‘சிங்கே’யில் ஆடும் அலைகள்

அலங்கரிக்கப்பட்ட பெரிய அன்னப் பறவை மிதவையில், கடலலையைப் பிரதிபலிக்கும் வெள்ளை, நீல நிறங்களில் உடையணிந்த நடனக் கலைஞர்களின் அசைவுகளுக்கு ஏற்ப வண்ணத் துணிகளும் விளக்குகளும் காற்றில் அசைந்தாடும்போது, வண்ணங்கள் கொண்ட அலைகள் காற்றில் துள்ளி எழுவது போலிருந்தன.

பாகுபலி திரைப்படத்தின் பிரபலமான காற்றில் பறக்கும் அன்னப் பறவைக் கப்பலும் அழகிய நடனத்தையும் நினைவூட்டும் ‘கடலலைகள்’ நடனத்தை இந்த ஆண்டு சிங்கே ஊர்வலத்தில் படைக்கின்றனர் மக்கள் கழக இந்திய நடனக் குழுவினர்.

15 வயதில் சிங்கே அணிவகுப்பில் திரு மணிமாறன் குழுவினருடன் நடனமாடிய திரு சுரேந்திரன் ராஜேந்திரன் இந்த ஆண்டின் பிரம்மாண்ட நடனத்தை வடிவமைத்து, இயக்கி வருகிறார்.

“சிங்கப்பூரைச் சுற்றிக் கடல் இருப்பதால் கடல் நமது அடையாளத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. எனவே எங்களது நடனம் கடல் அலைகள் பற்றியதாக இருக்கும்,” என்றார் மணிமாறன் கிரியேஷன்ஸ் நடனக்குழுவைச் சேர்ந்த சுரேந்திரன்.

காலஞ்சென்ற பிரபல உள்ளூர் நடனக் கலைஞர் மணிமாறன் துரைசாமியின் மாணவரான 33 வயது சுரேந்தினர், தம் குருவின் வழியில் சிங்கே ஊர்வலத்தின் மக்கள் கழக இந்திய நடனக் குழுவின் (PA Talents Indian Dance Ensemble) இணை நடன அமைப்பாளராகி உள்ளார்.

இம்மாதம் 31ஆம் தேதியும் பிப்ரவரி 1ஆம் தேதியும் நடைபெறவுள்ள சிங்கே ஊர்வலத்தின் கருப்பொருள் ‘நல்லிணக்கத்தில் வண்ணங்கள்’. அதற்கேற்ற விதத்தில் வண்ணத் துணிகளை அசைத்து விறுவிறுப்பான கடலலைகள் நடனத்தைப் படைக்கிறது இவரது குழு.

நடனப் பயிற்சி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியதாகக் கூறிய சுரேந்திரன், ஒத்திகை இம்மாதம் இறுதிக்குள் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.

சிறு வயதில் திரைப்பட நடனங்களைப் பார்த்து நடனத்தில் ஆர்வம் கொண்டதாகக் கூறிய சுரேந்திரன், பாலர் பள்ளியிலும் தொடக்கப்பள்ளியிலும் நடன நிகழ்ச்சிகளில் ஆடியுள்ளார். பின் நடன ஆர்வலர் குழுவில் சேர்ந்த அவர், பரதநாட்டியத்தை முறைப்படி பயின்று நடனத் திறனை மெருகேற்றிக்கொண்டார்.

நடன அமைப்பு, ஆடை வடிவமைப்பு போன்றவற்றில் திரு மணிமாறனுடன் இணைந்து பணியாற்றியதுடன், அவர் குழுவில் புதிய கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தார்.

நடனங்களில் வியப்பூட்டும் அங்கங்களைச் சேர்ப்பதும் வேகமான அசைவுகளும் திரு மணிமாறனின் நடன அமைப்புகளின் தனித்தன்மை எனக் கூறிய சுரேந்திரன், தமது நடனங்களிலும் இதனைக் காணலாம் என்றார்.

“நடன வடிவமைப்பாளராக கூடுதல் கட்டுக்கோப்பும் குழு உணர்வும் தேவை. மேலும் முழு நடனத்தையும் மனதில் முன்னதாகவே உருவாக்கி, பின் அதனைக் கலைஞர்களுக்குச் சொல்லித்தர வேண்டும்,” என்று நடன அமைப்பாளராக தமது பொறுப்புகள் பற்றி அவர் கூறினார்.

அக்ஷயா திருவின் விறுவிறுப்பான இசை, நடனத்திற்கு உற்சாகமூட்டும். உருவாக்கப்பட்டுள்ள நடன ஆடைகள் கடலுடன் சம்பந்தப்பட்டவை என்றும் அவர் கூறினார்.

“மேடை நடனத்திற்கும் ஊர்வல நடனத்திற்கும் வேறுபாடு உண்டு. ஆடிக்கொண்டே மிதவைகளுடன் நடந்துபோவது சிலருக்குச் சிரமமாக இருக்கும். எவரும் பின்தங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

“மேலும், நடனக் கலைஞர்களின் திறன்களுக்கு ஏற்ப நடன அசைவுகளை அமைக்க வேண்டும்,” என்று சிங்கே நடன அமைப்பில் தமது அனுபவம் பற்றி கூறினார். தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை பங்குபெறும் இந்நடனத்தில் ‘லவிங் ஹார்ட்ஸ்’ சங்கத்தின் திறன் குறைபாடு உள்ளோரும் இடம்பெறுகின்றனர்.

அதிகமான ஆடவர்கள் நடனக் குழுவில் இடம்பெற வேண்டும் என்பது சுரேந்திரனின் விருப்பம்.

“பொதுவாக இந்திய ஆண்கள் நடனம் ஆடுவதற்கு எதிரான மனப்போக்கு இன்னும் சமூகத்தில் உள்ளது. நடன ஆர்வத்தால் நான் படிப்பில் பின்தங்கிவிடுவேனோ என்று என் பெற்றோர் முதலில் எண்ணினர். இந்த மனப்போக்கு மாற வேண்டும்,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!