அன்பையும் அறிவையும் வளர்க்கும் ஆசிரியர்கள்

லீ குவான் இயூ தங்க விருது, ரோட்டரி இன்டர்நேஷனல் தங்க விருது, பிரிட்டிஷ் மன்ற பரிசு என பல விருதுகளுடன் தேசிய கல்விக் கழகத்தில் மிகச்சிறந்த தேர்ச்சி பெற்று, உன்னதமான ஆசிரியர் பணியில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் கிஷன் கண்ணன்.

“இலக்கியம் மனிதரைச் செம்மைப்படுத்துகிறது. மேன்மைப்படுத்துகிறது. வாழ்க்கையின் பல பரிமாணங்களைக் காட்டுகிறது. இலக்கிய மாணவர் ஒரே நேரத்தில் தர்க்கவாதி, விமர்சகர், மனோதத்துவ மேதை, ஓவியர், வழக்கறிஞர் என பலவாக மாறுகிறார்,” என்ற கிஷன் இலக்கிய வாசிப்பு ஒவ்வொருவருக்கும் மிக முக்கியம் என்றார்.

“இலக்கியம் என்பது ஒரு பாடம் மட்டுமல்ல, அது ஓர் உணர்வு. இலக்கியக் கதைகளையும் கதை மாந்தர்களையும் ஆராயும்போது மக்களின் குணநலன்கள், நடத்தை, சமூகம் ஏன் குறிப்பிட்ட விதங்களில் இயங்குகிறது, நமது நம்பிக்கைகளுக்காக நாம் ஏன் போராடவேண்டும் போன்றவற்றை மாணவர்களால் புரிந்துகொள்ள முடியும்,” என்று விவரித்தார் திரு கிஷன்.

இந்த ஆண்டில் பல்வேறு விருது களைப் பெற்று உயர்ந்த தேர்ச்சி பெற்ற பத்து பேரில் ஒருவரான கிஷன் கண்ணன், தேசிய கல்விக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

ஆசிரியராக வேண்டும் என்ற இலக்கு சிறு வயது முதல் இருந்தபோதும் ஆங்கிலோ சீனப் பள்ளியில் அனைத்துலக பக்கலோரே(ஐபி) படிப்பைத் தொடர்ந்த காலத்தில்தான் ஆங்கில இலக்கியத்தை தனது துறையாக இவர் தேர்ந்துஎடுத்தார்.

தற்போது கிளமெண்டி உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கியம் கற்பிக்கும் திரு கிஷனுக்கு மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்துவது முதன்மையான இலக்கு. தேர்வு மதிப்பெண் துணை இலக்கு. இந்த மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்க விரும்புகிறார் இந்த இளம் ஆசிரியர்.
தொடக்கநிலைப் பள்ளிக் காலம் முதல், பேச்சுப் போட்டி, நாடக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்ததன் வழியாக மொழி ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட திரு கிஷனுக்கு, அகராதிகளில் தேடி வார்த்தைகளின் உட்பொருளைப் புரிந்துகொள்வது பிடிக்கும்.

“படிப்பதன் மூலம் மட்டுமே சொல்வளத்தைப் பெருக்கலாம் என்பதல்ல. சொற்செரிவுள்ள காணொளிகளைப் பார்ப்பதன் மூலமாகவும் மொழித்திறனை வளர்க்கலாம்,” என்கிறார் கிஷன்.

ஷேக்ஸ்பியரின் பிரபலமான படைப்புகள் உள்ளிட்ட பல படைப்புகளை ஆங்கில இலக்கியத்தைப் பயிலத் தொடங்கும்போது படித்ததை நினைவுகூர்ந்த கிஷன், மொழித்திறனை வளர்ப்பது பல ஆண்டு முயற்சி என்றார்.

மாணவர்கள் சுயமாகவே ஆராயும் சூழலை ஆசிரியர்கள் உருவாக்கினால் அதன் மூலம் கற்கும் விவரங்கள் அவர்களது ஆழ்மனதில் பதியும் எனக் கருதும் திரு கிஷனுக்கு மாணவர்களையும் அவர்களது கருத்துகளையும் மையப்படுத்தி வகுப்புகளை நடத்துவது பிடிக்கும்.

