சவால்களை எதிர்கொள்ள உதவும் தொழில்நுட்பம்

அன்றாட வேலைகள் பலவற்றை நாம் எளிதாக முடித்துவிடுகிறோம். ஆனால், உடற்குறை உள்ளவர்களுக்குச் சுலபமான பணிகளை முடிப்பது கூட சவாலாக இருக்கலாம். அத்தகையோருக்கு உதவும் வகையில் என்யுஎஸ் கணித, அறிவியல் உயர்நிலைப் பள்ளி, தேசிய தொடக்கக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இரு செயலிகளை உருவாக்கியுள்ளனர்.

‘என்ஜினியரிங் குட்’ (Engineering Good) எனும் இலாப நோக்கமற்ற அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்கள், பயன்மிக்க புத்தாக்கப் படைப்புகளைத் தொழில்நுட்பம் அடிப்படையில் உருவாக்க வேண்டும். பொது இடங்களில் உடற்குறையுள்ளோர் தொடர்பான செயல்பாடு, தகவல்தொடர்பு ஆகிய அம்சங்களை மேம்படுத்தும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். Google.org பண உதவியும் ஆதரவும் வழங்கியுள்ளது. 

‘டவுன் சின்ட்ரம்’ குறைபாடு 
உள்ளவர்களுக்கான செயலி

என்யுஎஸ் கணித, அறிவியல் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ‘ஈசி போர்ட்’ (Easy Board) செயலி, ‘டவுன் சின்ட்ரம்’ சமூகத்தினருக்குப் பேருதவியாக அமையலாம். மாணவர்கள் மோதிகி ஈஸ்வர அணிருத் மற்றும் ஸ்ரீநிகேத் சுப்பரமணியன் கைவண்ணத்தில் உருவான செயலி, பொதுப் போக்குவரத்தில் ‘டவுன் சின்ட்ரம்’ குறைபாடுள்ளவர்கள் எளிய முறையில் பயணம் செய்ய உதவும். 

“பயணத்துக்கான பல்வேறு செயலிகளை நாம் பயன்படுத்தி மிக எளிதில் ஓர் இடத்தை அடைந்துவிடுகிறோம். ஆனால், டவுன் சின்ட்ரம் குறைபாடு உள்ளவர்களுக்கு அவ்வாறு செய்வது சவாலாகவே இருக்கும். அவர்களுக்குத் துணையாக ஒருவர் சென்றால் மட்டுமே முடியும். இவ்வாறு பிறரைச் சார்ந்திருக்காமல் அவர்கள் பயணம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் செயலியின் நோக்கமாகும்,” எனக் கூறினார் அணிருத். 

தங்களின் செயலி உருவாக்கத்திற்கு இரு மாணவர்களும் டவுன் சின்ட்ரம் அமைப்புடன் தொடர்புகொண்டு, அக்குறைபாடு உள்ளவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களைப் பற்றி முதலில் அறிந்துகொண்டனர். பொதுவாக, இக்குறைபாடு உள்ளவர்களின் கவனம் எளிதில் சிதறிவிடும்.

மேலும், ஒரே சமயத்தில் பல தகவல்களைப் புரிந்துகொள்ளும் தன்மை அவர்களுக்குக் கிடையாது. அத்துடன் அவர்கள் எளிதில் பதற்றம் அடைவர். இச்சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில் தங்களது செயலியை வடிவமைத்தனர் அணிருத் மற்றும் ஸ்ரீநிகேத்.

செவித்திறன் குறைபாடு 
உள்ளவர்களுக்கான செயலி

கேட்கும் ஆற்றலை இழந்தோருக்கென தேசிய தொடக்கக் கல்லூரி மாணவர்கள், ‘ஐஹியர்’ (EyeHear) என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். 

கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் பயிலும் 17 வயது பாரத் ரவிந்திரன், கபிலேஷ்வரன் கிருஷ்ண குமார், தீனதயாளன் அமிர்த்தா மற்றும் சிந்துரா ராஜிவ் ஜைன் செயலி உருவாக்கத்தில் இணைந்துள்ளனர். நேருக்கு நேர் நின்று உரையாடும்போது செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்குப் புரிந்துகொள்ள சிரமமாக இருக்கும். அந்தச் சிரமத்தைக் களைய உதவும் வகையில் செயலியை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். 

நீண்ட உரையாடல்களை உடனுக்குடன் புரிந்துகொள்ள செயலியை உருவாக்கியதாக கூறினார் கபிலேஷ்வரன். 

இதற்காக மூக்குக்கண்ணாடியில் பொருத்திக்கொள்ளும் ஒரு சிறிய தகடை (clip-on panel) உருவாக்கியுள்ளனர் மாணவர்கள். 

ஒருவர் பேசும்போது, கூறப்படும் வார்த்தைகள் பயனரின் தொலைபேசியில் உள்ள ‘ஐஹியர்’ செயலியில் பதிவாகும். பின்பு இவ்வார்த்தைகள் எழுத்து வடிவமாக மாற்றப்பட்டு தகடு வழி கண்ணாடியில் தோன்றும். 

செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் இச்செயலியைப் பரிசோதனை செய்வதற்கு ‘எஸ்ஜி எனேபல்’ (SG Enable) அமைப்பை அணுக மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். தற்போதைய புதிய கொவிட்-19 விதிமுறைகளால் இத்திட்டம் சில வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆறுமாத காலத்தில் உருவாக்கப்பட்ட இச்செயலி, முன்னோட்டம் கண்ட பிறகு பெரிதளவில் உற்பத்தியாகும்.

“நம் சமூகத்தில் உடற்குறையுள்ளவர்களுக்குப் பல தொழில்நுட்பச் சாதனங்கள் உள்ளன. ஆனால், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு பெரிதாக ஏதுமில்லை. அவர்களுக்கு ஏற்கெனவே சைகை மொழி மற்றும் காதணிக் கருவிகள் உள்ளதால், புதிதாக நாம் ஏதும் உருவாக்க முயற்சி செய்யவில்லை. அதனால் நாங்கள் இந்த முயற்சியில் இறங்கினோம். 

“இனியொரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம். தனியொருவனுக்குணவிலை யெனில் ஜகத்தினை யழித்திடுவோம்” என மகாகவி பாரதியார் கூறியதுபோல், எங்களால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என முற்பட்டு இந்த திட்டத்தை மேற்கொண்டோம்,” என்றார் அமிர்த்தா.

“தொழில்நுட்பம் ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். ‘கூகல்’ மற்றும் ‘என்ஜினியரிங் குட்’ வழிகாட்டிகளின் ஆதரவுடன் இந்த இளைஞர்கள், உதவி தேவைப்படும் சமூகங்களுக்காக அர்த்தமுள்ள, நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் பயனுள்ள படைப்புகளை உருவாக்கும் அறிவையும் திறமையையும் பெறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறினார் Google.org நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிரிவை நிர்வகிக்கும் திருமதி மரிஜா ராலிக்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!