அழிந்துவரும் ஒரு வர்த்தகத்தைத் தன் தந்தை வழி கற்றுக்கொண்டார் 31 வயது ஜெயசீலன். ஈசூன் வட்டாரத்தில் இவர் கடை. மணக்கும் மசாலா தூள்தான் இவர் வியாபாரம்.
கோழி மற்றும் மீன் கறி, 'மாசாக் மேரா', குருமா, 'பெரானாக்கான்' கலாசாரத்தின் மீன் கறி, தாய்லாந்தின் பச்சை கறி, ரச பொடி, சாம்பார் பொடி என சுவையான சமையலுக்கு ஏற்ற மசாலா கலவையைத் தன் கைப்பட கலந்து தயார் செய்து வருகிறார் ஜெயா.
ஜெயாவின் தாத்தாவிடமிருந்து தன் தந்தை ஜெயராமன் ராமநாதன், மசாலா கலவைகளைத் தயார் செய்யும் கலையைக் கற்றுக்கொண்டாராம். தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், தந்தை திரு ஜெயராமன் இந்தத் தொழிலில் கிட்டத்தட்ட 30, 40 ஆண்டுகளாக இருந்து வருவதாக கூறினார் ஜெயா. ஆனால், ஆரம்பத்தில் இத்தொழிலைத் தன் மகன் செய்வதில் அவருக்கு விருப்பம் இல்லை.
"பெரும்பாலான இந்திய பெற்றோர்களைப் போலவே, நானும் ஓர் உயரிய வேலையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்," என்றார் ஜெயா. 'ஜெயா ஸ்பைசஸ்' என்ற மளிகைக்கடையை ஆறு ஆண்டுகளாக நடத்தி வரும் ஜெயா, நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டதாரி. அலுவலக வேலையில் விருப்பம் இல்லாமல், தந்தைக்கு உதவியாக அவரின் கடையில் வேலை பார்க்கத் தொடங்கினார்.
"கடையில் வேலை செய்யத் தொடங்கியபோது அந்த வேலைச்சூழல் எனக்கு அதிர்ச்சியைத் தந்ததுடன் சவாலாகவும் இருந்தது. மசாலா பொருட்களின் வாசனை முதல் மக்களுடன் பேசுவது வரை எல்லாமே பழகிக்கொள்ள சிறிது காலம் பிடித்தது. ஆட்களிடம் பேச சற்று தயங்கிய நான், இப்போது அப்படி இல்லை," என்று சிரித்துக்கொண்டே கூறினார் ஜெயா. இவர் தமிழைத் தவிர ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளிலும் வாடிக்கையாளர்களிடம் பேசுவார். தந்தையின் கடையில் வேலை பார்க்கத் தொடங்கி ஒரு மாதத்திலேயே தந்தையைப் போல் தானும் ஒரு நல்ல வணிகராக வேண்டும் என்ற ஆசை வந்தது ஜெயாவுக்கு.
"சொந்த தொழிலை நடத்தும்போது ஒருவருக்கு நிறைய சுதந்திரம் கிடைக்கிறது. என் தொழிலை எப்படி வழிநடத்துவது என்று நானே முடிவெடுக்க முடியும். புதிய அம்சங்களை நினைத்த நேரத்தில் செயல்படுத்த முடியும். அதுமட்டுமல்ல, மசாலா தொழிலை செய்ய செய்ய அதிலுள்ள அழகை உணர தொடங்கினேன்," என்றார். இவரது கடை முதலாளி பணி, தினமும் அதிகாலை 5.30 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி அளவில் முடிவடையும். வீட்டிற்கு வந்ததும் குறைந்தது ஒரு மணிநேரத்தை நிர்வாகப் பணிகள் அல்லது புதிய மசாலா கலவைகளுக்கான சமையல் ஆராய்ச்சிகள் ஆகியவற்றுக்கு செலவிடுவதாக ஜெயா கூறினார்.
"சில நாட்களுக்கு முன்பு ஒருவகை ஜப்பானிய கறி மசாலா கலவை உள்ளதா என்று ஒரு வாடிக்கையாளர் கேட்டார். வீட்டிற்குச் சென்றதும் அந்த வகை கறியைப் பற்றி படித்து அதை சமைத்தும் பார்த்தேன்," என்றார் ஜெயா.
மசாலா பொருள்களை எவ்வாறு கலக்க வேண்டும் என்பதை அறிய ஜெயாவுக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தன. ஆரம்ப நாட்களில் கலவைகளுக்கான சமையல் வகைகள், கறிக்குத் தேவைப்படும் மசாலாப் பொருட்களின் அளவு போன்ற தகவல்களை ஒரு புத்தகத்தில் எழுதிக்கொள்வார் ஜெயா.
"இது சுலபமான ஒன்றாக தோன்றினாலும் சரியான அளவைப் பெறுவதற்கு சில காலமாகும். தொடக்கத்தில் வாடிக்கையாளர்கள் முன் நான் மசாலா கலவைகளைத் தயார் செய்வதை என் தந்தை அனுமதிக்கவில்லை. பலநாள் பயிற்சிக்குப் பிறகே எனக்கு அனுமதி தந்தார்," என்றார் ஜெயா. இன்று 35க்கும் மேலான கலவைகளின் செய்முறை இவருக்கு அத்துப்படி.
கடையில் மசாலாவைத் தவிர காய்கறி வகைகள், பழங்கள், தாளிப்புப் பொருட்கள் எனச் சமையலுக்குத் தேவையான நிறைய பொருட்கள் விற்கப்படுகின்றன.
ஜெயாவின் வழக்கமான வாடிக்கையாளர்களை அவரின் துடிப்புமிக்க இயல்பும் கலகலப்பூட்டும் பேச்சும் கவர்ந்து வருகின்றன. பல மணி நேரம் நின்றுகொண்டும் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டும் வேலை பார்க்கும் ஜெயாவுக்குச் சற்று நேரம் அமர்ந்து இளைப்பாறக் கூட நேரம் கிடைப்பதில்லையாம். ஆனால் அந்த அலைச்சலிலும் சோர்வடையாமல் புத்துணர்ச்சியுடன் கடை மூடும்வரை வாடிக்கையாளர்களை வரவேற்பார் ஜெயா.
இவரின் மனைவி ஷாலினி ஒரு வங்கி நிறுவனத்தில் முழுநேர வேலை பார்க்கிறார். அவர் பல்வேறு சமூக ஊடகங்களில் 'ஜெயா ஸ்பைசஸ்' பற்றி பதிவிட்டு கடையை மேலும் பிரபலம் அடையச் செய்துள்ளார்.
மூன்றாம் தலைமுறை வணிகரான ஜெயா, நவீன முறைகளைத் தனது சொந்த பாணியில் இப்பாரம்பரிய மசாலா வர்த்தகத்தில் புகுத்தி வருகிறார். இணையம்வழி மளிகைப்பொருள் விற்பனைச் சேவையைத் துவங்கியிருக்கும் ஜெயா, இப்போது நேரடியாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குப் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் சேவையையும் தொடங்கியுள்ளார்.
எதிர்காலத்தில் முடிந்தால் இன்னொரு கடையையும் திறக்க விரும்புவதாக கூறினார்.
"10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தொழிலில் தொடர்ந்து இருப்பேனா என்று தெரியவில்லை. ஆனால் தற்போதைக்கு இந்த வர்த்தகத்தில் முழு ஈடுபாடும் ஆற்றலும் கொண்டு செயல்படுகிறேன்," என்றார் இளையர் ஜெயா.

