சமூக மாற்றத்துக்கு காற்பந்தாட்டம்: துகிலனின் புது வழி

முழுமனதோடு ஒன்றில் ஆர்வத்துடன் ஈடுபட்டு, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, கடுமையாக உழைத்தால் கனவுகள் கைகூடுவதுடன் பல கதவுகளும் திறக்கின்றன.அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் (ஐஓசி) 25 இளம் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 25 வயது துகிலன் ஜீவமணியின் ஆர்வம் காற்பந்தாட்டம். 

சிங்கப்பூரின் இரண்டாம் நிலை தேசியக் குழுவான, ‘யங் லயன்ஸ்’ குழுவிலும் கேலாங் இன்டர்நேஷனல் குழுவிலும் இடம்பெற்றிருந்த துகிலன், கடந்த 2010ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற இளையர் ஒலிம்பிக் போட்டிகளில் துடிப்பாக விளையாடியவர். சிங்கப்பூர் காற்பந்து விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக மிளிர்ந்த துகிலன், தேசிய சேவை, பிறகு பட்டப்படிப்பு என்று 22 வயதில் காற்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 

நிதித்துறையில் பட்டக்கல்வியை மேற்கொண்ட போதும், விளையாட்டு மூலம் மற்றவர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்திருந்த துகிலனுக்கு காற்பந்தாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற அவா உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்தது. அனைத்துலக ஒலிம்பிக் குழுவில் இடம்பெறுவதன் மூலம் அவரது எண்ணம் ஈடேறியுள்ளது. இந்த நான்காண்டுத் திட்டத்திற்கு உலகளாவிய ஒலிம்பிக் விளையாட்டுகளின் பங்காளியான பேனசோனிக் நிறுவனம் ஆதரவு வழங்குகிறது.

துகிலன், இத்திட்டத்திற்குத் தேர்வு பெற்றிருக்கும் நான்காவது சிங்கப்பூரர். வாள்வீச்சு வீரர் ரானியா ரஹார்ட்ஜா, படகுப் பந்தய வீரர்கள் சிசிலியா லோ, ஷோன் லீ ஆகியோர் இத்திட்டத்திற்குத் தேர்வு பெற்ற ஏனைய சிங்கப்பூர் விளையாட்டாளர்கள். 350 விண்ணப்பதாரர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் இந்த 25 இளம் தலைவர்கள்,  உலகின் ஐந்து கண்டங்களில் உள்ள 25 நாடுகளைச் சேர்ந்தவர்கள்  என்று அனைத்துலக ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. 

வாராந்திர கற்றல் திட்டங்கள், தலைமைத்துவ வாய்ப்புகள் போன்றவை மூலம், நிலைத்தன்மையான, விளையாட்டை மையப்படுத்திய சமூக வர்த்தகங்களை தொடக்கநிலையிலிருந்து உருவாக்க இவர்களுக்கு உதவுவதே திட்டத்தின் நோக்கம்.

கடந்த அக்டோபரில் அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பை துகிலன் ஃபேஸ்புக்கில் பார்த்தார்.  தன்னால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று உணர்ந்த துகிலன் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தார்.யங் லயன்ஸ், கேலாங் இன்டர்நேஷனல் குழுக்களில் இருந்தபோது சமூகப் பணிகளில் ஈடுபட்டிருந்த துகிலன், வீட்டிலேயே இருக்கநேர்ந்த வயதானவர்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உணவு விநியோகத் திட்டமான ‘மீல்ஸ்-ஆன்-வீல்ஸ்’ திட்டத்தில் உதவியுள்ளார். மேலும் சியாம் சீ தோங்கின் விளையாட்டு நிதியிலும் வேலை பழகி உள்ளார்.

இளம் தலைவர்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக, துகிலன் வரும் வாரங்களில் ஐஓசி-யின் அறிமுகத் திட்டத்தில் ஈடுபடுவார்.ஐந்து முதல் 15 வயது வரையிலான பெண்கள், உடல் ஊனமுற்றோர், அறிவாற்றல் குறைபாடுள்ளவர்கள் ஆகிய பிரிவினர் தன்னாற்றல் பெற காற்பந்தாட்டத்தை ஓர் ஊடகமாகப் பயன்படுத்த துகிலன் எண்ணியுள்ளார்.டப்ளின் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பட்டக்கல்வி மாணவரான துகிலன்,  “இளையர் ஒலிம்பிக் உலகம் பற்றிய என் பார்வையை விரிவுபடுத்தி, என் கண்களைத் திறந்து, என் வாழ்க்கையை வடிவமைத்தது,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

“வெவ்வேறு கலாசாரங்களுக்கு மட்டுமல்லாமல், நல்ல, சிறந்த காரியங்களைச் செய்வதற்கான உந்துதலையும் உறுதியையும் என்னுள் ஏற்படுத்தியுள்ளது,”  என்றார் அவர்.

அதிகரித்து வரும் சமத்துவமின்மை பற்றி அதிகம் புரிந்துகொள்ளும்போது எனக்குள் பொறுப்புணர்வு வளர்கிறது. பின்தங்கிய மக்களுக்கு அதிகளவு எட்டக்கூடிய உதவிகளைப் புரிய,  இந்த திட்டம் சரியான நேரத்தில் இடம்பெறுகிறது என்றார் அவர். கடந்த 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தங்கள் சமூகங்களில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதில் விளையாட்டின் ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு வழி அமைத்துக் கொடுக்கிறது.
ஐஓசியும் வழிகாட்டிகள் கட்டமைப்பும் அளிக்கும் நிதி ஆதரவுடன், இந்த இளம் தலைவர்கள் உலகளாவிய சமூகங்களில் 116க்கும் மேற்பட்ட விளையாட்டு சார்ந்த திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர், இந்த முயற்சிகள் 30,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு நேரடியாக பயனளித்துள்ளன.

‘ஐஓசி மாற்றத்தை ஏற்படுத்தும் இளையர் திட்டம்’ என்று முன்னர் அழைக்கப்பட்ட இத்திட்டம், விளையாட்டுகள் வழி சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற செய்தியை இளையர்கள் மூலம் பரப்புவதை நோக்கமாகக் கொண்டது. இந்த நோக்கத்தில் இக்குழுவில் இடம்பெறும் இளையர்கள் அனைத்துலக நிகழ்வுகள், மாநாடுகளில் கலந்துகொள்வதற்கும் உதவுகிறது. குழுவின் ஆணைபெற்ற உறுப்பினராகவும் செயலாற்ற வகைசெய்கிறது.
“ஒலிம்பிக் சமூகத்தில் உள்ள நாம் அனைவரும் விளையாட்டின் மூலம் உலகை சிறந்த இடமாக மாற்றும் இலக்கைப் பகிர்ந்துகொள்கிறோம். ஐஓசி இளையர் திட்டம் உலகெங்கிலும் உள்ள இளையர்களை தங்கள் சமூகங்களில் இந்தப் பணியைச் செயல்படுத்தச் செய்கிறது,” என்று அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பாக் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!