வீட்டிலிருந்தபடி கல்வி கற்கும் மாணவர்களைத் துணைப்பாட ஆசிரியர்களுடன் இணைக்கும் கைபேசி செயலி ஒன்று அறிமுகம் கண்டுள்ளது. சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனத்துடன் இணைந்து இலவச சந்தா திட்டத்தை மாணவர்களுக்கு அது வழங்கவுள்ளது.
வீட்டிலிருந்தவாறு கற்கும் மாணவர்களுக்கு துணைப்பாடச் சேவைகளை வழங்கும் 'ஸ்னேப்ஆஸ்க்' என்ற அந்தச் செயலி, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகளையும் வழங்குகிறது.
நாளை மறுதினம் (ஏப்ரல் 15) வரை விண்ணப்பிக்கும் முதல் 1,000 மாணவர்களுக்கு இச்சேவை இலவசமாக வழங்கப்படும்.
இச்சேவையின் தொடக்கமாக 10 முதல் 15 மணி நேரம் வரையிலான 30 துணைப்பாட வகுப்புகள் நடத்தப்படுவதோடு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இணையப்பக்கம் அல்லது அதன் செயலியில் செய்திகளை இலவசமாகப் படிக்கும் வாய்ப்பும் வழங்கப்படும். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் துணைப்பாட ஆசிரியர்களாக இருப்பர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் விருதுபெற்ற 'ஸ்கூல்ஸ்' பிரிவின் கற்றல் நிபுணர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்கள் அடங்கிய குழுவினருடன் இணைந்து பணியாற்றி 'ஸ்னேப்ஆஸ்க்' செய்திகளைத் தேர்ந்தெடுக்கும்.
கொரோனா கிருமி பரவலை முறியடிப்பதற்கான திட்டத்தின்படி இம்மாதம் 4ஆம் தேதிவரை 500,000க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்குச் செல்லமுடியாத இந்நேரத்தில் இந்தப் புதிய கூட்டு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
"கிருமி பரவலை எதிர்கொள்வதற்கு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன், இந்தக் காலகட்டத்தில் இணையம்வழி கல்வி வழங்குவதற்கான புதிய தரநிலை அறிமுகம் காணும்," என்று 'ஸ்னேப்ஆஸ்க்' நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான திமத்தி யூ தெரிவித்தார்.
"மக்களிடையே பாதுகாப்பான இடைவெளியைப் கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
பள்ளிகள் மூடப்பட்டு, துணைப்பாட வகுப்புகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. கற்றலுக்கு உகந்த வழிகளை ஏற்படுத்தித் தருவது முக்கியம்.
"மாணவர்களும் கல்வியாளர்களும் எங்கிருந்தாலும், 'ஸ்னேப்ஆஸ்க்' செயலியை அவர்கள் பயன்படுத்தி பலனடைவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்," என்று எஸ்பிஎச் பள்ளிகள் பிரிவுத் தலைவர் லிடியா லிம் கூறினார்.
https://start.snapask.com/st என்ற இணையத்தளத்தின் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

