‘பருவத்திற்கேற்ப பயிர் செய்’ என்ற விவசாய உவமை, திருமணத்திற்கும் பொருந்தும். பெற்றோர் மட்டுமின்றி சமூகப் பங்காளிகளும் இளையர்களை உரிய வயதிற்குள் திருமணப் பந்தத்தில் இணைத்து வைக்கலாம்.
இந்திய இளையர்களிடையே திருமணத்தையும் குடும்ப வாழ்க்கையையும் ஊக்குவிக்க ‘எஸ்டிஎன்’ எனப்படும் சமூக மேம்பாட்டுக் கட்டமைப்பு, சமூகப் பங்காளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதே நேரத்தில், மற்றவர்களைச் சந்தித்துப் பழக இளையர்களுக்கு அவர்களது குடும்பத்தார் ஆதரவு கொடுத்தால் இந்த முயற்சிகளால் அதிகமானோர் பயனடைவர் என்றார் சமூக மேம்பாட்டுக் கட்டமைப்பின் இணைத் தலைவர் பிரகாஷ் சோமசுந்தரம், 42.
ஒற்றையர்களுக்கு வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்கான வாய்ப்புகளை இந்த அமைப்பு உருவாக்கித் தருகிறது.
இதன் தொடர்பிலான நிதித் திட்டம் ஒன்றை அது ஈராண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. தற்போது சோதனைக் கட்டத்தில் உள்ள இத்திட்டத்தில், சிங்கப்பூர் விளையாட்டு மையம் உள்ளிட்ட சில அமைப்புகள் பங்காளிகளாகச் சேர்ந்துள்ளன.
சிங்கப்பூரில் குழந்தைப் பிறப்பு விகிதமும் தம்பதியில் குறைந்தது ஒருவராவது சிங்கப்பூரராக இருக்கும் திருமணங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு சற்று குறைந்ததாக கடந்த மாதம் வெளியிடப்பட்ட மக்கள்தொகை அறிக்கை ஒன்று தெரிவித்தது.
இதில், 25க்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட 69.4 விழுக்காட்டு பெண்களுக்கும் 80.6 விழுக்காட்டு ஆண்களுக்கும் திருமணமாகவில்லை.
இருந்தபோதும், முந்தைய ஐந்து ஆண்டு காலகட்டத்துடன் ஒப்புநோக்க, கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூரர்கள் அதிகமானோர் திருமணம் செய்வதை அரசாங்க புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அதே காலகட்டத்தில் குழந்தைப் பிறப்பு விகிதமும் அதிகரித்தது.
“இந்தப் போக்கு எங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. சிங்கப்பூரர்கள் பலருக்கும் திருமணம் செய்யும் விருப்பம் உள்ளது,” என்றார் திரு பிரகாஷ். ஆயினும், இன்றைய இளையர்கள் பலர் தங்களது வேலையைப் பற்றி அதிகம் கவலைப்படுவதாக அவர் கூறினார். வேலையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் பலருக்கு, வாழ்க்கைத் துணையைத் தேடுவது மிகவும் சவாலாக உள்ளதை அவர் சுட்டினார்.
வாழ்க்கை நிலவரம் இப்படி இருக்க, ஒற்றையர்கள் ஒருவரோடு ஒருவர் பழகு வதற்கான வாய்ப்பை வழங்க சமூக மேம்பாட்டுக் கட்டமைப்பு முற்படுகிறது.
“இந்த நடவடிக்கைகள் மூலம் இவர்களுக்கு ஊக்கம் கொடுக்க நாங்கள் விரும்புகிறோம். வாழ்க்கையில் நமது இலக்குகளைத் திருமண பந்தம் என்றுமே திசை திருப்பாது; மாறாக அது கைகொ டுக்கும் என்பதை வலியுறுத்துகிறோம்,” என்றார் அவர்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் சமூக மேம்பாட்டுக் கட்டமைப்பு, ஒற்றையர்கள் பழக ஊக்குவிக்க ‘டேட்டிங்’ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.இந்தக் கட்டமைப்புக்கு முன்பிருந்த சமூக மேம்பாட்டுப் பிரிவு 1984ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இப்போது இந்தக் கட்டமைப்பின் சேவைகள், கல்வி நிலை பாராது அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் இந்திய இளையர்கள் பயனடைய, அவர்களது மனப்போக்கில் மாற்றம் தேவைப்படுவதாக திரு பிரகாஷ் கூறினார்.
