சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளின் கற்றல் தேவைகளை அறிந்து நிறைவு செய்வது வகுப்பு சூழலிலும் கல்வியாளர்களுக்கு எளிமையானதன்று. கொவிட்-19 நோய்ப் பரவலின்போது அவரவர் வீடுகளில் இருக்கும் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் கூடுதல் சவாலை எதிர்நோக்குகிறார் 33 வயது ரேச்சல் மெக்டலின்.
மன இறுக்கம், ADHD, ASD, எஸ்பர்ஜர்ஸ் சிண்ட்ரம், முடக்குவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ள இளம் பிள்ளைகைளுக்குக் கடந்த எட்டு ஆண்டுகளாகப் பாடம் கற்பிற்கும் ரேச்சல், தற்போது வீட்டிலிருந்தே இந்தப் பணியை மேற்கொள்கிறார். 'டைனாமிக்ஸ்' கல்வி நிலையத்தில் பணியாற்றும் அவர், கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்ட நடவடிக்கைகளின் செயல்பாடுகளுக்கு முன்னதாகவே முன்னேற்பாடுகள் பல்வேறு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"ஜனவரி மாதத்தின்போதே பெற்றோர் பலர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயங்க ஆரம்பித்தனர். ஒரு சிலருக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கொடுக்கப்பட்டிருந்தது. எனவே எங்கள் பள்ளி நிர்வாகத்தினர் இதனை முன்கூட்டியே கவனித்து அதற்கான முன்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்," என்று திருமதி ரேச்சல் கூறினார்.
வெள்ளம் வரும் முன் அணை போட வேண்டும் என்ற பொன்மொழிக்கு ஏற்ப, இதனைச் சமாளிக்க உதவியது அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே என்றார் திருமதி ரேச்சல். மாணவர்கள் அனைவருக்கும் மொழி, கணக்கு தொடர்பான எளிமையான பயிற்சித்தாட்களும் பெற்றோருக்கான கற்பித்தல் வழிமுறைகளைக் கொண்டுள்ள குறிப்புககளையும் உள்ளடக்கிய கோப்புகள் கடந்த மாதம் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறிய திருமதி ரேச்சல், அவற்றின் மூலமாகத்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டுவதாகத் தெரிவித்தார். அத்துடன், இவற்றுக்கு அப்பாற்பட்டும் பெற்றோருக்குக் கல்வி நிலையம், பாடத்தட்களை மின்னஞ்சல் வழி அனுப்புகிறது.
தாம் கற்பிக்கும் எட்டு மாணவர்கள் தங்களின் திறனுக்கேற்ற பயிற்சித்தாட்கள் முன்கூட்டியே கொடுக்கப்பட்டதாக திருமதி ரேச்சல் தெரிவித்தார.
"வழக்கமான பள்ளி மாணவர்களைப் போல நான் இந்தப் பிள்ளைகளுடன் காணொளி சேவைகள் வழியாக உரையாடுவதில்லை. எனவே இது மாறுபட்ட இல்லம் சார்ந்த கற்றல். எங்கள் நிலைய ஆசிரியர்கள் மாணவர்களுடன் வாரத்திற்கு ஒரு நாள் தொலைபேசி வழியாக உரையாடுவது வழக்கம்," என்று தெரிவித்தார். ஏட்டுக் கல்வி மட்டுமின்றி வண்ணம் தீட்டுதல், தொடர்புத்திறன் ஆகியவற்றையும் 'டைனாமிக்ஸ்' கல்வி நிலையம் வலியுறுத்துகிறது.
இந்தக் கற்பித்தலில் முன்கூட்டிய திட்டமிடுதல் அவசியம் என்றாலும் பிள்ளைகளின் ஆர்வத்தையும் கவனத்தையும் வசப்படுத்த நீக்குப்போக்கும் அவசியம் என்று திருமதி ரேச்சல் தெரிவித்தார். "வெவ்வேறு வேலை நேரங்களைக் கொண்டுள்ள பெற்றோரின் நேர அட்டவணைக்கு ஈடு கொடுக்கும் வகையில் பிள்ளைகளின் பாடங்களைத் திட்டமிட்டு அவர்களுடன் தாம் கலந்துரையாடுவதாக இவர் கூறுகிறார்.
தொடக்கம் முதல் தாம் கற்பிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களுடன் வளர்த்த அணுக்கமும் தொடர்பும் இந்நேரத்தில் பெரிதும் கைகொடுப்பதாக திருமதி ரேச்சல் கூறினார். "எனது கற்றல் பாணியைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு பிள்ளைகளுக்குத் தேவைப்படும் பயிற்சி பற்றிய எனது பரிந்துரைத்தலுக்கு ஏற்ப அவர்கள் தங்கள் பிள்ளைகளை வழிகாட்டுவர்," என்று அவர் கூறினார். தங்களது பிள்ளைகளின் நலன் மீது அதிக அக்கறை காட்டும் அந்த பெற்றோருக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது அவர்களாகவே தம்மை தொடர்புகொண்டு சந்தேகங்களைத் தீர்ப்பதாக ரேச்சல் தெரிவித்தார்.
இப்பள்ளியில் பயிலும் தமது மகள் இந்த ஏற்பாட்டின் மூலம் பயனடைவதாக அவரது தாயார் திருமதி ராதிகா, 36, தெரிவித்தார். "என் மகளுக்கு வண்ணம் தீட்டுவது மிகவும் பிடிக்கும். அவள் விரும்பும் நடவடிக்கைகளைச் செய்ய கண்காணிப்பு அவ்வளவாகத் தேவைப்படாது. ஆயினும் கணக்கு போன்ற பாடங்களுக்கு எனது மேற்பார்வையும் வழிகாட்டுதலும் தேவைப்படுகின்றன, இந்நேரத்தில் திருமதி ரேச்சல் போன்ற ஆசிரியர்களின் வழிகாட்டுதல் எங்களுக்கு உதவியாக இருக்கிறது," என்று அவர் கூறினார்.
கொவிட் -19 போன்ற சூழலுக்கு என்றும் தயார்நிலையில் இருப்பது முக்கியம் என்று தெரிவித்தார். கல்விக் கட்டமைப்பில் பெற்றோரின் பங்கு முக்கியம் என்பதால் வீட்டுச் சூழலில் கற்றல் குறித்த வகுப்புகள் அவர்களுக்கு அமைக்கப்பட்டால் பிள்ளைகளின் கல்வி இடையூறித் தொடரும் என்றும் அவர் கருதுகிறார்.

