தொடக்கப்பள்ளி பருவத்திலிருந்தே தாத்தா, பாட்டியுடன் வளர்ந்தவர் பாவனா. சிறு வயதிலேயே அவர்களுடன் இயல்பாக உரையாடுவதற்கு தமிழ்மொழி ஒரு பாலமாக அமைந்தது.
தாத்தாவுக்கு தமிழ்ப் புத்தகம் படிப்பதிலும் தமிழில் எழுதுவதிலும் அதிக நாட்டம் உள்ளதால் வீட்டுப்பாடங்களில் பாவனாவுக்குச் சந்தேகம் ஏதேனும் வந்தால் தெளிவுபடுத்த முன்வந்துவிடுவார்.
அந்த ஆரம்ப வழிகாட்டுதலால் இன்று 19 வயது ரா.பாவனா, கல்வி அமைச்சின் கற்பித்தல் உபகாரச் சம்பளத்தைப் பெற்று, தமிழ் ஆசிரியராகும் இலக்கை இன்னும் சில ஆண்டுகளில் அடையவுள்ளார்.
கல்வித் துறையில் சாதிக்க விரும்பும் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த அங்கீகாரத்திற்குத் தகுதி பெற்றனர்.
தொடக்கப்பள்ளி பருவத்திலிருந்து தமிழ் சார்ந்த போட்டிகளில் பங்குபெற்று வந்த பாவனா, விக்டோரியா தொடக்கக் கல்லூரிக்கு முன்னேறியதும் தமிழ் மொழி தொடர்பான பாடத்தை மேற்கொள்ளவில்லை என்றாலும், தமிழ் மொழி தமது அன்றாட வாழ்வோடு பிணைந்த ஒன்று என்று கூறினார்.
ஒரு செயலைச் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும்; எப்போதும் விடாமுயற்சியுடன் முன்னேற்ற பாதையில் நடைபோட வேண்டும் எனத் தமது வாழ்வியல் கொள்ளைகளுக்கு ஏற்ற பணியாக ஆசிரியர் பணி விளங்கும் என்று இவர் நம்புகிறார்.
கிரெசன்ட் பெண்கள் பள்ளியில் பயிலும்போது 'ஓ' நிலை தேர்வில் ஆங்கிலம், தமிழ், உயர்தமிழ் பாடங்களில் உச்சத் தேர்ச்சி பெற்றதால் 2018ஆம் ஆண்டில் இவருக்கு மதிப்புமிக்க பிரதமர் புத்தகப் பரிசு விருது வழங்கப்பட்டது.
அதற்கு முந்தைய ஆண்டில் இணைப்பாட நடவடிக்கைகளில் தலைமைத்துவ பொறுப்புகளைச் செவ்வனே ஆற்றியதற்காக இவர் தேசிய இளையர் சாதனை விருதும் (வெள்ளி) பெற்றார்.
தற்போது தேசிய கல்விக் கழகத்தில் கல்வி, தமிழ் மொழி துறை சார்ந்த பட்டப்படிப்பை மேற்கொள்ளும் இவர், தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொண்டு அதன் தொடர்பில் மாணவர்களுக்கு விறுவிறுப்பான பாணியில் பாடங்களைக் கற்பிக்க ஆவலுடன் இருக்கிறார். மற்ற பாடங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ் பாடங்களில் தொழில்நுட்பப் பயன்பாடு சற்று குறைவாக உள்ளது எனக் கருதும் பாவனா, மாணவர்களிடையே கற்றல் ஆர்வத்தைத் தூண்ட தொழில்நுட்பப் பயன்பாடு அதிகம் உதவும் என்று நம்புகிறார்.
கிரெசன்ட் பெண்கள் பள்ளியில் தாம் பயிலும்போது, தமது தலைமை ஆசிரியரான திருமதி டான் சென் கீ, மாணவர்களுடன் இயல்பாகப் பழகி அவர்களுக்கு நற்பண்புகளின் முக்கியத்துவத்தை உணர்த்திய தருணங்கள் தமது மனதில் ஆழமாக பதிந்துவிட்டதாக இவர் பகிர்ந்துகொண்டார்.
அவற்றால் ஏற்பட்டுள்ள தாக்கத்தைப் பின்னர் ஆசிரியரானதும் தானும் மாணவர்களிடையே ஏற்படுத்தப்போவதாகத் தெரிவித்தார்.
"பெற்றோரை அடுத்து நல்ல பண்புகளை மாணவர்களிடம் வலியுறுத்தும் பொறுப்பு தமிழ் ஆசிரியர்களுக்கு உள்ளது. தோள் கொடுக்கும் நண்பனாக இருந்து, நல்ல உறவுகளை அவர்களுடன் வளர்த்துக்கொள்ளும் ஓர் ஆசிரியராக ஆவதே என் ஆசை," என்றார் எதிர்கால தமிழாசிரியர் பாவனா.