யுகேஷ் கண்ணன்
தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்குத் துணைப்பாடம் வழங்கும் நிகழ்ச்சியாக சில ஆண்டு
களுக்கு முன்பு வரை இருந்த 'சாதனா', தற்போது பல்கலைக்கழகம் செல்லவிருக்கும் மாணவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் சிறப்பு நிகழ்ச்சியாக உருமாறியுள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ் பேரவை, சிண்டா ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சி, இம்முறை கடந்த மாதம் 11ஆம், 12ஆம் தேதிகளில் கிட்டத்தட்ட 40 பங்கேற்பாளர்
களுடன் நடைபெற்றது.
தொடக்கக்கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மேலும் பல மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் இந்நிகழ்ச்சி மறுசீரமைக்கப்பட்டதாக பேரவையின் துணைத் தலைவி, குமாரி பாலமுருகன் தீபிகா, 21, தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் முதல் நாளன்று பங்கேற்பாளர்களுக்கு ஒருவரை பற்றி ஒருவர் மேலும் தெரிந்துகொள்ள உதவும் விளையாட்டுகளும் உரையாடல் அங்கங்களும் நடைபெற்றன. அதோடு, பல்கலைக்கழக வாழ்க்கைச் சூழல், தங்குமிடங்கள் போன்ற அம்சங்களைப் பற்றிய படைப்புகளையும் வந்திருந்த மாணவர்கள் கண்டு தகவல் அறிந்தனர்.
இரண்டாம் நாளன்று இயந்திரப் பொறியியல், உளவியல், மருத்துவம், சட்டம் போன்ற பலதரப்பட்ட பல்கலைக்கழக பாடங்களைப் பற்றி தற்போதைய தமிழ் பேரவை உறுப்பினர்களும் முன்னாள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்
களுள் ஒருவரான 16 வயது கனிகா, இந்நிகழ்ச்சிக்கு முன்பு பல்கலைக்கழக வாழ்க்கை, அங்கு வழங்கப்படும் பாடங்கள், அவற்றுக்குத் தகுதிபெறத் தான் பெற வேண்டிய மதிப்பெண்கள், போன்ற கூறுகளைப் பற்றி பெரிதும் அறிந்திருக்கவில்லை என்றும் இந்நிகழ்ச்சி அவருக்குத் தேவையான தகவல்களை விவரமாகத் தெரிவித்ததென்றும் கூறினார்.
மற்றொரு பங்கேற்பாளரான குமாரி பூஜாஸ்ரீ, பல்கலைக்கழக விண்ணப்ப முறையைப் பற்றி இந்நிகழ்வு தெளிவாக எடுத்துரைத்தது என்றும் பகிர்ந்துகொண்டார். தற்போது ஈசூன் இன்னோவா தொடக்கக் கல்லூரியில் படித்து வரும் இவர், தன் நண்பர்களையும் அடுத்த ஆண்டு இந்நிகழ்ச்சியில் சேர ஊக்குவிப்பாரெனக் கூறினார். தங்களது எதிர்காலத் திட்டங்களை முன்பே வகுக்க உதவும் இம்முயற்சி உன்னதமானதென்றும் இவர் கருதுகிறார். நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவி குமாரி மஜ்வின் சுமையா, "பங்கேற்பாளர்கள் இரண்டு நாள்களும் துடிப்புடன் பங்கேற்று, இறுதியில் புதிதாகப் பலவற்றை அறிந்துகொண்டதாகக் கூறியது
மகிழ்ச்சி அளித்தது," என்கிறார். அவரது குழுவிற்குப் பக்கபலமாக இருந்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ் பேரவையின் தலைவர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த கலியமூர்த்தி ரஞ்சித், பழனியப்பன் ஸ்ரீராம், சீனிவாசராகவன் பிரனீத் ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததன் வழி, இதுவரை பல்கலைக்கழக வாழ்வைப் பற்றி தங்களுக்கே தெரியாதவற்றை அறிந்து அவற்றை மாணவர்களிடம் கொண்டு சேர்த்தது புதிய அனுபவமாக அமைந்ததெனக் கூறினர்.
குழுவின் மற்ற உறுப்பினர்களான மதுலிகா பழனிவேலு, மெலிண்டா ஜோஷல், ஜெயச்சந்திரன் தீப்ஸ்ரீ ஆகியோர் மாணவர்களுக்கு முழுநேரமும் தகவல்களை மட்டும் வழங்கி அவர்களைச் சோர்வடையச் செய்யாமல், அவர்களைத் துடிப்பாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுகள் பங்கேற்பாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதாக பகிர்ந்துகொண்டனர். மார்ச் மாதம் நடக்கவிருந்த இந்நிகழ்ச்சி சில எதிர்பாராத காரணங்களால் முன்னுக்கு தள்ளப்பட்டபோதும் வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்தி முடித்ததை எண்ணி அவர்கள் பெருமிதம் கொண்டனர்.
குமாரி தீபிகா ஏற்பாட்டு குழுவிற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்ததோடு சிண்டாவுக்கும் அதன் இளையர் பிரிவுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அவர்களது ஆதரவு இல்லாமல் இந்நிகழ்ச்சி சாத்தியமாகியிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