“ஆசிரியர்களுக்குத் திறன் மேம்பாடு மிகவும் அவசியம். இந்தத் தொழிலில் தொழில்நுட்பம் மட்டுமல்ல சமுதாய செயல்பாடும் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்தத் தலைமுறை மாணவர்களுக்கும் கடந்த தலைமுறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன.
ஒரே ஆசிரியரின் வகுப்பறையில் மாணவர்கள் தலைமுறை தலைமுறையாக வந்து செல்வார்கள். எனவே, இந்த மாற்றங்களுக்கு ஏற்ப நாம் நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்ற திரு கிஷன் மாணவர்களை மேம்படுத்துவதுடன் தன்னையும் தொடர்ந்து மேம்படுத்த இலக்குக் கொண்டுள்ளார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை மாணவியான குமாரி திவ்யலஷ்மி கணேசன், அறிவியல் ஆய்வு சார்ந்த பணிகளை மேற்கொண்ட பின்னரே, கல்வியமைச்சின் ஆசிரியர் வேலைப் பயிற்சியில் சேர்ந்தார். அந்த நான்கு வார வேலைப் பயிற்சியில் அவர் உணர்ந்த மனநிறைவும் மகிழ்ச்சியும் அவரது வாழ்க்கைத் தொழில் என்னவாக இருக்கவேண்டும் என்பதை அவருக்கு உணர்த்தின.

ஆசிரியராகப் பணியாற்ற திவ்யா முடிவெடுத்தபோது அவரை அறிந்த பலரும் அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை. அறிவியல் துறையில் படித்துவிட்டு, ஆசிரியர் தொழிலுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று சிலர் கேட்டனர்.

“அந்நேரத்தில் என் பெற்றோரும் சகோதரியும் என் முடிவை ஆதரித்தனர். இது எனக்கு மேலும் தெளிவைத் தந்தது,” என்றார் 27 வயது திவ்யா.
பாடங்களுடன் பண்புகளையும் தம் ஆசிரியர்களிடமிருந்து கற்றுக் கொண்டதாகக் கூறிய திவ்யா, மாணவர்கள் படிப்பிலும் பண்பிலும் மேம்படுவதைக் காணும்போது ஆசிரியர் பணி மீதான ஆர்வம் அதிகரிப்பதாகச் சொன்னார்.

தேசிய கல்விக் கழகத்தில் 2018ஆம் ஆண்டில் பட்டப்படிப்புக்குப் பிந்திய பட்டயப் படிப்பை பயின்ற காலத்தில் திவ்யாவின் அன்புக்குரிய தாத்தா காலமாகிவிட்டார்.

தாத்தாவை இழந்ததில் மிகவும் மனம் நொந்துபோன அவருக்கு சக மாணவர்கள் ஊக்கம் தந்தனர். அவரது பேராசிரியர்களும் ஆசிரியர்களும் அவரின் மனநிலையை உணர்ந்து அவருக்கு உதவினர். வீட்டுப்பாடங்களுக்கு கூடுதல் நேரம் கொடுத்தனர்.

“எல்லாக் கட்டத்தில் ஆசிரியர்களின் அன்பு என்னைப் புடம் போட்டுள்ளது,” என்ற அவர், தொடக்கநிலை நான்கின்போது தமது ஆசிரியர் தம்மை நடத்திய விதத்தை நினைவுகூர்ந்தார்.அது தம் வாழ்வில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் என்ற திவ்யா அதை விவரித்தார்.

“பத்து வயது மாணவியாக இருந்தபோது வகுப்பறையில் தவறு செய்துவிட்டேன். ஆசிரியர் என்னைத் திட்டி, அவமானப்படுத்துவாரோ எனப் பயந்தேன். மாறாக, அந்த ஆசிரியர் மாணவர்களை மதித்து என்மீது காட்டிய பரிவு, என்னுள் நல்ல பண்புகளை வித்திட்டது. மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் முதல் வாய்ப்பு பரிவாகத்தான் இருக்க வேண்டும் என அந்த ஆசிரியர் எனக்குக் கற்றுத்தந்தார்,” என்றார் அவர். சில மாணவர்கள் ஆசிரியர்கள் எவ்வளவு உதவி செய்தாலும் படிப்பில் அக்கறை செலுத்தாமல் இருக்கும்போது அவர்கள் மீது பரிவு ஏற்படாமல் இருப்பது இயல்பு என்றாலும் அந்த உணர்வுகளைத் தாண்டி அன்பு செலுத்தும்போது அது அவர்களது வாழ்க்கையில் நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தும் என்கிறார் இவர்.

தங்களது விருப்பத்தின்படி வாழ்க்கைத் தொழிலை ஏற்படுத்திக்கொள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் இந்த இளம் ஆசிரியர், இத்தகைய விருப்பமே சவால்களை எதிர்கொள்ளும் சக்தியைத் தருவதாகத் தெரிவித்தார்.

இளம் வயதில் தமது வருங்காலத் தொழிலை திவ்யா உறுதி செய்யவில்லை. ஆனால் செய்யும் தொழில் எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதனால் திருப்தி அடைய வேண்டும் என்பது பற்றி தெளிவாக இருந்ததாகக் கூறினார், கிரீன்டேல் தொடக்கப்பள்ளி யில் அறிவியல் பாடம் கற்பிக்கும் திவ்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!