பிரிட்டனை 70 ஆண்டுகளாக ஆட்சி செய்து, உலகச் சின்னமாகத் திகழ்ந்தவர் இரண்டாம் எலிசபெத் அரசியார். இவரின் மறைவு உலகையே துயரில் ஆழ்த்தியது.
நிச்சயமற்ற பொருளாதார நிலை, அரசியல் ஆட்சி மாற்றம் எனப் பலவாறாக இருக்கும் இன்றைய சூழலில் நம்மில் பலர், குறிப்பாக பிரிட்டனுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவர்களின் உணர்ச்சிகள் தற்போது பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்களில் சிலர் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
அரசியார் இல்லாத ஒரு நாடா...
இங்கிலாந்தில் தற்போது உளவியல் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார் கயல்விழி கதிரொளி, 24. இன்னும் சில வாரங்களில் பிரிட்டன் திரும்பவிருக்கும் இவர், அரசியார் இல்லாத ஒரு நாட்டை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்கிறார். பிரிட்டனின் பொருளாதார மாற்றங்கள் நம்மை மறைமுகமாக பாதிக்கக்கூடும் என்பது இவர் கருத்து. அன்றாட வாழ்க்கையில் ஒரு சில அசௌகரியங்கள் நேரலாம் என்றார் கயல்விழி. உதாரணமாக, நாணயங்களிலும் அஞ்சல்தலைகளிலும் இருக்கும் அரசியார் சின்னம் மாறவிருப்பதால் தினசரி வாழ்க்கையில் பல சிரமங்களை மாணவர்கள் எதிர்நோக்குவர் என்று கவலைப்படுகிறார்.
முடியாட்சியின் அரசாங்கம்...
பிரிட்டனில் பயிலும் மற்றொரு மாணவரான ஷவின், 23, பொருளாதார மாற்றங்களால் மாணவர்கள் பாதிப்படையலாம் என்கிறார். அரசியாரின் இறுதி ஊர்வலத்தில் ஏற்படும் செலவுகளால் விலைவாசி ஏறலாம் என்றும் இதற்காக விடப்படும் விடுமுறை நாட்களால் அன்றாடச் செயல்பாடுகளில் இடையூறுகளை மாணவர்கள் சந்திப்பர் என்றும் இவர் கூறுகிறார். அதுபோக, வருங்கால முடியாட்சியின்கீழ் அரசு எவ்வாறு செயல்படும் என்ற நிச்சயமற்றதன்மையும் மக்களைப் பாதிக்கக்கூடும் என்று கருதுகிறார் ஷவின்.
நாட்டின் தந்தையை இழந்த அதே துயரம்...
பிரிட்டிஷ் மக்கள் தங்கள் கண்முன் உலா வந்த எலிசபெத் அரசி மூலமாகத்தான் தங்கள் நாட்டின் வரலாற்றை உணர்ந்திருந்தனர். இதே உணர்ச்சியை சிங்கப்பூரிலும் தான் அனுபவித்ததாக பிரிட்டனில் கட்டட வடிவமைப்புத் துறையில் பயின்ற நவின்குமார் பழனி, 24, கூறுகிறார்.
நம் நாட்டின் தந்தை என்று நாம் அன்புடன் அழைக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் மறைவின்போது நாம் மூழ்கியிருந்த அதே துயரத்தில்தான் பிரிட்டன் தற்போது இருப்பதாக இவர் சொல்கிறார். இந்த உணர்வை இளம் வயதில் உணர்ந்த இவர், தமக்கு சிங்கப்பூரராக இருப்பதன் பெருமையை மேலும் உணர்த்தியுள்ளதாக கூறினார்.
மனதில் நீங்கா சகாப்தம் அவர்...
படிப்பதற்காக பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சிநேகா, 22, அரசியாரைக் காணவேண்டுமென்ற ஆவலுடன் காத்திருந்த நிலையில் அவரது மறைவு சிநேகாவிற்கு வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளித்திருக்கிறது. 25 வயது முதல் 70 ஆண்டுகளாக மாதருக்கு முன்மாதிரியாக நின்ற அரசியார், மக்கள் மனதில் இன்று நீங்காத சகாப்தமாக மாறியுள்ளார் என்றும் அவரின் ஆளுமைத் திறனையும் தன்னம்பிக்கையையும் கண்டு எவரும் தலை வணங்கவே செய்வர் என்றும் பகிர்ந்துகொண்டார் உயிர்மருத்துவப் பொறியியல் துறையில் படிக்கும் சிநேகா.
இழப்பை அனைவரும் உணர்வர்...
எழுபது ஆண்டுகளாக காமன்வெல்த் நாடுகளுக்குத் தலைவராக இருந்து நாடுகளை ஒன்றிணைத்த அரசியாரை இந்த உலகம் மறவாதிருக்கும் என்பது பிரிட்டனில் மருத்துவம் பயிலும் 22 வயது மாணவரான ஷரண் வைத்தீஸ்வரனின் கருத்து. இந்த இழப்பை நாடுகள் ஒவ்வொன்றும் காலப்போக்கில் கண்டிப்பாக உணரும் என்று இவர் கருதுகிறார். தனது குடும்ப வாழ்க்கையைக் காட்டிலும் நாட்டு விவகாரங்களில் அரசியார் அதிக கவனம் செலுத்தினார் என்ற ஷரண், அரசியாரின் கடுமையான உழைப்பைக் கண்டு வியந்ததாகக் கூறினார்.
இன்றைய நவீன யுகத்தில் பாரம்பரியத்தையும் பழமையையும் மதித்து, அதைக் கட்டிக்காப்பதில் பிரிட்டன் சிறந்திருந்தது. இந்தச் சிறப்பை அவர்களின் கட்டடங்கள் முதல் கலாசாரம் வரை காண முடிகிறது. அரசியார் குறித்த கருத்தை பிரிட்டிஷ் மக்களின் அன்பான சொற்களிலும் உணர முடிகிறது. இந்நிலையில், முடியாட்சியின் பிரதிநிதிகளாக தங்களைக் கருதும் பிரிட்டிஷ் மக்கள், என்றென்றும் அரசியாரை ஓர் உயர்ந்த நிலையில் வைத்திருப்பர் என்பது உறுதி.
செய்தி: பொன்மணி உதயகுமார்

