ஒரு போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த 50 குழுக்களுடன் மோதவேண்டும் என்றால் சிலருக்கு அச்சம் ஏற்படலாம். ஆனால் பயத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல், போட்டியில் பங்கேற்றோரின் முயற்சியால் எதிர்காலம் மேம்படுவதை எண்ணி மகிழ்வதாகக் கூறுகிறார், மாற்றி யோசிக்கும் இந்த இளையர்!
சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்திற்கான எதிர்காலத்தை இன்றே விதைக்கும் இளையர்களில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பரத் கிருஷ்ணனும் ஒருவர். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகன வடிவமைப்புப் போட்டியில் அவரும் அவரது குழுவினரும் ஐம்பது குழுக்களுடன் மோதி சிறந்த வாகன வடிவமைப்புக்கான விருதை வென்றனர்.
இப்போட்டியை 35வது முறையாக ஷெல் நிறுவனம் நடத்தியது. 1939ஆம் ஆண்டு ஷெல் எரிபொருள் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, ஆண்டுதோறும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் நடைபெற்றது.
இந்தப் போட்டிக்காக இவர்கள் உருவாக்கிய கார் 'நன்யாங் வென்சர் XI (என்வி-11)'. இதற்கு நீண்ட நாள் திட்டமும் தயாரிப்பும் தேவைப்பட்டதாக 25 வயது பரத் தெரிவித்தார்.
"கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நானும் என் குழுவும் இதற்காக செயல்படத் தொடங்கினோம். காரின் திசைமாற்றும் (steering) கட்டமைப்புக்குப் பொறுப்பேற்றதுடன் வாகனத்தின் இரைச்சல் மற்றும் அதிர்வுகளைக் குறைக்கும் பணியில் நான் ஈடுபட்டேன்," என்று அவர் கூறினார்.
'என்வி-11' வாகனத்தின் வடிவமைப்பு 'கில்லர் வேல்' என்ற திமிங்கல இனத்தைக் கருப்பொருளாகக் கொண்டு அமைந்திருப்பதாக பரத் கூறினார்.
இந்தக் கார் பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருப்பதுடன் காற்றின் திசைக்கு எதிர்த்திசையில் செல்லத் தேவைப்படும் உந்து சக்தியை இந்த வடிவம் குறைப்பதாகவும் பரத் கூறினார்.
கார்பன் இழை மட்டுமின்றி குண்டு துளையாத சட்டைகளை (bulletproof vest) தயாரிக்க பயன்படுத்தப்படும் 'கெவ்லர்' (Kevlar) என்ற மூலப்பொருளும் இதன் மையப்பகுதியை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது. எரிபொருளைக் காட்டிலும் தூய்மையான மின்கலன்களால் இயங்கக்கூடிய இந்த காரில் ஓட்டுநரும் ஒரு பயணியும் அமர்ந்து செல்லலாம்.
" இந்த காருக்குத் தேவையான மின்சாரத்தை மீண்டும் புதுப்பிக்கக்கூடிய மூலங்களிலிருந்து பெறலாம்," என்று அவர் கூறினார்.
இந்த காரைத் தடங்களில் செலுத்த வேண்டும் என்ற பரத் குழுவின் ஆசைக்கு, கொவிட்-19 கிருமிப் பரவல் குறுக்கே நின்றது.
"கிருமிப் பரவலின் ஆரம்பக்கட்டத்தில் போட்டி தொடருமா இல்லையா என்ற நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது. ஆனாலும், அந்த விவகாரத்தால் எங்களது கவனத்தை நாங்கள் சிதறவிடவில்லை," என்கிறார் இவர்.
கிருமிப் பரவல் முறியடிப்புக் காலகட்டத்தின்போது ஆய்வுக்கூடங்கள் மூடப்பட்டதாலும் காருக்கான சில சோதனைகளை அவர்களால் செய்ய முடியவில்லை. இறுதியில் கார்களைத் தடங்களில் போட்டிக்காகச் செலுத்த எந்தக் குழுவுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த அங்கம் நீக்கப்பட்டது தங்களுக்கு வருத்தம் அளித்தாலும் தங்களது உழைப்பு அடுத்த ஆண்டு போட்டியில் கலந்துகொள்ளும் என்டியு குழுவுக்கு உதவும் என்பதில் ஆறுதல் அடைந்ததாக கூறுகிறார் பரத்.
சிறு வயது முதல் கார் மீதும் பொறியியல் மீதும் ஆர்வம் கொண்டிருந்த இவர், அடிக்கடி அவற்றின் தொடர்பான காணொளிகளைப் பார்த்து கற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
"கார்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என் தந்தைதான். சிறு வயதில் நான் விளையாட்டுப் பொருட்களைப் பல பாகங்களாகப் பிரித்துப் பார்ப்பேன். இதனை என் பெற்றோர் இருவரும் பொறுமையுடன் சகித்துக்கொண்டனர்," என்கிறார் இவர். எதிர்காலத்தில் வாகனம் தொடர்பான பொறியாளர் வேலையில் சேர விருப்பம் என்று தெரிவித்தார் பரத்.

