சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண் தங்கவேலின் சமூக நிறுவனம்

இனிப்பு சிற்றுண்டி வகையை வழங்குவதன் வழி தாய்லாந்தில் உள்ள சிறுவர்களின் வாழ்வில் இனிமை சேர்த்து வருகிறார் ஓர் இளம் வர்த்தகர். பொரி, தேன், முந்திரி, உலர்ந்த மாம்பழம் என மிக எளிமையான உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது இந்தச் சிற்றுண்டி. 

எளிமையான உணவு என்றாலும் இது விளைவிக்கும் மாற்றம் எளியதல்ல. வருவாய், லாபம், உயர்வு, புகழ் போன்றவற்றை அடைய பலரும் வர்த்தகங்களைத் தொடங்கும் இந்தக் காலத்தில் பிறரின் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறார் ஷரண் தங்கவேல், 24 (படம்). 

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பயிலும் இறுதி ஆண்டு மாணவரான இவருக்கு வர்த்தகத் துறையில் கொள்ளை ஆர்வம். கடந்த மூன்று வருடங்களாக மூன்று நண்பர்களுடன் இணைந்து ‘பிரைஸ்’ என்ற சமூக நிறுவனத்தை நடத்தி வரும் ஷரண், சமூகப் பொறுப்பு என்பதே தனது வர்த்தகத்தின் தாரக மந்திரம் என்று கூறுகிறார். 

தாய்லாந்தின் சியாங் மாய் பகுதியில் அமைந்துள்ளது ‘ஃபிரோ’ சிறுவர் இல்லம். அங்கு 80க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வசிக்கின்றனர். 

தனியார் நன்கொடை, நிதி உதவியைக் கொண்டு தனது அன்றாட தேவைகளை நிறைவேற்றி முக்கிய செலவுகளைச் சமாளித்து வருகிறது இந்த இல்லம். 

சியாங் மாய் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் மக்களின் திறன்களைக் கொண்டு ஈட்டக்கூடிய ஒரு தொடர்ச்சியான வருவாய் தளத்தை உருவாக்கி, தனியார் நிதியின் மீதான இல்லத்தின் சார்பு நிலையை குறைப்பதை உத்தியாக கொண்டு இயங்குகிறது ‘பிரைஸ்’ சமூக நிறுவனம்.

தாய்லாந்தில் கிடைக்கும் இயற்கை வளங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஆரோக்கியமான இனிப்பு சிற்றுண்டியின் விற்பனையில் இருந்து கிடைக்கும் வருமானம் ஃபிரோ சிறுவர் இல்லத்தின் பராமரிப்புக்குப் பெரும் பங்காற்றும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டுள்ளனர் ‘பிரைஸ்’ நிறுவனர்கள். 

“சமூக நிறுவனத்திற்கும் ஒரு சாதாரண வர்த்தகத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், சமூக நிறுவனம் என்பது வருமானம் ஈட்டுவதையும் தாண்டி சமூகத்தில் ஒரு தொடர்ச்சியான நேர்மறை தாக்கத்தை உண்டாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

“நாங்கள் விளைவிக்கும் மாற்றம் நிலையான ஒன்றாக இருக்க வேண்டும். அதுவே எனது முதன்மை நோக்கம். ‘பிரைஸ்’ இதற்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார் ஷரண்.

சமையலில் அதிக அனுபவமோ ஆர்வமோ இல்லாத ஷரண் உருவாக்கிய இந்த சிற்றுண்டி வகை, ‘ஸ்னேக் ஜீனியஸ்’ என்ற சிற்றுண்டி தயாரிப்பு போட்டியின் இனிப்பு சிற்றுண்டி பிரிவில் முதல் பரிசைத் தட்டிச் சென்றது. 
“உணவு தயாரிப்பு என்பது ஒரு எளிய பணி அல்ல. இந்த மூன்று ஆண்டுகளில் பல உறவினர்கள் மற்றும் உணவு விஞ்ஞானிகளைச் சந்தித்து சிற்றுண்டி உற்பத்தியை நாங்கள் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்த சில பரிந்துரைகளைப் பெற்றோம். 

“கடந்த ஆண்டு சிற்றுண்டி போட்டி ஒன்றில் பங்கேற்றபோது பல முதலீட்டாளர்களுடனும் உணவு உற்பத்தியாளர்களுடனும் இணைவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. 

“ஆனால் கொவிட்-19 கிருமிப் பரவல் காலகட்டத்தில் பல வர்த்தகர்கள் நொடிந்துபோன நிலையில் இருக்க, நிலவரம் மேம்படும் வரை எங்களது கூட்டு முயற்சி திட்டங்களை ஒத்திவைத்துள்ளோம். 

“கிருமித்தொற்று ஒழிக்கப்பட்ட பின் எங்களது நிறுவனத்தை மேம்படுத்த பல திட்டங்களை வைத்துள்ளோம். மேலும், எங்களது சிற்றுண்டியின் விற்பனையை அதிகரிக்க பல நிறுவனங்களை அணுகியுள்ளோம். கூடிய விரைவில் உற்பத்தியை தாய்லாந்திற்கு மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளோம்,” என்று தெரிவித்தார் இந்த லட்சிய இளையர். ‘பிரைஸ்’  சமூக நிறுவனத்தை மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ஷரண் நடத்தி வருகிறார். இவர்கள் நால்வரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பொருளியல், கணினி அறிவியல், வணிகம் என பல்வேறு துறைகளில் இளநிலைப் பட்டக்கல்வியை மேற்கொள்கின்றனர். 

“கல்வியையும் எனது வர்த்தக முயற்சிகளையும் ஒரே நேரத்தில் கையாள்வது சவாலாகத்தான் இருக்கிறது. ஆனால் எனது நண்பர்களுடன் இணைந்து செய்வதால் எங்களுக்கு இடையே ஒரு நல்ல புரிந்துணர்வு உள்ளது. 
“குழுவில் ஒருவர் மற்ற வேலைகளில் மூழ்கியிருந்தால் இன்னொருவர் சற்று அதிக வர்த்தக வேலைகளைச் செய்து ஈடுகொடுப்பார். 

“நாங்கள் அனைவரும் ஒரு நிலையான குறிக்கோளை நோக்கி பயணிக்கிறோம். இந்தப் பயணம் கரடுமுரடான ஒன்றாக இருந்தாலும், வர்த்தகத்தின் அடிப்படை நோக்கம் எங்களுக்கு உந்துசக்தியைத் தருகிறது. 
“ஃபிரோ இல்லத்தில் வசிக்கும் சிறுவர்களின் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதும் அங்குள்ள மக்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதும் எங்கள் வர்த்தகத்தின் இலக்கு,” என்று கூறினார் ஷரண்.
சுயமாக வர்த்தகத்தைத் தொடங்க விரும்பும் இளையர்களுக்கு இந்த இளம் தொழில்முனைவர் கூறும் ஆலோசனை, “எந்தவொரு காரியத்திலும் தொடக்கம் என்பதுதான் கடினமான பகுதி. முதல் படியைத் தைரியமாக எடுத்து வையுங்கள். 

“தோல்வி, சவால்களை நினைத்துப் பயந்தால் உங்களது இலட்சியத்தை அடைவது மிகவும் சிரமமாகிவிடும். ஒரு வர்த்தகத்தை  நடத்தும்போது நாம் எதிர்கொள்ளும் சவால்கள், தடைகளுடன் பல கற்றல் வாய்ப்புகளும் சேர்ந்து வருகின்றன என்பதை மறக்கக்கூடாது 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon