சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் கடந்த ஜூலை 7ஆம் தேதியிலிருந்து வருகையாளர்களுக்குத் தனது கதவைத் திறந்தது.
அன்றிலிருந்து உள்ளூர் வருகையாளர்கள் தொடர்ந்து வந்து ஆதரிப்பதைக் கண்டு உள்ளம் குளிர்வதாக சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் யானை பராமரிப்பாளராகப் பணிபுரியும் உதயகுமார் காளிரத்னம் தெரிவித்திருக்கிறார். இரண்டாம் தளர்வு கட்ட நடவடிக்கையின்போது மக்கள் விலங்கியல் தோட்டத்திற்கு வருவார்களா என்பது குறித்து ஆரம்பத்தில் கவலைப்பட்டதாக 35 வயது உதயகுமார் தெரிவித்தார்.
"விலங்கியல் தோட்டத்தில் 25 விழுக்காடு பகுதி மட்டுமே செயல்படுகிறது. இருந்தபோதும் உள்ளூர்வாசிகள் தொடர்ந்து வருகின்றனர். இவர்களது வாழ்க்கையில் விலங்கியல் தோட்டம் முக்கிய அங்கம் வகிப்பதை இது காட்டுகிறது," என்றார் உதயகுமார். சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் உதயகுமார், தமது வேலை நேரத்தின் பெரும்பகுதியை யானைகளைப் பராமரிப்பதில் செலவழிக்கிறார்.
"சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் நான் ஐந்து பெண் யானைகளைப் பராமரித்து வருகிறேன். இலங்கையிலிருந்து வந்த யானையான 50 வயது 'கோமளி', மலேசியாவிலிருந்து வந்த யானைகளான 36 வயது 'ஜத்தி' மற்றும் 31 வயது 'கம்பீர்', சுமத்ராவைச் சேர்ந்த 25 வயது 'இந்தான்' மற்றும் 'அப்ரில்லா' ஆகிய இரண்டு யானைகள் தற்போது என் பராமரிப்பில் உள்ளன," என்று மதுரையைச் சேர்ந்த உதயகுமார் கூறினார்.
விலங்கியல் துறையில் பட்டம் பெற்றுள்ள உதயகுமார், வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்த பின்னர் சிங்கப்பூரில்தான் முதன்முறையாக விலங்கியல் தோட்டம் ஒன்றில் பணியாற்று
கிறார். குரங்குகள், காண்டா மிருகங்கள், வெள்ளைப் புலிகள் ஆகியவற்றையும் அவர் அவ்வப்போது பராமரித்து வருகிறார். ஆனால் யானைகளின் மென்மை, அன்பு, பரிவு போன்ற குணங்கள் தனித்தன்மை வாய்ந்தவை என்று உதய குமார் கூறினார். மனிதர்களைப் போலவே ஒவ்வொரு யானைக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளதாம்.
"காட்டு யானைகளாக இருந்தாலும் மனிதர்களால் வளர்க்கப்பட்ட யானைகளாக இருந்தாலும் அவற்றுக்கு அதிக புத்திக்கூர்மையும் பல்வேறு சூழலுக்கு மாறும் தன்மையும் உள்ளன," என்று அவர் கூறினார். இவற்றுக்கும் மேலாக, யானைகள் மனிதர்களின் மீது நம்பிக்கை வைக்க முடிவு செய்தால் அந்த நம்பிக்கை மிக ஆழமாக இருக்கும் என்றும் உதயகுமார் தெரிவித்தார். கடந்த மே மாதம் கேரளாவில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழத்தை உண்ட பிறகு வாயில் கடுமையாகக் காயமடைந்து உயிரிழந்த யானை குறித்தும் தமிழ் முரசு உதயகுமாரைக் கேட்டது. பயிர்களைப் பாதுகாக்க செயல்படும் மனிதர்களுக்கும் பசியைப் போக்க அவற்றைப் புசிக்க விரும்பும் விலங்குகளுக்கும் இடையிலான போராட்டத்தை உணர்வதாகக் கூறிய உதயகுமார், இதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பு முக்கியம் எனக் கருதுகிறார்.
"அரசாங்கம் மீதான நம்பிக்கை வலுவாக இருந்தால் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள விலங்குகளுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என நம்புகிறேன்," என்று அவர் சொன்னார்.
இந்தோனீசியாவின் கம்பாஸ் தேசிய பூங்காவின் யானை பாதுகாப்புப் படையை சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் ஆதரிப்பதாக உதயகுமார் குறிப்பிட்டார்.
"இந்தப் படையைச் சேர்ந்த வனத்துறை நிபுணர்களும் பயிற்சி அளிக்கப்பட்ட யானைகளும் அங்குள்ள காட்டுப்பகுதிகளையும் விளைநிலங்களையும் கண்காணித்து வருகின்றன. வனவிலங்கு களைப் பாதுகாக்க சமூகங்கள் எப்படி இணைகின்றன என்பதற்கு அது சிறந்த உதாரணம்," என்று உதயகுமார் தெரிவித்தார்.
பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளின் அங்கமாக யானை தொடர்பான நிகழ்ச்சிகளும் அவற்றுக்குத் உணவு வழங்கும் அங்கங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், யானை
களுக்கும் அவற்றைப் பராமரிப்போருக்கும் இடையே இடைவெளியைப் நடைமுறைப்படுத்துவதற்கு தடுப்பு களுக்கும் போடப்பட்டுள்ளன.
விலங்குகளின் நலனையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் அதே வேளையில் அடுத்த சில மாதங்களில் யானைகள் தொடர்பான மேலும் பல நடவடிக்கைகளை எதிர் பார்ப்பதாக உதயகுமார் கூறினார்.

