புலாவ் உபினில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருவகை புதையலை (geocache) அரை மணி நேரமாகத் தேடிய பிறகு அதை நிலத்தடிக் குழாய் ஒன்றில் கண்டுபிடித்தது மிஹிருக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம். எறும்புக் கடிகளோடு காலில் காயங்கள் ஏற்பட்டபோதும், 'ஜியோகேஷிங்' எனும் பொழுதுபோக்கின் மேல் அவருக்கு ஆர்வம்தான் கூடியது.
அவர் கண்டெடுத்த 'ஜியோகேஷே'யில் இருந்த பதிவுப் புத்தகத்தில் தனது பெயரை எழுதியபோது அவருக்குள் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி தோன்றியதாக இவர் கூறுகிறார்.
இதே பொழுதுபோக்கில் கடந்த ஓராண்டாக இறங்கியுள்ள மாணவர் ஹரிகேஷ், இப்போதெல்லாம் தன் நேரத்தைப் போக்க, 'ஜியோகேஷிங்' செயலிவழி மறைக்கப்பட்ட ஜியோகேஷேக்களைத் தேடிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
உலகின் ஆகப் பெரிய புதையல் வேட்டை விளையாட்டு என அறியப்படும் 'ஜியோகேஷிங்' பலரையும் ஈர்த்துவரும் ஒரு பொழுதுபோக்காகிவிட்டது. உலகெங்கிலும் மொத்தம் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட 'ஜியோகேஷே', அதாவது புதையல் பொருள்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொழுதுபோக்குக்கென உருவாக்கப்பட்டுள்ள ஜியோகேஷிங் செயலிகளில் உள்ள 'ஜிபிஎஸ்' எனப்படும் இடங்காட்டித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறைத்து வைக்கப்பட்டுள்ள பொருள்களைக் கண்டுபிடிப்பதே நோக்கமாகும்.
வெவ்வேறு விதமான ஜியோகேஷேக்களை ஒருவர் கண்டெடுக்கலாம். சிலவற்றில் பதிவுப் புத்தகங்கள் இருக்கும். இதற்கு முன் அந்தப் புதையல் பொருளைக் கண்டெடுத்தோரின் பெயர் அவற்றில் குறிக்கப்பட்டிருக்கும்.
யூடியூப் மூலமாக இப்பொழுதுபோக்கைப் பற்றி அறிந்துகொண்ட மிஹிர் கண்டேக்கர், ஈராண்டுக்கும் மேலாக இதில் ஈடுபட்டு வருகிறார். 2019ல் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த மிஹிர், சிங்கப்பூரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசித்தார். அதிகம் அறியப்படாத பல இடங்களுக்கு இந்தப் பொழுதுபோக்கு தன்னை அழைத்துச் சென்றுள்ளதாக தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் 27 வயது மிஹிர் கூறினார்.
இவ்விளையாட்டின் மற்றொரு பயனாளரான 24 வயது தேசிய சேவையாளர் சாய் அவினாஷ், 'டிக்டாக்' மூலமாக இது குறித்து அறிந்துகொண்டார். நோய்ப்பரவல் காலத்தில் பொழுதுபோக்காக இதை மேற்கொண்டு வந்தார். ஆனால், வரைபடத்தில் காணப்படும் கேஷேக்களைப் பலமுறை கண்டுபிடிக்க முடியாமல் போன நிலையும் தனக்கு ஏற்பட்டதுண்டு.
"இந்தப் பொழுதுபோக்கில் ஈடுபட அதிக பொறுமை தேவை. பல கேஷேக்கள் தொலைந்து போயிருக்கலாம் அல்லது தேடு
வதற்குச் சிரமமாக இருக்கலாம்," என்கிறார் இவர்.
கணினியும் மின்னியல் விளையாட்டுகளும் தனக்கு மனநிறைவையும் ஓய்வையும் தரவில்லை என்றார் 16 வயது மாணவர் ஹரிகேஷ். ஜியோகேஷிங் குறித்து கேள்விப்பட்ட இவர், உடனே அச்செயலியை பதிவிறக்கம் செய்தார். தனது குடும்பத்தாருடன் அவ்வப்போது இதில் ஈடுபடும் இவர், சுவாரசியமான வழியில் பொழுதைக் கழிக்க முடிவதாக தெரிவித்தார்.
செய்தி: ஆ. விஷ்ணு வர்தினி

