கருணாநிதி துர்கா
சிங்கப்பூரர்கள் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசாங்கம் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சிங்கப்பூரில் ஆரோக்கிய நிலையை மேம்படுத்தும் நோக்கில் மக்களின் உணவுப் பழக்கங்களை மாற்றுவதற்கும் வீட்டிலும் கடைகளிலும் ஆரோக்கியமான உணவு வகைகளை மக்கள் தேர்ந்தெடுக்க வழிகாட்டுவதற்கும் சுகாதார மேம்பாட்டு வாரியம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இளம் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான வாழ்க்கை
முறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது மட்டுமல்லாமல் மூத்தோருக்கான துடிப்புடன் மூப்படைதல் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
உடற்பயிற்சி பற்றி இளையர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதோடு அவர்களுக்கு அதற்கான வாய்ப்பையும் அரசாங்கம் ஏற்படுத்தித் தருகிறது.
தொழில்நுட்பமும் இதற்கு முக்கியப் பங்காற்றி வருகிறது.
ஆரோக்கியத்துக்குக் கைகொடுக்கும் செயலிகள்
அரசாங்கம் 'ஆக்டிவ்எஸ்ஜி', 'ஹெல்தி 365' போன்ற தளங்களின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வலியுறுத்தி வருகிறது.
'ஆக்டிவ்எஸ்ஜி' செயலியைக் கொண்டு பொதுமக்கள் எளிதில் உடற்பயிற்சி வசதிகளைப் பயன்படுத்த முன்பதிவு செய்ய முடிவதுடன் பலதரப்பட்ட வகுப்புகளுக்கும் பதிவு செய்துகொள்ளவும் முடிகிறது.
'ஹெல்தி 365' செயலிவழி உடற்பயிற்சி மட்டுமல்லாது பொதுமக்கள் ஆரோக்கியமான உணவுமுறையைக் கடைப்பிடிப்பது ஊக்குவிக்கப்படுகிறது.
உடற்பயிற்சி ஆர்வலராக விளங்கும் சிட்டிபாபு அஸ்வின், 18, உடற்பயிற்சி சார்ந்த அரசாங்கத் திட்டங்களால் தான் பலன் அடைந்துள்ளதாகக் கூறுகிறார்.
'ஹெல்தி 365' செயலியில் உள்ள 'ஹெல்த்பாய்ன்ட்ஸ்' (Healthpoints) என்ற அம்சத்தின் வாயிலாக புள்ளிகள் சேகரித்து அவற்றின் மூலம் பல சலுகை
களைத் தன்னால் பெற முடிவதாகக் குறிப்பிட்டார்.
"ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் புள்ளிகளைச் சேகரித்துவிட்டால் அடுத்த முறை இலவசமாகவோ அல்லது சலுகைகளுடனோ நம்மால் உடற்பயிற்சி வசதிகளுக்கும் வகுப்புகளுக்கும் பதிவுசெய்ய முடிகிறது," என்றார் அஸ்வின்.
இச்செயலி தனது உணவுமுறை ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்ய உதவுவதாகவும் அவர் கூறினார்.
"சில உணவகங்களில் சாப்பிட்ட பிறகு அதன் ரசீதிலுள்ள 'கியூஆர்' குறியீட்டை வருடி, நாம் ஆரோக்கியமான உணவை வாங்கியிருந்தால் புள்ளிகள் பெறலாம். இம்முயற்சிகள் நிச்சயம் ஆரோக்கிய வாழ்க்கைமுறைக்கும் ஆரோக்கிய உணவுப் பழக்கத்திற்கும் வழிவகுத்துள்ளன," என்று தெரிவித்தார் அஸ்வின்.
