எதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு

மாணவரிடம் வாங்கிய அடியைப் பொறுத்துக்கொண்டு சமாதானப்படுத்தும் ஆசிரியரைப் பார்த்திருக்கிறீர்களா? சிறப்புத் தேவை உடையோருக்குக் கற்றுத்தரும் ஷாலினி சந்திரமோகன், 31, தான் செய்யும் வேலையில் இதுபோன்ற சம்பவங்கள் இருந்தாலும் தன் பணியில் மனநிறைவைக் காண்பதாக கூறுகிறார். எழுதுவது, படிப்பது போன்ற ஏட்டுக் கல்விப்பாடங்கள் போதிப்பதுடன் சாப்பிடுவது, உடை உடுத்துவது, குளிப்பது போன்ற திறன்களையும் தொடர்பு திறன்களையும்  ஏழு வயது முதல் 18 வயதிலான ‘ஏவா’ (AWWA) பள்ளிப் பிள்ளைகளுக்கு இவர் கற்றுக்கொடுத்து வருகிறார். சென்ற வார ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தைப் பற்றி இந்த ஆசிரியர் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.

“கிருமித்தொற்று சூழலால் ஆசிரியர் தினத்திற்கான ஒன்றுகூடலோ பெரிய அளவிலான நிகழ்ச்சிகளோ நடத்தப்படவில்லை. ஆசிரியர்களும் மாணவர்களும் வெவ்வேறு வகுப்பறைகளிலிருந்து மெய்நிகர் சந்திப்பு வழி இணைந்தோம். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட கலைநிகழ்ச்சி அங்கங்களை நாங்கள் ஒன்றாகப் பார்த்தோம். அப்போது மாணவர்களின் உற்சாக குரல்களும் சிரிப்பு சத்தமும் என்னை நெகிழ வைத்தன,” என்று அவர் தெரிவித்தார்.

தொடக்கத்தில் எந்தத் துறை வேலையில் சேர்வது என்ற குழப்பம் இவருக்கும் இருந்தது. பலதுறை தொழிற்கல்லூரியில் வர்த்தக, தகவல் தொழில்நுட்பப் பாடத்தைப் பயின்ற இவர், அலுவலக வேலையில் சேர எண்ணினார்.  

“ஏவா பள்ளியில் ஆசிரியர் பணிக்கான இடம் காலியாக இருப்பதாக, தெரிந்தவர் ஒருவர் என்னிடம் கூறியபோது அதைச் செய்து பார்ப்போமே என எண்ணி விண்ணப்பித்தேன். சிறப்புத் தேவை கல்விக்கான பட்டயத்தை நான் தேசிய கல்வி நிலையத்திலிருந்து பெற்ற பின் இந்த வேலையில் சேர்ந்தேன்,” என்கிறார் தற்போது ஐந்து வயது மகனுக்குத் தாயாக உள்ள ஷாலினி. 
“மாணவர்கள் நாளுக்கு நாள் படிப்படியாக முன்னேறுவதைக் காண்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.  பிள்ளைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்,” என்று இவர் கூறுகிறார்.

கற்றுத்தரும் பாணி பற்றி கேட்டதற்கு ஷாலினி, “வகுப்பில் என்னென்ன சொல்லிக்கொடுப்பேன் என்பதை முன்பே திட்டமிடுவேன். ஆனால் கற்றுத்தரும் விதமோ ஒவ்வொரு மாணவருக்கும் மாறுபட்டிருக்கும். ஒரு பிள்ளைக்குப் பொருந்தும் உத்திகள் மற்றொரு பிள்ளைக்கு பலனளிக்காது. ஏன், அதே பிள்ளைக்குக்கூட வேறு நாட்களில் என் உத்திகளை மாற்றிக்கொள்ளவேண்டியிருக்கிறது,” என்றார். 

ஒரு சில பிள்ளைகள் வெகு நேரமாக ஒரே இடத்தில் அமர முடியாததால் அவர்கள் தங்களை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் ஆவேசப்படுவர். அவர்களைச் சாந்தப்படுத்தி மீண்டும் வகுப்புக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஷாலினி தெரிவித்தார். மிகவும் உணர்ச்சிவயப்பட்ட மாணவன் ஒருவன் தன்னை அடித்ததை ஷாலினி நினைவுகூர்ந்தார். 
“எனக்கு அதிர்ச்சிதான். ஆனால் அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்பதில் குறியாய் இருந்து நிலைமையைச் சமாளித்தேன்,” என்றார்.

தமது மாணவர்களின் மீதான அன்பும் அக்கறையுமே தமது பொறுமைக்கு முக்கிய அஸ்திவாரமாக இருப்பதாக ஷாலினி கூறுகிறார். 
 வருங்காலத்தில் மருத்துவராகவோ வழக்கறிஞராகவோ திகழப் போகும் மாணவர்கள் தமக்கு இருக்கப்போவதில்லை என்றாலும் ஒருசிலர் எளிய வேலைகளைச் செய்து சொந்தக் காலில் நிற்பதைக் காணும் போது அதனால் ஏற்படும் மகிழ்ச்சியே தனி என்கிறார் ஷாலினி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!