படிப்பில் சிறந்து விளங்கியதுடன் எப்போதுமே கலகலப்பாக இருந்த மாணவி ரோஷான் கிருஷ்ணன், தமது பெற்றோரின் விவாகரத்தாலும் நெருங்கிய நண்பர் ஒருவரின் இறப்பாலும் பெரிதும் பாதிக்கப்பட்டார். நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வர்த்தக, பொறியியல் பட்டயக் கல்வி பயின்ற அவர், முதல் தவணையில் பாடங்களில் சிறந்து விளங்காததால் ஒரு கட்டத்தில் சக மாணவர்களாலேயே புறக்கணிக்கப்பட்டார்.
அவ்வாறு தொடக்கத்தில் 1.6 ஜிபிஏ புள்ளிகள் பெற்ற இந்த 20 வயது மாணவி, ஒட்டுமொத்தமாக 3.0 ஜிபிஏ புள்ளிகளுடன் பட்டயக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார்.
குவீன்ஸ்டவுன் தொடக்கப்பள்ளியிலும் நன்யாங் பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும் படித்த ரோஷான், ஒருங்கிணைந்த திட்டத்திற்கு பதிலாக 'ஓ' நிலைத் தேர்வை எழுத முடிவு செய்தார்.
"என் தந்தை ஒரு வர்த்தகர். எனவே வர்த்தகத் துறையில் படிக்க விரும்பிய என்னைத் தொழில்நுட்பம் சார்ந்த பாடத்தைக் கற்றுக்கொள்ள என் தந்தை அறிவுறுத்தியதால் பொறியியலைப் படிக்க முடிவு செய்தேன்," என்று அவர் கூறினார்.
பெற்றோரிடையே அடிக்கடி நிகழ்ந்த வாக்குவாதம் தனக்குத் தொடர்ந்து கவலையைத் தந்ததாக ரோஷான் பகிர்ந்துகொண்டார். இறுதியில் அவர்களது விவாகரத்தால் மனமுடைந்து போனதாகவும் கூறினார். 2017ல் நடந்து முடிந்த அந்த விவாகரத்தின்போது பலதுறை தொழிற்கல்லூரியில் முதலாம் ஆண்டு முதல் தவணை படித்துக்கொண்டிருந்தார் ரோஷான். படிப்பில் ஆர்வம் காட்டாததால் அவருக்கு 1.6 ஜிபிஏ புள்ளிகள் மட்டுமே கிடைத்தன.
"என் குடும்பமே என் கண் முன்னால் சிதைவதைக் காணும்போது படிப்பு எனக்கு முக்கியமாகத் தெரியவில்லை," என்று கூறினார். படிப்பில் ரோஷான் பெரும் பின்னடைவைச் சந்தித்தது இதுவே முதல் முறை. திட்டப்பணிகளுக்காக மாணவர்கள் குழுக்களை அமைக்கும் நேரங்களில் தமது மதிப்பெண்களால் பலமுறை மற்ற மாணவர்களால் ஒதுக்கப்பட்டதாகக் கூறினார். ஒரு தவணையில் பெறும் குறைந்த மதிப்பெண்கள், பட்டயக் கல்விக்கான ஒட்டுமொத்த மதிப்பெண்களைப் பாதிப்பதால் அதிலிருந்து மீண்டு வருவது கடினம் எனத் தெரிவித்தார்.
"ஒதுக்கப்பட்ட நிலையில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றாலே போதும் என்ற மனப்போக்குடைய மாணவர்களுடன்தான் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. என் திட்டப்பணிகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்காக இவர்களது பங்கையும் சேர்த்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன்," என்று அவர் கூறினார்.
இரண்டாவது தவணையில் ஓரளவு படிப்பில் கவனம் செலுத்தி வந்த ரோஷானுக்கு மூன்றாவது தவணையில் இன்னொரு இடி. தமது உயர்நிலைப் பள்ளி நண்பர் ஒருவரின் மரணம்.
"என் பிரச்சினைகளைப் பற்றி எப்போதும் அந்த நண்பரிடம் தான் கூறுவேன். என் பிறந்தநாளுக்கு மறுநாள் அவர் இறந்தார். மிகவும் வேதனையாக இருந்தது. ஒரு பாடத்தில் தோல்வியும் அடைந்தேன்," என்றார்.
தனிமையில் வாடிய ரோஷானுக்கு கைகொடுத்தது அவரது பேச்சுத் திறமையே. பள்ளியின் விவாதக்குழுவில் சேர்ந்து தமது திறன்களை வெளிப்படுத்தினார். தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் பல்வேறு பரிசுகளைப் பெற்ற ரோஷான் மீது சக மாணவர்களின் மதிப்பும் மரியாதையும் கூடின. அதுவே படிப்பில் சிறக்க அவருக்கு ஊக்கம் கொடுத்தது.
"என் மீது பிறர் வைக்கும் நம்பிக்கையே என்னை நன்றாகச் செயல்பட வைக்கிறது," என்று ரோஷான் கூறினார். இறுதித் தவணையில் 4.0 ஜிபிஏ புள்ளிகளைப் பெற்ற ரோஷான், வர்த்தகத் துறையில் தொடர்ந்து படிக்க விரும்புகிறார்.
"பிறர் நம்மைத் தவறாகக் கருதினாலும் நாம் தன்னம்பிக்கை இழக்கக்கூடாது. சிறு வயதில் ஏற்படும் துயரங்கள் நம்மை நீண்ட காலத்திற்குத் தயார்ப்படுத்தும்," என்றார் ரோஷான்.

