தவறான எண்ணம் மாறவேண்டும்
தாதிமைத் துறையில் ஆண்கள் சேர்வது வழக்கத்திற்கு மாறானது எனச் சிலர் கருதினாலும் 23 வயது ராஜேந்திரன் ராஜேஷ், அத்துறையில் உள்ள ஆர்வத்தினால் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாதிமைத் துறை தொடர்பான பட்டயக்கல்வியை மேற்கொண்டார்.
தான் தேசிய சேவை ஆற்றும் காலத்தில் ராணுவ மருத்துவக் குழுவில் இருந்த அனுபவம் தாதிமைத் துறைக்குள் நுழைய
ஊக்குவிப்பாக இருந்ததென ராஜேஷ் குறிப்பிட்டார்.
"தேசிய சேவையில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் முக்கியம் என வலியுறுத்தப்பட்டாலும் எனக்குத் தரப்பட்ட பொறுப்பின் மூலம் மனிதாபிமான உணர்வை பிறரிடையே ஏற்படுத்த முடிந்தது," என்று கூறினார் இவர்.
தாதியாகப் பணிபுரிவது தனது வாழ்க்கைக்குப் பொருள் தருவதாகவும் அவர் கூறினார்.
"நமக்கான துறையையும் வேலையையும் தீர்மானிப்பதாக நமது பாலினம் ஒருபொழுதும் இருந்துவிடக்கூடாது. தாதிமைத் துறையில் பெண்கள் அதிகம் சேர்வர் என்று பலரிடையே நிலவும் கருத்து, நான் எனது இலக்கிலிருந்து பின்வாங்க வைக்கவில்லை," என்று ராஜேஷ் கூறினார்.
கல்வியில் சிறந்து விளங்காதோர்தான் தாதிமைத் துறையில் இணைவர் என்ற தவறான கண்ணோட்டமும் உண்டு என்று தெரிவித்தார் அவர்.
ராஜேஷ் இவ்வாண்டு நீ ஆன் கொங்சி விருது மட்டுமல்லாது டே எங் சூன் சுகாதார, சமூக அறிவியல் விருதையும் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், சுகாதார அமைச்சு இவருக்கு ஒருங்கிணைந்த தாதிமை உபகாரச் சம்பள விருதையும் வழங்கியுள்ளது.
நிச்சயமற்ற கொவிட்-19 காலகட்டத்திலும் அவரது முடிவையோ இலக்கையோ மாற்றிக்கொள்ளாமல் ஒரு தாதியாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உறுதியுடன் பட்டயக்கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார் ராஜேஷ்.
தாய்க்கு அர்ப்பணம்
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்ற சதீஷ் குமார் கண்ணன், 20, அதிகபட்சமாக நான்கு புள்ளிகள் பெற்றுள்ளார்.
சதீஷுக்கு 15 வயது இருக்கும்போது அவரின் பெற்றோர் பிரிந்ததால் அவர் தன் படிப்புடன் வீட்டுப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார்.
வீட்டுச் சூழலைப் படிப்பி
லிருந்து பிரித்துப் பார்க்கும்படி அவருடைய தாயார் அடிக்கடி வலியுறுத்துவதுண்டு.
அதுமட்டுமல்லாமல், எவ்வித கவனச்சிதறலும் இல்லாத ஒரு வீட்டுச் சூழலை சதீஷுக்கு அமைத்துக் கொடுத்தார் அவரின் தாயார்.
தனது உயர்நிலைப் பள்ளியில் வழக்கநிலைத் தேர்வு எழுதிய மாணவர்களில் உச்சத் தேர்ச்சி பெற்ற மாணவராக அவர் விளங்கினார்.
பலதுறைத் தொழிற்கல்லூரி அடிப்படைக் கல்வித் திட்டத்தின் கீழ் பொறியியல் பட்டயக்கல்வியை மேற்கொண்டார் இவர்.
இதனையடுத்து எந்திரவியல் துறையில் சாதிக்க வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ளார் சதீஷ். இவர் பல்வேறு பொதுச் சேவை பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். தெம்பனிஸ் நார்த் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திப்பு அங்கத்தில் பங்கேற்று வருவதோடு 'ஹாவ் ரென் ஹாவ் ஷி' என்ற லாப நோக்கமற்ற அமைப்புடன் இணைந்து தொண்டூழிய சேவை புரிந்து வருகிறார் இவர்.
"சிறுவயதில் எங்களது மின் கட்டணங்களைச் செலுத்துவதற்கு எங்கள் குழுத்தொகுதியின் உதவி இருந்ததாக என் தாயார் கூறியுள்ளார். அதேபோல் இன்று என்னால் பிறருக்கு உதவ முடிவது பெரும் மனநிறைவை அளிக்கிறது," என்று சதீஷ் கூறினார்.
அவர் வென்றுள்ள லீ குவான் யூ விருதைத் தன்னுடைய அம்மாவுக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார் சதீஷ்.
சொந்த நிறுவனத்தை ஆரம்பித்தார்
'ஈகோநேஷன்' என்ற நிறுவனத்தை நிறுவிய சண்முகவேல் சந்தியா, 19, நீடித்த நிலைத்தன்மை பற்றிய விழிப்புணர்வை இளையர்களிடையே ஏற்படுத்துவதே இந்நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
உரம் தயாரிக்கும் பட்டறை ஏற்பாடு செய்து, அதில் உரம் தயாரிக்கும் மூன்று அம்சத் தொட்டியை அறிமுகப்படுத்தினார் இவர்.
சொந்த மறுசீரமைப்பு நிறுவனத்தை நிறுவி மறுசீரமைப்பு ஒப்பந்ததாரராக இருக்கிறார் சந்தியாவின் தந்தை.
குடும்ப வர்த்தகமாக விளங்கும் இந்த மறுசீரமைப்பு நிறுவனத்திலும் நீடித்த நிலைத்தன்மையை நிலைநாட்டும் வகையில் புதிய திட்டங்களைச் செயல்
படுத்த விரும்புகிறார் சந்தியா.
சந்தியாவின் தந்தை சந்தியாவின் கனவுகளுக்கு ஓர் உந்து
தலாக இருந்துள்ளார்.
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரியில் கடல்சார் வர்த்தகத் துறையில் பட்டயக்கல்வியை மேற்கொண்டார் சந்தியா.
கடல்சார் துறையை உலக வர்த்தகத்தின் முதுகெலும்பாகக் கருதும் சந்தியா, இத்துறையைத் தேர்ந்தெடுத்து இதில் மேன்
மேலும் சிறந்து விளங்கவேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார்.
தந்தையால் பிறந்த ஆர்வம்
குறைகடத்திப் பொறியாளராக பணிபுரிந்த தன் அப்பாவினால் பொறியியல் துறை மீது மனோஜ் காயத்திரிக்கு, 20, ஆர்வம் வந்தது.
சிறுவயதில் தந்தை கொண்டுவரும் மின்சுற்றுப்பலகைகளின் நுட்பமான பகுதிகளை மிகச் சுலபமாகக் கையாண்ட நாள்களை நினைவுகூர்ந்தார் காயத்திரி. அன்றிலிருந்து பொறியியல் துறை மீது கொண்ட ஆர்வத்தினால் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பொறியியலுடன் வர்த்தகம் சார்ந்த பட்டயக்கல்வியை மேற்கொண்டார் இவர்.
சிங்கப்பூர் இன்டோர் ஃபார்ம் பிரைவெட் லிமிடட் நிறுவனத்தில் இவரது 22 வார வேலைப் பயிற்சியின்போது நகர்ப்புறப் பண்ணைகள் சார்ந்த தீர்வுகள் தொடர்பான ஒப்படைப்பில் ஈடுபட்டார்.
இந்த ஒப்படைப்பின் ஓர் அங்கமாக இவர், தானியக்க மண்னில்லாத வேளாண்மை அலமாரி ஒன்றை வடிவமைத்தார்.
கல்வி சார்ந்தவற்றில் மட்டுமல்லாது இசை, பரதநாட்டியம் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கும் காயத்திரிக்கு லீ குவான் யூ விருது வழங்கப்பட்டுள்ளது.
வானுயரப் பறக்கும் ஆசை நிறைவேறியது
சிறுவயதிலிருந்து உயர எது பறந்தாலும் அதைப் பார்த்து வியந்த தண்டாயுதபாணி கிரித்திக் குமரன், 20, இன்று விமானத்துறையில் சாதிக்கும் ஆர்வத்தோடு உள்ளார்.
