கலையோடு கவிநயமும் கலக்க கொள்ளை இன்பம்

கலையோடு கவிநயமும் கலக்க கொள்ளை இன்பம்

2 mins read
e0dce97b-ea2b-48f3-8fe6-25418a30be40
-

தமிழ்மொழி­யும் பர­தக்­க­லை­யும் சங்­க­மிக்­கும் வகை­யில் 'கவி­யும் நாட்­டி­ய­மும்' என்ற பர­த­நாட்­டி­யப் போட்டி நிகழ்ச்சி அமைந்­தி­ருந்­தது. தமிழ்மொழி விழாவை ஒட்டி நான்­கா­வது ஆண்­டாக நடந்த இப்­போட்­டி­யில் ஏறத்­தாழ 40 நட­ன­ம­ணி­கள் பங்­கேற்­ற­னர்.

'ஓம்­கார் ஆர்ட்ஸ்' நடன அமைப்­பும் பெக் கியோ சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வும் இணைந்து ஏற்­பாடு செய்த போட்டி இம்மாதம் 16ஆம் தேதி பெக் கியோ சமூக மன்­றத்­தில் இடம்­பெற்­றது.

இளம் நட­ன­ம­ணி­கள் பலர் கலந்­து­கொண்ட இப்­போட்­டிக்கு வளர்­த­மிழ் இயக்­க­மும் தமிழ் மொழி கற்­றல் வளர்ச்­சிக் கழ­க­மும் ஆத­ரவு நல்­கின.

பங்­கேற்­பா­ளர்­கள் தமிழ்ப் பாட­லைத் தேர்ந்­தெ­டுத்து, அதில் புதைந்­தி­ருக்­கும் கவிப்­பெ­ரு­மை­க­ளை­யும் படைக்க இருந்த நட­னத்­தை­யும் பற்றி வரு­ணித்து, தங்­க­ளது நட­னத்­தைத் தொடங்­கி­னர். தமிழ்ப் பின்­ன­ணி­யைக் கொண்டிராத நட­ன­ம­ணி­களும் தமிழ்மொழி­யில் தங்­க­ளது வரு­ண­னையை அருமையாகப் படைத்து பார்­வை­யா­ளர்­க­ளைக் கவர்ந்­த­னர்.

"போட்­டிக்­குத் தயா­ரான போது கருத்­துள்ள பல தமிழ்ப் பாடல்­களை அறிந்­தேன். நட­ன­மும் தமி­ழும் இணைந்த இப்­போட்டி, அவ்­வி­ரண்­டி­லும் என் தன்­னம்­பிக்­கையை வளர்த்­துக்­கொள்ள வாய்ப்­ப­ளித்­தது," என்­றார் இள­நி­லை­யர் பிரிவு வெற்றி­யா­ளர் ஷ்ரியா சதீஷ்.

'ஓம்­கார் ஆர்ட்ஸ்' நடன அமைப்­பின் நிறு­வ­னர் ஸ்ரீதேவி சிவ­ரா­ஜ­சிங்­கம், "தமிழ்மொழி விழாவை ஒட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த இப்­போட்­டி­யில் கலந்­து­கொண்­ட­தன்­மூ­லம் நட­ன­ம­ணி­கள் பாடல்­களை இயற்­றியவர்­க­ளின் நோக்­கங்­களைப் புரிந்து, தமிழ் மொழி­யின் அழகை உணர்ந்து, தமிழ்ப் பற்றை வளர்த்­துக்­கொள்­வர் என்று நம்­பி­னோம். கவி­நயம் மிக்க பல அழ­கிய தமிழ்ப் பாடல்­களை அவர்­கள் கண்­ட­றிந்­த­னர் என்­றும் நம்­பு­கி­றோம்," என்று தெரி­வித்­தார்.

செய்தி: சபிதா ஜெயகுமார்