சுடச் சுடச் செய்திகள்

கவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்

‘தற்கால நவீன கவிதைகளை அணுகுதல்’ என்ற தலைப்பையொட்டிய கவிதைப் பயிலரங்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி மெய்நிகர் காணொளிக் காட்சி வழியாக தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் லிபி ஆரண்யாவினால் நடத்தப்பட்டது. அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள், கவிதைகளை வெவ்வேறு கோணங்களில் புரிந்துகொண்டு கற்றுக்கொள்ள அப்பயிலரங்கு ஒரு சிறந்த தளமாக அமைந்தது. கவிதைப் பயிலரங்குப் பற்றிய மாணவர்களது கருத்துகள் இங்கு இடம்பெறுகின்றன.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்கிற மகாகவி பாரதியாரின் பொய்யா மொழிக்கு இணங்க தமிழ்மொழிக்கு இனிமை சேர்க்கும் கவிதைகளைப் பற்றி இப்பயிலரங்கின் மூலம் நாங்கள் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டோம். குறிப்பாக, அண்மைய காலங்களில் பிரபலமாகி வரும் நவீன கவிதைகளைப் பற்றிய எங்கள் புரிதலை வளர்க்க இந்தப் பயிலரங்கு உதவியாக இருந்தது.

கவிதை வகைகளில் நவீன கவிதைகளின் தனித்துவத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. மேலும், பயிலரங்கை நடத்திய கவிஞர் லிபி ஆரண்யா, மாணவர்களை அதீத உற்சாகத்துடன் பங்கேற்கச் செய்தார். அதுமட்டுமின்றி இப்பயிலரங்கு மூலம் பல கவிஞர்களின் நவீன கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு இருந்ததால் ஒவ்வொரு கவிதையை வாசித்த பின் மாணவர்களுக்குப் புரியும் விதத்தில் மிக எளிதாகவும் தெளிவாகவும் அந்தக் கவிதை கூறவரும் கருத்துகளையும் நுணுக்கங்களையும் திரு ஆரண்யா எடுத்துரைத்தார்.

முக்கியமாக, எந்த அளவிற்கு அவர் நவீன கவிதைகளைப் பற்றி கற்றுக்கொடுத்தாரோ அதே அளவிற்கு எங்களுடைய கருத்துகளைப் பெறுவதில் முன்னுரிமை அளித்தார். பயிலரங்கின் இந்த அம்சமே என்னை மிகவும் கவர்ந்த அம்சமாக இருந்தது. ஏனென்றால் இது மாணவர்களின் ஈடுபாட்டை வளர்த்ததோடு கவிதையின் மீதான மாணவர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியது.

மேலும், இந்தப் பயிலரங்கு எங்களுடைய பள்ளிப் பாடங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு பயனுள்ள கற்றல் அனுபவமாக இருந்தது. “கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு” என்கிற கூற்றுக்கு ஏற்ப பயிலரங்கில் நாங்கள் நவீன கவிதைகளைப் பற்றி கற்றுக்கொள்ளும்போது உண்மையிலேயே தமிழ்க் கவிதைகளைப் பற்றி மேலும் கற்றுக்கொள்வதற்கு நிறையவே உண்டு என்பதை உணர்ந்தோம். குறிப்பாக, இந்தப் பயிலரங்கு நவீன கவிதைகளின் மீதான எனது ஆர்வத்தைப் பெரிதும் தூண்டியிருக்கிறது.

“உள்ளத்து உள்ளது கவிதை இன்பம் உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மைத் தெரிந்துரைப்பது கவிதை” என்று கவிதை பற்றிக் கூறுகின்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. கவிதைகள் மிகவும் அற்புதனமானவை. அவை உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள். ஒரு கவிஞன் தன்னைப் பற்றியும் தன்னைச் சார்ந்த சமூகம் குறித்தும் கொண்டுள்ள பார்வையே கவிதை என்றும் கூறலாம். கவிதைகளில் நகைச்சுவையும் உண்டு, கவிநயமும் உண்டு, சமூக அக்கறையை வெளிப்படுத்தும் சீற்றமும் உண்டு. அதில் மொழி விளையாட்டும் உண்டு. சுருக்கமாகக் கூறினால், கவிதையில் நவரசமும் காணலாம். வரலாற்றை மாற்றிய கவிதைகளும் காலத்தால் மறக்க இயலாத கவிஞர்களும் உலகில் உண்டு.

பயிலரங்கில் பல கவிதைகளைப் புதிய கோணங்களில் பார்த்தோம். கவிதை என்றால் என்ன? அன்பு என்றால் என்ன? கடவுள் என்றால் என்ன? இந்தக் கேள்விகளுக்கு ஒரு முழு விளக்கம் தரும் பதிலை நம்மால் தர இயலாது. பயிலரங்கில், ‘பெரிம்ளனேட்டா அமெரிக்கானா’, ‘எதிரெதிர் நிஜம்’ , ‘விடுதலை’ , மற்றும் ‘குழை மாச்சில்’ என்று பல கவிதைகளைப் படித்தோம்.

ஒவ்வொரு கவிதைக்கும் அர்த்தமுண்டு, ஒவ்வொரு கவிதைக்குள்ளும் பல்வேறு உள்ளர்த்தம் உண்டு. ஒரு சிறிய கவிதையை நாம் பல்வேறு கோணங்களில் பார்க்கலாம். கவிதை ஒரு காலத்தின் கண்ணாடி என்றும் சொல்லலாம். அது படைக்கப்பட்ட காலத்தையும் மக்களையும் சமூகத்தையும் படம் பிடித்துக்காட்டுகின்றது. கவிதை ஒரு சொல்லோவியம் என்பதை இப்பயிலரங்கு எனக்கு உணர்த்தியது. என் இலக்கியப் பாடப் புத்தகங்களுக்கும் அப்பால் இன்னும் எண்ணற்ற இலக்கிய பூஞ்சோலைகள் கதை, நாடகம், கவிதை என்னும் இலக்கிய மலர்களைத் தாங்கிக் காத்துக்கொண்டு இருக்கின்றன. அவற்றைத் தேடி இலக்கிய சுவையை அறிய வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

நிறையப் படிக்க வேண்டும் என்னும் தாகத்தை இப்பயிலரங்கு என்னுள் ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற தமிழ் சார்ந்த பயிலரங்குகளில் மாணவர்கள் கலந்துகொள்வதினால் ஏட்டுக்கல்வியோடு அனுபவக்கல்வியும் மாணவர்களின் கற்றலுக்குத் துணைபுரிகிறது என்பது உண்மை.

தமிழ் சார்ந்த பயிலரங்குகளை விடுமுறையின்போது நடத்தினால் மாணவர்களாகிய எங்களுக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வத்தோடு கலந்துகொள்வதற்கு ஏதுவாக இருக்கும். ஒரு கவிதைக்கு இப்படியும் ஓர் அர்த்தம் உள்ளதா என்று என்னை வியக்க வைத்தார் திரு ஆரண்யா. அவர் எங்களுக்குப் படிப்பதற்கு பிரபல கவிதைகளையும் ஆசிரியர் மூலம் அனுப்பியிருந்தார். அதில் சில கவிதைகளைப் பற்றி கலந்துரையாடல் செய்தோம். இதற்கு முன்னால் கவிதையே படிக்காத எனக்கு இப்பயிலரங்கில் கலந்துகொண்டதால் கவிதைகள் படிக்க இன்னும் ஆர்வம் வந்திருக்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon