மாதங்கி இளங்கோவன்
தந்தையின் ஊக்குவிப்பில் மிகச் சிறு வயதில் இசை உலகுக்கு அறிமுகமானார் நவீன் குணசேகரன். சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் கர்நாடக இசை வகுப்புகளுக்கும் வயலின் வகுப்புகளுக்கும் தந்தைதான் தன்னை அழைத்துச் சென்றார். வகுப்புகள் முடியும்வரை அவர் காத்திருப்பார் என நினைவுகூர்ந்தார், நவீன் 25. தனது முதல் 'கீபோர்ட்' கருவியைக்கூட தந்தைதான் வாங்கித் தந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு அனைத்திலும் பக்கபலமாக இருந்த அந்தத் தந்தை, 2018ஆம் ஆண்டில் புற்றுநோயால் உயிரிழந்தார். அவர் இல்லாதபோதிலும் அவருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நவீன் அனைத்திலும் சிறந்து விளங்க முயன்று வருகிறார்.
அதே எண்ணத்துடன் வசந்தம் ஸ்டார் பாட்டுத் திறன் போட்டியில் அவர் அண்மையில் களம் இறங்கினார்.
இப்போட்டியின் விண்ணப்பக் காலம் முடியும் தறுவாயில் அவரது தாயாரின் உந்துதலாலும் சகோதரர்கள், நண்பர்களின் ஆதரவாலும் 'இளங்காத்து வீசுதே' என்னும் பாடலை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்து போட்டிக்காக சமர்ப்பித்தார். அதன்வழி அவர் போட்டியின் தகுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்று இறுதிச் சுற்று வரை சென்று வசந்தம் ஸ்டார் என வாகை சூடினார். மொத்தம் $20,000 ரொக்கத்தையும் அவர் தட்டிச் சென்றார்.
நவீன் இயல்பாகவே கூச்ச சுபாவமுடையவர். அப்படிப்பட்டவருக்கு வசந்தம் ஸ்டார் போட்டி தன்னம்பிக்கை ஊட்டியதோடு ஒரு நிகழ்ச்சி படைக்கப்படுவதற்குப் பின்னணியில் நடைபெறும் வேலைகள் என்னென்ன என்று கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிட்டியது. அதோடு நேரடியாக வாசித்த இசைக்குழுவுடன் எவ்வாறு ஒருங்கிணைந்து பாடுவது, ஓர் அரங்கத்தில் ஒலிபெருக்கியை எவ்வாறு குரலுக்குச் சாதகமாக பயன்படுத்துவது என்றும் கற்றுக்கொண்டார்.
பலவித இசைப் பின்னணியைக் கொண்ட பாடல்களையும் பாட இம்மேடை அவருக்கு வாய்ப்
பளித்தது. தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில ஆண்டுகளாகவே மெல்லிசைப் பாடல்களைப் பாடி பதிவேற்றம் செய்துவந்த நவீன், இப்போட்டிக்கு வந்த பின்னர்தான் குத்துப் பாடல்களும் தம் குரலுக்குப் பொருத்தமாக இருப்பதை உணர்ந்தார்.
நவீன், இறுதிச் சுற்றில் 'காதலன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'என்னவளே' பாடலை முதல் அங்கத்தில் பாடினார். பின்னர், அனைத்துப் போட்டியாளர்களும் 'மூங்கில் தோட்டம்' என்ற பாடலையும் இசையமைப்பாளர் டி.இமானின் இசையமைப்பில் புதியதொரு பாடலையும் பாடினார்கள். நவீனின் குரல் வளத்தையும் அவரது பாடல் திறனையும் கேட்டு பிரமித்துப் போன டி.இமான், தமது பாடல் ஒன்றில் பாட நவீனுக்கு வாய்ப்பளிக்கப் போவதாக அறிவித்தார்.
வசந்தம் ஸ்டார் போட்டியால் நவீன் நீண்டகாலமாக காணாத தமது நண்பர்களும் தமக்கு ஆதரவளிக்க வந்தது மனதை நெகிழ வைத்ததாகக் குறிப்பிட்டார். குடும்பத்தினர், நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து ஆரவாரம் செய்தது தாம் மேடையில் இன்னும் நன்றாகப் பாட ஊக்குவித்தது என்கிறார். தமக்குத் தெரியாத பலரும் அவருடைய திறனை மெச்சியபோது நவீனுக்கு அளவில்லா ஆனந்தம்தான்.
"இசைத் துறையில் வளர்வதற்கு எனக்கு நான்கு பேரைத் தெரிய வேண்டும். அதேபோல நான்கு பேருக்கு என்னையும் தெரிய வேண்டும். அவ்விதத்தில், வசந்தம் ஸ்டார் மேடை எனக்கு ஷபீர், ரஃபி, விக்னேஸ்வரி போன்ற உள்ளூர் கலைஞர்களை அறிமுகம் செய்துள்ளது. இப்போட்டியால் மற்ற சில புதிய வாய்ப்புகளையும் பெறலாம் என நம்புகிறேன்," என்றார்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பட்டக் கல்வி பயிலும் நவீன், தனது பட்டக் கல்வி, பட்டயக் கல்வி, வசந்தம் ஸ்டார் பயணம் எனப் பலவற்றையும் ஒரே காலகட்டத்தில் சமாளித்து வந்துள்ளார். அனைத்தையும் சமாளிப்பது சவாலாக இருந்தாலும் அவர் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்பட்டார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தீவிர ரசிகரான நவீன், பிற்காலத்தில் தமது சொந்த பாடல்களுக்கு இசையமைத்தும் பாட விரும்புகிறார். தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் பாடல்வரிகள் எழுதும் ஆவலுடன் உள்ளார். அதற்காக பாடல் எழுதும் துறையில் பட்டயக் கல்வி மேற்கொண்டு வருகிறார்.
நவீன் தன் வெற்றிக்கு உறுதுணையாக உள்ள குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்றென்றும் தான் கடமைப்பட்டிருப்பதாகக் கூறி, அவர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார்.