சிங்கப்பூர் தொழிற்கல்லூரியில் வானூர்திப் பொறியியல் துறையில் பட்டயக்கல்வி மேற்கொண்டார் கிரித்திக்.
விமானங்கள் மீதான தனது ஈடுபாட்டால் போர் தொடர்பான திரைப்படங்களை எந்நேரமும் ரசித்துப் பார்ப்பார் இவர்.
உயர்நிலைப் பள்ளியில் பயிலும் காலகட்டத்தில் பல்வேறு விமானம் சார்ந்த போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பை கிரித்திக் பெற்றார்.
சிங்கப்பூர் ஏரோ எஞ்சின் சர்விசஸ் பிரைவெட் லிமிடெட் நிறுவனத்துடன் அமைந்த இவரது வேலைப்பயிற்சிகளின் போது ஏஸ்டாரின் மேம்பட்ட மறுவுற்பத்தி, தொழில்நுட்ப மையத்துடன் இணைந்து பழுது பார்த்தல், பராமரிப்பு, ஆய்வு செயல்முறைகளைத் தானியக்கமாக்குவதில் ஈடுபட்டார் கிரித்திக்.
இந்த அனுபவத்தால் தனது விருப்புவெறுப்புகளைத் தெரிந்துகொண்டதோடு தன் வேலைத்துறை சார்ந்த இலக்குகளை இவரால் நிர்ணயிக்கவும் முடிந்தது.
எதிர்காலத்தில் பழுது மேம்பாட்டு பொறியாளராகப் பணி
புரிய விரும்புகிறார் கிரித்திக்.
பொறுப்புகளைக் கைவிடாத சாதனைப் பயணம்
ஓர் உணவங்காடிக் கடையின் உரிமையாளராக இருக்கும் தன் தந்தைக்கு உதவுவதோடு சி. நிஷா, 23, தன் இலக்கிலிருந்து தடம் மாறவில்லை.
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உயிர் மருத்துவ அறிவியல் துறையில் பட்டயக்கல்வி மேற்கொண்டார் நிஷா.
சமூகத்தில் மாற்றத்தை ஏற்
படுத்த வேண்டும் என்று நினைக்கும் இவருக்கு ஆராய்ச்சித் துறையில் அதீத ஆர்வம்.
மேல்நிலைத் தேர்வுக்குப் பின்னர் தனக்கு அறிவியலில் ஆர்வம் உண்டு என்று தெரிந்தாலும் குறிப்பாக எந்த வகை அறிவியல் அம்சம் என்று அவருக்குத் தெரியவில்லை.
சில காலம் மருந்தக உதவியாளராகப் பணிபுரிந்த நிஷாவுக்குப் புற்றுநோய் மருந்துகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.
"புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி புற்றுநோயால் அவதியுறுவோரின் வாழ்க்கையில் மாற்றத்தை என்னால் கொண்டுவர முடியும் என நம்புகிறேன்," என்று நிஷா கூறினார்.
எது நேர்ந்தாலும் இலக்கு மாறாது
தனது முழங்காலில் கடுமையான தசைநார் காயம் ஏற்பட்டு அதற்கான சிகிச்சைகளுக்குச் சென்றுவந்தபோதும் முகமது ஃபஸ்லூர் ரஹ்மான், 19, பலதுறைத் தொழிற்கல்லூரியில் முழு பங்கேற்புடன் ஈடுபட்டார்.
ஆரம்பத்தில் கத்தோலிக்கத் தொடக்கக்கல்லூரியில் பயின்ற இவர், கிட்டத்தட்ட மூன்று மாதங்களில் மேல்நிலைத் தேர்வு பாடங்கள் பயில்வதில் தனக்கு அவ்வளவாக ஆர்வமில்லை என்பதை உணர்ந்தார்.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் சட்டம் மற்றும் நிர்வாகப் பட்டயக்கல்வியை மேற்கொண்டார் ஃபஸ்லூர்.
சட்டம் மற்றும் நிர்வாகம் தொடர்பான ஆர்வலர் குழுவின் துணைத் தலைவராக இருந்த ஓராண்டில் அக்குழு கிட்டத்தட்ட 13 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தது.
சட்டத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பும் இவர், சர்ச்சைகளுக்குத் தீர்வு காணுதல் அல்லது குற்றவியல் வழக்குகளில் கவனம் செலுத்த விரும்புகிறார்.