வைதேகி ஆறுமுகம்
கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கும் வாழ்க்கை பாதையைச் சீர்படுத்திக்கொள்வதற்கும் பதின்ம வயது பருவம் ஒரு முக்கிய காலகட்டம்.
ஆனால், ஆரம்பத்திலிருந்தே கல்வி கற்பதில் ஜேய்டன் ஆர்வம் காட்டியதில்லை. அதுவும், உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றதும் கல்வி மீது அவருக்கு முற்றிலும் விருப்பமில்லாமல் போனது.
தொடக்கப்பள்ளியில் பயின்றபோது கிடைத்த அதே தீய நண்பர்கள் உடனான நட்பு தொடர்ந்ததால் அவர்களது தாக்கத்தினால் 16 வயதிலேயே ஜேய்டன் குண்டர் கும்பலில் சேர்ந்தார்.
தமக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளவும் நட்பு வட்டத்தை விரிவுபடுத்திக் கொள்ளவும் குண்டர் கும்பலில் சேர்ந்த அவர், விரைவில் மதுபானம், கேளிக்கைக் கூடம், போதைப் பொருள் உட்கொள்ளுதல் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையானார். சண்டை சச்சரவிலும் ஈடுபட்டார்.
குண்டர் கும்பலில் ஜேய்டன் ஈடுபட்டது அவரது குடும்பத்தினருக்குத் தெரிந்தாலும் அவர்களால் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அதன் விளைவாக இருமுறை சீர்திருத்த பயிற்சி நிலையத்திற்குச் சென்ற ஜேய்டன், 22 வயதில் அங்கிருந்து வெளியேறினார்.
அங்கு அவருக்கு கிடைத்த அனுபவம் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
தமது இளமைப் பருவம் பாதிப்படைந்ததை எண்ணி பெரிதும் வருந்திய அவர், இனிவரும் காலகட்டத்தில் தம்மை மேம்படுத்திக்கொள்வதற்கான முயற்சிகளைக் கையில் எடுத்தார்.
“நினைத்த நேரத்தில் நினைத்தவற்றை செய்வதற்கு சீர்திருத்த பயிற்சி நிலையத்தில் சுதந்திரம் கொடுக்கப்படாது.
“அங்கு கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும். தனிமையில் வாடிய எனக்கு புத்தகங்கள் வாசித்தது கைகொடுத்தது. அங்கு இருந்த நாட்களில் ஏராளமான புத்தகங்களைப் படித்து எனது பொது அறிவை வளர்த்துக்கொண்டேன்,” என்றார் ஜேய்டன், 29.
கட்டுமானத் துறையில் பணிபுரிய அதிக தேவை இருந்ததால் சீர்திருத்தப் பயிற்சி முடிந்ததும் மூன்று ஆண்டுகளுக்கு கட்டுமானப் பொறியியல் பட்டயக்கல்வியைப் பயின்றார் அவர்.
அதன் பின் மேற்கல்விக்காக சிம் ‘குளோபல் எடுகேஷன்’ கழகத்தில் கட்டுமான நிர்வாக துறையில் அவர் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
சட்ட துறையில் ஆர்வம் கொண்டுள்ள ஜேய்டன், தற்போது சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் அத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
“தொடக்கத்தில் சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களிடம் சகஜமாக பேசுவதற்கு நான் தயங்கினேன்.
“ஆனால், என் வாழ்க்கையை நல்வழிப்படுத்தவேண்டும் என்ற வைராக்கியம் எனக்கு துணிச்சலைத் தந்துள்ளது,” என்று கூறினார் ஜேய்டன்.
இவர் தற்போது மற்ற இளையர்களுக்கு ஒரு முன்மாதிரி மனிதராக திகழ்கிறார்.
இவரைப்போல மற்ற இளையர்களும் குண்டர் கும்பலில் சேர்ந்து பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு ‘அனைவரும் தப்பிக்கலாம்’ எனும் இரண்டு நாள் முகாமை போலிஸ் நடத்தியது.
உபின் தீவில் கடந்த மாதம் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த முகாம், எளிதில் அபாயத்துக்குள்ளாகும் இளையர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
12வது முறையாக நடத்தப்பட்ட இம்முகாமில் 13க்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 17 இளையர்கள் பங்கேற்றனர்.
குண்டர் கும்பலில் சேருவதனால் விளையக்கூடும் ஆபத்துகளைப் பற்றிய விழிப்புணர்வை இளையர்களுக்கு ஏற்படுத்துவதே இம்முகாமின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இளையர்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிப்பது, குழுவாக சேர்ந்து பணியாற்றுவது, நடந்த சம்பவங்களைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பது போன்றவற்றை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் ஜேய்டன் சிறப்புரை ஆற்றினார்.
குண்டர் கும்பலில் சேர்ந்ததால் தமது வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதையும் பின்னர் எவ்வாறு அதிலிருந்து விடுபட்டு தமது வாழ்க்கையைச் சரிசெய்து, முன்னேற்றம் அடைந்த பாதையையும் அவர் இளையர்களிடம் பகிர்ந்துகொண்டார்.