செய்தியாளராக பல இடங்களுக்குச் செல்ல வேண்டும், பலரையும் சந்திக்க வேண்டும் என்ற கனவுடன் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், இந்த வேலையில் சேர்ந்தேன்.
ஒரு கட்டத்தில் அலுவலகத்தில் இருந்தவாறு துணை ஆசிரியராக பயிற்சிபெறும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரே இடத்தில் உட்கார்ந்தவாறு என்னால் இயங்க முடியாது. வெளியே சென்று செய்தி திரட்டி வருவதுதான் என் விருப்பம் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டேன்.
எதைச் செய்யமாட்டேன் என்று நினைத்தேனோ அதை இந்த கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரம் செய்ய வைத்துவிட்டது.
இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து நான் இதுவரையில் அலுவலகத்திற்குச் செல்லவில்லை.
எனக்குத் தரப்பட்ட மடிக்கணினி வழி செய்திகளை அனுப்புமாறு உத்தரவு வந்தது. சரி, நம்மால் தொடர்ந்து வெளியே சென்று பிறரைப் பேட்டி எடுக்க முடிகிறதே என்று சிறிதளவு ஆறுதல் அடைந்தேன். அதுகூட இந்த கொவிட்-19 கிருமிக்குப் பொறுக்கவில்லை.
ஒரு தடவை நான் சென்றிருந்த செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.
அதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் எனக்கு வீட்டில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த நாட்கள் சிறையிலிடப்பட்டது போன்ற உணர்வைத் தந்தது. வேலைக்காக மட்டும் அல்ல, நான் நினைத்தால் கூட என்னால் வீட்டைவிட்டு வெளியேற முடியாத சூழ்நிலை.
உத்தரவு முடிந்தவுடன் சிறகடித்து பறக்க எண்ணிய எனக்கு மீண்டும் ஏமாற்றம். செய்தியாளர் கூட்டங்களை மெய்நிகர் பாணியில் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதனால், வெளியே சென்று செய்தி திரட்ட வேண்டியதில்லை என்ற தகவல் எனக்குக் கூறப்பட்டது.
ஓர் இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்க முடியாது என்று சொன்னவன் வீட்டில் அமர்ந்தவாறே கைபேசி, 'ஸூம்' எனும் மெய்நிகர் சந்திப்பு தளம் வழி பேட்டி எடுக்கத் தொடங்கினேன். அந்தப் புதிய பழக்கம் நாளடைவில் வழக்கமானது.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் வேலைச் சூழலிலிருந்து விடுபட்டு வீட்டுச் சூழலின் அமைதி மனதிற்கு இதம் தரத் தொடங்கியது.
பயணக் கட்டுப்பாடுகளுக்கிடையே வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்ல முடியதில்லை என்றாலும் குடும்பத்தாருடன் அதிக நேரம் உறவாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக கொவிட்-19 கிருமிக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.
கிருமி முறியடிப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத் தளர்வு கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.
இன்னும் சில காலத்தில் பள்ளிக்கும் அலுவலகத்திற்கும் திரும்பும் இயல்பு வாழ்க்கையும் வந்துவிடும்.
வெளியே செல்லாமல் பழகிவிட்ட நான் இனி, அந்த பரபரப்பான வேலைச் சூழலுக்கு என்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதுவரை, குடும்பத்துடன் இருக்கும் இந்த பொன்னான நேரத்தை அனுபவி என்று கூறுகிறது கொவிட்-19.

