கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் நடப்பில் உள்ள நிலையில் தங்கள் நண்பர்களைச் சந்தித்துக் கேளிக்கை கூடங்களுக்கு சென்று பாடல்களை ரசிக்க முடியாமல் தவிக்கின்றனர் சில இளையர்கள். இவர்களை மகிழ்விப்பதை தம் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் 'டீஜே எஷர்' என்னும் அஷ்விந்தர் சிங். இளையர்கள் இவரது இன்ஸ்டகிராம் பக்கத்திற்குச் சென்று தங்களுக்கு விருப்பமான பாடல்களைக் கேட்டு மகிழ்வதுடன் இவரின் உற்சாகமளிக்கும் இசைத்தொகுப்பையும் கேட்டு ரசிக்கின்றனர். அஷ்வின், நேரலை வழியாகப் பாடல்களை இசைப்பது மட்டுமின்றி தன்னுடன் இணைந்திருக்கும் இஸ்டகிராம் இணையவாசிகளுடன் உரையாடியும் மகிழ்கிறார்.
இவ்வாறு அனைவரும் ஒன்றுகூடுவது போன்ற சூழல் உருவாகிறது. ஒருவரோடு ஒருவர் உரையாடுவதாலும் பாட்டை ரசிப்பதாலும் அனைவரின் தனிமை உணர்வு குறைவதாக அஷ்வின் கூறினார்.
"அரசாங்கக் கட்டுப்பாடுகளைப் பற்றி அதிருப்தி வெளிப்படுத்துவற்கான நேரம் இதுவல்ல. நோய்ப் பரவலை முறியடிக்க அரசாங்கம் கடுமையாகப் போராடுகிறது. வீட்டில் பாதுகாப்புடன் இருப்பது நாம் ஆற்றக்கூடிய குறைந்தபட்ச பங்கு என்பதை இளையர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்," என்றார் அவர்.
"நாம் சிறு பிள்ளைகளாக இருந்தபோது, சொற்பமான விளையாட்டுப் பொருட்களைக் கொண்டு உல்லாசமாகப் பொழுதைக் கழித்தோம். அதுபோலவே விரக்தியடையாமல் வீட்டில் இருக்கக்கூடியவற்றைப் பயன்படுத்தி நாம் நம்மை மகிழ்வித்துக்கொள்ள வேண்டும்," என்றார்.
தனது பணிக்காகப் பலர் சமூக ஊடகங்களின் வாயிலாகத் தெரிவிக்கும் பாராட்டுகள் இதைத் தொடர்ந்து செய்ய தனக்கு ஊக்கமளிப்பதாக அவர் சொன்னார். தற்போது கலைப்பள்ளி ஒன்றின் நிர்வாகியாகப் பணிபுரியும் அஷ்வின், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இதைப் பொழுதுபோக்கிற்காக செய்து வருகிறார். அஷ்வின் இளையர் செவிகளுக்கு இசை விருந்து படைக்க, 'அப்சராஸ் ஆர்ட்ஸ் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் முன்னிலை ஊழியர்களுக்காக ஒரு நடனப் படைப்பை அர்ப்பணித்துள்ளது.
அதில் குழலோசைக்கு ஏற்ப நான்கு நடனமணிகள் ஆடியவாறு தங்களின் ஆரோக்கியத்திற்குக் காரணமானவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அத்துடன் உடல்நலமில்லாதவர்கள் குணமடைந்துவிட வேண்டும் என்றும் தங்கள் நடனப் படைப்பில் காட்டியுள்ளனர். இந்நடன நிறுவனம் அதன் யூடியூப் பக்கத்தில் மேலும் பல காணொளிகளைப் பதிவேற்றம் செய்துள்ளது. அவற்றை வீட்டில் இருந்தவாறு நீங்கள் கண்டு ரசிக்கலாமே!
கூடுதல் செய்தி: கி. ஜனார்த்தனன்