'ஆக்டிவ்எஸ்ஜி' செயலியையும் பயன்படுத்தும் இவர், அச்செயலியின் மூலம் தன்னால் சுலபமாக விளையாட்டு இட வசதிகளுக்குப் பதிவு செய்ய முடிவதோடு அந்நேரத்தில் அந்தந்த இடங்களில் விளையாட்டு வசதிகளில் உள்ள கூட்டத்தையும் அறிந்திட முடிகிறது என்றார்.
நீச்சலில் அதீத ஆர்வம் கொண்ட ஸாதனாஸ்ரீ தசரதன், 18, 'ஆக்டிவ்எஸ்ஜி' செயலியை அதிகமாகப் பயன்படுத்திப் பலன் அடைவதாகக் கூறினார்.
'ஆக்டிவ்எஸ்ஜி'யில் வழங்கப்படும் பலதரப்பட்ட நடவடிக்கைகளும் விளையாட்டுகளும் இவரை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிப்பதோடு அவரால் தொடர்ந்து புதியனவற்றைக் கற்றுக்கொள்ள முடிவதாகக் குறிப்பிட்டார்.
'ஆக்டிவ்எஸ்ஜி' உறுப்பினராக இருக்கும் 15 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு $100 தங்களது 'ஆக்டிவ்எஸ்ஜி' கணக்கில் நிரப்பப்படும்.
"இவ்வாறான சலுகைகளை வழங்குவதால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது புதியனவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கிறது. பணத்தை இதற்காக முதலீடு செய்யத் தேவை இருக்காது," என்று ஸாதனாஸ்ரீ கூறினார்.
ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு அவசியம்
அரசாங்கம் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருந்தாலும் சிலருக்கு இன்னமும் இது தொடர்பான விழிப்புணர்வு இல்லை. இருப்பினும் பெரும்பாலான இளையர்கள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதற்கு முயற்சி எடுத்து வருவதுடன் வெவ்வேறு தளங்களின் மூலமாகவும் ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
'ஆக்டிவ்எஸ்ஜி', 'ஹெல்தி 365' போன்ற செயலிகளைத் தான் பயன்படுத்தியதில்லை என்றாலும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றத் தான் முயன்று வருவதாக ரமேஷ் குமார் சகானா அவந்திகா, 18, கூறினார்.
பெரும்பாலும் தன் வீட்டிற்கு அருகே அமைந்துள்ள நடைபாதைகள், மெதுவோட்டப் பாதைகளில் இவர் மெதுவோட்டம் செல்வதுண்டு. மிதிவண்டி ஓட்டுதல், மெதுவோட்டம், சறுக்குதல், 'தைச்சி', தற்காப்புக் கலைப் பயிற்சி, நீர் விளையாட்டுகள் போன்ற நடவடிக்கைகளை தேசிய பூங்காக் கழகத்தின் பூங்காக்களில் மேற்கொள்ளலாம்.
சுற்றுச்சூழல், கட்டமைப்பு ஆகிய அம்சங்களின் மூலமாகவும் அரசாங்கம் சிங்கப்பூரர்களிடையே மேலும் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்க முயற்சிகள் எடுத்து வருகிறது.
"உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது மனநலனுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதோடு அதனைப் பற்றிய விழிப்புணர்வு கூடுதலாக வேண்டும்," என சகானா வலியுறுத்தினார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் 'ஆக்டிவ்எஸ்ஜி' செயலியைப் பயன்படுத்தி வந்த கிரித்திஷா மாரிமுத்து, 18, பள்ளி வாழ்க்கையின்போது உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்கச் சிரமப்பட்டார்.
பள்ளி நாள்களில் உடற்பயிற்சிக்கென ஏற்கெனவே பள்ளிப் பாட அட்டவணையில் நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதால் இச்செயலியின் அவசியம் குறைவே என்று கிரித்திஷா கருதினார்.
"ஆரோக்கியமான வாழ்க்கைமுறை எனும்போது அதில் ஆரோக்கிய உணவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நான் பெரும்பாலும் வீட்டு உணவையே உண்பதால் எனது உணவு முறையை என்னால் சுலபமாகத் திட்டமிட முடிகிறது," என்றார் கிரித்திஷா.
