வாள்முனையைவிட பேனா முனை கூர்மையானது என்பதால் அதனை ஆயுதமாகப் பயன்படுத்தி இளையர் மனதில் புதுமைக் கீறல்களை ஏற்படுத்த முனைபவர் கலைவாணி இளங்கோ, 35. தமிழ் மொழித்திறன் குறைவாக உள்ளவர்களை ஈடுபடுத்தி சிங்கப்பூரில் நல்ல தமிழ் வாசகர் சமூகத்தை உருவாக்கலாம் என்று இவர் கூறினார்.
புதிய சமூக ஊடகத் தளங்களின் மூலம் தமிழ் நடவடிக்கைகளில் புத்தாக்கமும் புதுப்பொலிவும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் மொழித்திறமை அதிகம் உள்ள அல்லது ஈடுபாடு உள்ள குறுகிய வட்டத்திற்கு வெளியிலும் தமிழ் நடவடிக்கைகள் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்கிறார் அவர். ஐந்து ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளி, மூன்று ஆண்டுகள் தொடக்கக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் ஆசிரியராக இருந்த இவர், கல்வியமைச்சின் பாடக்கலைத் திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றுகிறார். இளம் பருவ வாழ்க்கை முதல் தமிழ் மொழி இவரது உணர்விலும் சிந்தையிலும் கலந்திருந்ததற்கு தமிழாசிரியர்களாக பணிபுரியும் இவரது பெற்றோரும் கற்றுத்தந்த ஒவ்வொரு தமிழ் ஆசிரியரும் கொடுத்த ஊக்கமே காரணம் என்றார் தமிழ்த்துறையில் பட்டதாரியான இவர்.
"தொடக்கப்பள்ளி ஐந்தில் நான் நையாண்டி கவிதை ஒன்றை எழுதினேன். அங்கிருந்துதான் கட்டுரை, கவிதை, நாடகங்கள் போன்றவற்றை எழுதத் தொடங்கினேன்," என்று அவர் கூறினார்.
பத்து ஆண்டுகள் தோ பாயோ ஆங்கிலப் பேச்சாளர் மன்றத்தில் இருந்து பின்னர் மூன்று ஆண்டு களுக்கு முன்னர் லிஷா தமிழ் மன்ற பேச்சாளராகச் சேர்ந்தார். 2019ஆம் ஆண்டு மன்றத்தின் துணைத்தலைவராக இருந்து கடந்தாண்டு தலைவராக பொறுப்பேற்றார். பட்டுக்கோட்டையாரின் மக்கள் கவிஞர் மன்றத்திலும் செட்டி மலாக்கா மன்றத்திலும் உறுப்பினராக இருக்கிறார்.
தமது ஆசிரியர் திரு பொன். சுந்தரராசு பகுதி நேரமாக தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதைக் காணும்போது அவரைப் போல தாமும் சமூகத்தில் நல்ல அங்கீகாரம் பெற்ற நிலையில் இருக்கவேண்டும் என ஆசைப்பட்டதாக இவர் கூறினார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், பாரதிதாசன் உள்ளிட்ட தமிழ் கவிஞர்களின் படைப்புகளும் தமக்கு உற்சாகத்தைக் கொடுத்த தாகக் கூறுகிறார் கலைவாணி.
"நடிகர் அஜித்குமாரும் எனக்கு மற்றொரு முன்னுதாரணம். அவரிடம் விடாமுயற்சி, மீள்திறன் போன்ற பண்புகளை நான் காண்கிறேன். மொழித் திறமையை வளர்ப்பதற்கு இப்பண்புகளும் முக்கியம்," என்று அவர் தெரிவித்தார்.
எழுத்துக் கலைஞர்கள் பல்வேறு சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ளவேண்டும் என்பதைக் குறிப்பிட்டார்.
"எனது முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட இளையர்கள் தமிழுடன் இணைந்து அவர்களும் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் நான் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறேன்," என்று அவர் கூறுகிறார். கடந்தாண்டு கண்ணதாசன் விருதைப் பெற்றார். சென்னையினல் உள்ள நந்தவனம் அறக்கட்டளை நிறுவனத்தின் மகளிர் தினத்திற்கான பெண் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. கண்ணதாசனின் பேரில் விருது பெற்றது குறித்து பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்ட குமாரி கலைவாணி, பன்முகத்தன்மையைப் பொறுத்தவரை அமரர் கண்ணதாசன் சிறந்த உதாரணமாக இருப்பதாகக் கூறுகிறார்.
"கதை, கட்டுரை, நாடகங்கள், நடிப்பு, ஐந்து குரல்களின் பாவனை, பட்டிமன்றம் போன்ற பல்வேறு துறைகளில் திறன்களை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்கிறேன்," என்றார் குமாரி கலைவாணி.
தற்போதைய கிருமிப்பரவல் சூழலிலும் தரமான தமிழ் நிகழ்ச்சிகள் மெய்நிகர் வடிவில் அடுக்கடுக்காக சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவது இங்கு தமிழ்மொழி அடைந்திருக்கும் நல்ல நிலையை எடுத்துக்காட்டுவதாக கலைவாணி தெரிவித்தார். 'டிக்டாக்', 'ஸ்ட்ரீம்யார்ட்' போன்ற தளங்களுக்கேற்ப தமிழ்ப் படைப்புகளும் மாறிவருவது தற்போது நடக்கும் ஒரு நன்மை என்று அவர் குறிப்பிட்டார்.
இருந்தபோதும் தமிழுடன் அதிகம் தொடர்பில்லாதோரை மொழியைக் கொண்டு சேர்க்கும் முயற்சிகள் மேலும் தீவிரமாகவேண்டும் என்று கலைவாணி கருதுகிறார். இளம் பெற்றோர்கள் தமிழுடனான தொடர்பை விட்டுவிடாமல் இருக்க பொதுமக்களுக்கான தமிழ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்படி இவர் கேட்டுக்கொள்கிறார். இத்தகைய நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தமிழர்கள் எந்த அளவுக்குப் பங்கேற்கின்றனர் என்பது குறித்த ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றும் அதன் அடிப்படையில்தான் சரியான தீர்வுகள் வகுக்கப்படலாம் என்று கூறினார்.
அன்றாட வாழ்க்கையின் அம்சங்களுக்கும் இலக்கியப் படைப்பு களின் கூறுகளுக்கும் இடையிலான ஒற்றுமைகளை அறிமுகப்படுத்தினால் இவர்களிடத்தில் ஆர்வம் வளரும் என்று இவர் குறிப்பிட்டார். சங்கக் கால பண்டமாற்று முறையைப் பற்றி பொருளியல் பாடம் பயிலும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அதன் வழியாக தமிழ் ஆர்வத்தைத் தூண்டலாம் என்கிறார் கலைவாணி.
போதிய மொழிப்புலமை இல்லை எனக் கருதப்படுவோரை ஒதுக்கிடாமல் அவர்களை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட வேண்டும். அத்துடன் ஆர்வலர்கள் வழிகாட்டிகளாக முன்வந்து பிறருக்கு உதவலாம் என்று தெரிவித்தார்.
"மற்ற கலைஞர்களை உரு வாக்குவதே நல்ல கலைஞருக்கு அழகு. தேவையற்ற போட்டித்தன்மை, கலையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். அதிகக் கலைஞர்கள் உருவானால் பன்முகத்தன்மைதான் வளரும்," என்கிறார் குமாரி கலைவாணி.