“வாழ்க்கைத் துணையைத் தேடும்போது விளையாட்டுத்தனம் இல்லாமல் சற்று பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பது என் கருத்து. காதல் உறவுகள் வெறும் பொழுதுபோக்கிற்காக அல்ல.
“வாழ்வின் ஏற்றத்தாழ்வில் தம்முடன் சேர்ந்து பயணம் செய்யக்கூடியவரைத் தேடுவது பற்றியது. இதில் பல விஷயங்கள் ஒத்துப்போக வேண்டியுள்ளது,” என்றார் அவர்.
தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் மட்டுமின்றி புதியவர்களுடனும் பழகும்போது அவர்களது நட்பு வட்டம் விரிவடைகிறது என்றார் திரு பிரகாஷ்.
“இந்திய இளையர்கள் சமூக சூழல்களில் இன்னமும் வெட்கப்படுவதை நாங்கள் காண்கிறோம். அவர்களுக்குப் பல நல்ல யோசனைகள் இருந்தபோதும் அவர்கள் பேசத் தயங்குகின்றனர். அவ்வாறு தயங்கும்போது மற்றவர்களுடன் பிணைப்பை ஏற்படுத்துவது சிரமம்,” என்று அவர் கூறினார்.
இளையர்களுக்கு அவர்களின் குடும்பத்தார் ஆதரவு கொடுத்தால் இந்த முயற்சி களால் அதிகமானோர் பயனடைவர் என்று அவர் கூறினார்.
“பெற்றோர் மனந்திறந்து இது பற்றி இன்னும் முன்கூட்டியே பேசத் தொடங்கினால் அது ஆரோக்கியமான உறவுகளை வளர்க்கும் மனப்பான்மையை இளையர்களிடையே ஏற்படுத்தும். ஆரம்ப கட்டத்திலேயே பெற்றோர் ஈடுபாடு காட்டினால் இளையர்கள் வெளிப்படையாக நடந்துகொள்வர்,” என்பது அவரது கருத்து.
‘டேட்டிங்’ சேவைகளை இந்தியச் சமூகம் திறந்த மனப்போக்குடன் வரவேற்றால் இளையர்கள் காலம் தாழ்த்தாமல் இதில் ஈடுபடுவர் என்றார் அவர்.
2017ஆம் ஆண்டில் ‘ஸ்பார்க் கனெக்ஷன்ஸ்’ என்ற திட்டத்தை ஒற்றையர்களுக்காக சமூக மேம்பாட்டுக் கட்டமைப்பு தொடங்கியது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் இத்திட்டத்தில், சமையல் வகுப்புகள், விளையாட்டுகள், கலைப்பொருட்களைச் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறும்.
“இவற்றில் பங்கேற்க இளையர்களுக்கு 100 விழுக்காடு விலைக்கழிவு கொடுக்கப்படும், இந்தச் சலுகையைப் பயன்படுத்தி பயனடைய நான் இளையர்களை ஊக்குவிக்கிறேன். குழுக்களாகச் சேர்ந்து அவர்கள் இவற்றில் பங்கேற்கலாம். இதனால் அவர்களது வெட்கம் குறையும்,” என்றார் திரு பிரகாஷ்.
“கலைப்பொருட்கள், இசை வகுப்புகள் அல்லது சொகுசு கப்பல் பயணம் போன்ற உல்லாசப் பயணங்கள் ஆகியவற்றின் வழி பங்கேற்பாளர்கள் ஒருவரோடு ஒருவர் உறவாடி, புதிய திறனைக் கற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கலாம்.
“இது எங்களால் தனித்து செய்ய முடியாது. பல்வேறு பங்காளிகள், ஆண்களும் பெண்களும் ஒருவரோடு ஒருவர் பழகுவதற்கான நிகழ்ச்சிகளை நடத்துவர். இதனுடன் ஒத்துப்போகும் விதமாக சுய அழகைப் பராமரிப்பது, இங்கிதத்துடன் நடந்துகொள்வது எப்படி உள்ளிட்டவற்றைக் கற்பிற்கும் வகுப்புகளை அந்த அமைப்புகள் நடத்துகின்றன,” என்றார் அவர்.
“வாழ்க்கைத் துணைகளுக்கான தேடுதளத்தை உருவாக்க விரும்புவோரும் எங்களை அணுகலாம். அவர்களுக்கு பயிற்சி வழங்கி, தங்களது முயற்சிகளை எப்படி வர்த்தகமாக்குவது என்பது தொடர்பான ஆலோசனைகளை நாங்கள் வழங்குவோம்,” என்றார் அவர்.