வுபூர்வமாக எடுத்துக்காட்டும் விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் இந்நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டன.
கண்கள் கட்டப்பட்ட நிலையில் ‘டிக் டெக் டோ’ விளையாடுவது, ஊசிக்குள் நூலை நுழைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்பாளர்கள் ஈடுபட்டனர்.
இந்நிகழச்சியை வழிநடத்தியவர்களில் ஒருவரான ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மதுமிதா ராஜேந்திரன், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய மூன்று மாதங்கள் ஆனதாக கூறினார்.
“ஒவ்வொரு நடவடிக்கையிலும் சிரமங்கள் அதிகரிக்கும்போது, கண்பார்வையின் அருமையை பங்கேற்பாளர்கள் மேலும் உணர்கின்றனர்.
“பார்வையற்றவர்கள் சந்திக்கும் துன்பங்களை உணர்வதாகவும் அவர்கள் கூறினர்,” என்றார் மதுமிதா, 19.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் 14க்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ஆதரவு வழங்கி அவர்களது அன்றாட சவால்களைப் பற்றிய விழிப்புணர்வை இளையர்களிடையே அதிகரிப்பது இந்நிகழ்ச்சியின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவத் தொண்டூழியர்களுக்கு சிங்கப்பூர் பார்வை குறைபாடுள்ளோருக்கான சங்கம் இலவசமாக பயிற்சி வழங்கியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு கூறியது. செம்பவாங் குழுத்தொகுதி அடித்தள ஆலோசகர்களான போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானும் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயரும் நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
பங்கேற்பாளர்களுடன் சேர்ந்து அவர்களும் இருளில் உணவு சாப்பிட்டனர்.
இளையர்களே இளையர்களுக்காக முன்னெடுத்துள்ள இந்த முயற்சி குறித்து தாம் ஊக்கமடைவதாக திரு விக்ரம் தெரிவித்தார். “பார்வை குறைபாடு உடையோர் எதிர்நோக்கும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. “அதைவிட முக்கியமாக, சிங்கப்பூரர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இளையர்களுக்குப் பெரும் பங்கு இருப்பதாக இது காட்டுகிறது,” என்று திரு விக்ரம் கூறினார்.