ஆற்றலை வளர்த்துக்கொள்ள அரசாங்க ஆதரவு
அண்மையில் வெளியான அறிவிப்பில் 4 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களின் 'ஆக்டிவ்எஸ்ஜி' கணக்கில் மே 1ஆம் தேதியன்று $100 நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்குத் தகுதிபெற சிறுவர்கள் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி மற்றும் 'ஆக்டிவ்எஸ்ஜி' உறுப்பினராக இருக்க வேண்டும்.
இந்நிலையில் 12 வயதுக்கும் குறைந்தவர்கள் 'ஆக்டிவ்எஸ்ஜி' உறுப்பினர் ஆக முடியாதென்றாலும் பெற்றோரின் கணக்கில் துணை உறுப்பினராக இருந்து சலுகைகளைப் பெறலாம்.
இம்முயற்சியின் மூலம் கூடுதலான சிறுவர்கள் உடற்பயிற்சி செய்ய முன்வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், தகுதிபெறும் சிறுவர்கள் மே 1ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் 'ஆக்டிவ்எஸ்ஜி' உறுப்பினராகத் தங்களைப் பதிந்துகொண்டால் மொத்தம் $200 நிரப்புத்தொகைக்குத் தகுதிபெறுவர்.
அதுமட்டுமல்லாமல் 13 வயது முதல் 17 வயது வரையிலான சிங்கப்பூரின் உள்ளூர் இளம் காற்பந்தாட்ட வீரர்களுக்குக் கூடுதல் ஆதரவு அளிக்கும் வகையில் தேசிய இளையர் அணிகள் அமைக்கப்பட்டு புதிய தேசிய காற்பந்து மேம்பாட்டு மையங்களில் அவர்கள் பயிற்சி பெறுவர்.
உள்ளூர்க் காற்பந்தாட்ட விளையாட்டாளர் அணியை உருவாக்கும் முயற்சியில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அண்மையில் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் திரு
எட்வின் டோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தலைசிறந்த இளம் விளையாட்டாளர்கள் தங்களின் பயிற்சிக்காக வெளிநாட்டுக் கல்விக்கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவர்.
'ஆக்டிவ்எஸ்ஜி' வழங்கும் வகுப்புகள், வசதிகள் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருள் சேவை வரி அதிகரித்தாலும் பொது விளையாட்டு வசதிகளின் நுழைவுக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.
அதுமட்டுமல்லாமல் 'ஆக்டிவ்ஜிம்' திட்டத்தின்கீழ் உடற்பயிற்சிக் கூடங்களில் வகுப்புகளும் பயிலரங்குகளும் நடத்தப்படுகின்றன. அவற்றில் மெய்நிகர் உடற்பயிற்சி நடவடிக்கைகள், நடனம் சார்ந்த உடற்பயிற்சி வகுப்புகள், 'கிக்பாக்சிங்' போன்ற 'கார்டியோ பயிற்சிகள், மன அமைதிக்கான யோகா வகுப்புகளும் அடங்கும். மேல்விவரம் அறிய https://www.myactivesg.com/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம், அல்லது 'ஆக்டிவ்எஸ்ஜி' செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
சிங்கப்பூரின் சிறார்கள், பதின்ம வயதினர் பிரிவில் 50 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டோர் ஒரு நாளுக்குத் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வதில்லை என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் அண்மைய ஆய்வு தெரிவித்துள்ளது. அத்துடன் 13 முதல் 17 வயதுப் பிரிவினரிடையே 23.7 விழுக்காட்டினர் மட்டுமே மிதமான அளவு முதல் தீவிர அளவு வரையிலான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் வழங்கப்படும் வசதிகளை வாய்ப்புகளாகப் பயன்படுத்திக்கொண்டு இளையர்கள் பலதரப்பட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் நிலை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.