மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்கும் 19 வயது தொழிற்கல்விக் கழக மாணவி ஷபிரா அகமது கனி (படம்), இதனால் பாடங்கள் சுவையாகவும் மேலும் பயனளிக்கக்கூடிய விதத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்தாண்டு சிங்கப்பூரின் பல்வேறு கல்வி நிலையங்களில் மெய்நிகர் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ரசாயன பதனீட்டு ஆலையில் கருவிகளைப் பயன்படுத்தும் உணர்வை ஷபிரா போன்ற மாணவர்கள் வகுப்பில் இருந்தவாறே பெற முடிகிறது.
ஆரம்பத்தில் தாதியர் படிப்பில் சேர விரும்பிய ஷபிரா, தமது நண்பரின் மூலம் இந்தப் பயிற்சித் திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு ரசாயனத் துறையில் படிக்க முடிவு செய்ததாகத் தெரிவித்தார். ஜனவரி தொடக்கத்திலேயே தொடங்கிய தம் கற்றல் பயணத்தின் மூன்றாவது வாரத்திலேயே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக அவர் கூறினார். புத்தகங்களின் வழியாக மட்டும் கற்காமல் எதிர்கால வேலையிடச் சூழலை இத்தொழில்நுட்பம் வகுப்பறையிலேயே பெறச் செய்தது சுவாரசியமான அனுபவம் என்றார் ஷபிரா.
"நான் ரசாயன ஆலைக்கு சென்றதில்லை. அங்கு என்னென்ன கருவிகள் உள்ளன, அவை எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன, அவற்றை முறையாக இயக்குவது எப்படி என்பதை இந்த வகுப்பு, 'ஏஆர்/விஆர்' தொழில்நுட்பம் வழியாகக் காட்டுகிறது.
"இனிமேல் நேரடியாக ஆலைக்குச் சென்றாலும் அது எனக்கு ஒன்றும் புதிதல்ல," என்று அவர் கூறினார். ரசாயனப் பதனீட்டுக் கருவிகளைப் பயன்படுத்துவதில் அபாயங்கள் இருப்பதால் அதனைப் பயன்படுத்தக் கற்கத் தொடங்குபவர் நெருக்கடியான சூழலில் முழுக் கவனத்துடன் இயங்கப் பழகிக்கொள்ள வேண்டும். ஆனால் மெய்நிகர் தொழில்நுட்பச் சூழலில் இத்தகைய நெருக்கடிகள் இல்லை என்று இந்த மாணவி கூறுகிறார். "ஆர்வமூட்டும் ஒரு காணொளி விளையாட்டு போல இருந்தது," என்றார் ஷபிரா. தற்போது நிலவும் கொவிட்-19 கிருமிப் பரவலால் வீட்டில் இந்த வசதியைப் பயன்படுத்தத் தம்மால் இயலவில்லை. இணையத்தின்வழியாக நடத்தப்படும் வகுப்புகள் தொடர்வதாகக் கூறிய ஷபிரா, மீண்டும் மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குப் பள்ளிக்குச் செல்ல ஆவலாக இருப்பதாகக் கூறினார். பக்கத்தில் ஆசிரியர்கள் இன்றி தற்போது வீட்டிலேயே கற்றுக்கொள்வதால் பாடங்களைப் புரிந்துகொள்வதற்கு ஆரம்பத்தில் சற்று சிரமத்தை எதிர்நோக்கியதாக வெளிப்படையாகக் கூறு கிறார். ஷபிரா, வருங்காலத்தில் ரசாயனப் பொறியாளராக விரும்புவதாகக் கூறினார்.

