அனுஷா செல்வமணி
பழைய பேருந்து நிறுத்தத்தைக் குறிக்கும் அடையாளப் பலகை, பேருந்தின் பதிவு எண் பொறிக்கப்பட்ட பலகை, பயண அட்டையைச் செருகும் இயந்திரம் என 23 வயது சந்தோஷ் குமார் கலைச்செல்வம் தனது வீட்டறையில் பேருந்து வரலாற்றைக் குறிக்கும் பல்வேறு பொருள்களைச் சேகரித்து வைத்துள்ளார். பேருந்துகளின் மீது அவர் கொண்டுள்ள தீரா மோகமே இந்த வினோத பொழுதுபோக்கிற்குக் காரணமாகும்.
2004ஆம் ஆண்டு வரை இயங்கிவந்த முன்னாள் 'டிரான்ஸ் ஐலண்ட்' பேருந்துச் சேவையை நினைவுகூரும் வகையில், அவர் அறையின் சுவர் முழுவதும் பேருந்துப் பாகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பழைய பேருந்துகளில் துணியால் செய்யப்பட்ட இருக்கைகள் இருந்ததைப் போல தனது இருக்கையைக்கூட அவர் மாற்றி அமைத்துக்கொண்டார்.
அறையின் அலமாரிகள் ஒவ்வொன்றும் பழைய பேருந்துகளை நினைவில் வைத்திடும் வகையில் நினைவுப் பொருள்களைத் தாங்கி நிற்கக் காணலாம்.
இந்த விசித்திரமான பொழுதுபோக்கு, சந்தோஷுக்கு மூன்று வயதிலேயே தொடங்கிவிட்டது. சிறு வயதில் பேருந்து வரும் முன் அதன் ஒலி கேட்டு சன்னல் பக்கம் விரைந்து பேருந்தை அவர் கவனிக்காத நாளே இல்லை. ஐந்து வயதில் சந்தோஷ் பேருந்துகளைப் பற்றி இணையத்தில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிட்டார்.
தனது 11 வயதில் பேருந்து ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்த அனுபவம், பேருந்து மீது மேலும் அதிக ஆர்வம் ஏற்படத் தூண்டியது. பள்ளி முடிந்து நண்பர்கள் விளையாடச் செல்லும் நேரங்களில் சந்தோஷ் வழக்கத்துக்கு மாறாக பேருந்து சார்ந்த பொருள்களை நாடி கிராஞ்சிக்குச் சென்றார்.
பழைய பேருந்துகளின் பாகங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு அலங்கோலமாக அவர் வீட்டிற்குத் திரும்பியது தன் பெற்றோரை வியக்க வைத்தது.
சிங்கப்பூர் பேருந்துகளின் வரலாறு, ஒவ்வொரு பேருந்தும் செல்லும் பாதை ஆகியவற்றைப் பிஞ்சு வயதிலேயே கரைத்துக் குடித்த சந்தோஷ், பின்னர் இணையத்தில் தன்னைப் போன்ற மற்ற பேருந்து ஆர்வலர்களும் அடங்கிய ஒரு குழுவில் அறிமுகமானார்.
சேகரித்த பொருள்களை அறையில் அழகுறப் பொருத்தும் நுணுக்கங்களை மெல்ல பிற ஆர்வலர்களிடமிருந்து கற்றுக்கொண்டார் சந்தோஷ்.
திருகுதல், ஆணி அடித்தல் போன்ற வேலைகளால் காயங்கள் ஏற்பட்டாலும் இதில் இன்பம் காணும் சந்தோஷ் கண்ணுக்குத் தென்படும் அனைத்து பேருந்து பொருள்களையும் சேகரித்துவரும் பழக்கத்தை 2016ல் கைவிட்டார்.
"மனதைக் கவர்ந்த பொருள்கள் குறிப்பாக பழைய பேருந்துகளில் இருக்கும் பயணச்சீட்டு இயந்திரம் போன்ற பொருள்களுக்கு என் அறையில் ஒரு தனி இடம் உள்ளது," என்றார் சந்தோஷ்.
சிங்கப்பூர் பேருந்துகளின் வரலாற்றை ஆவணப்படுத்துவதில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளார் இவர். பழைய பேருந்துகள் அளித்த நினைவுகள் போல் தற்போதைய நவீனப் பேருந்துகள் அளிப்பதில்லை என்று ஏக்கத்துடன் தெரிவித்தார் சந்தோஷ்.
வாகன ஓட்டுநர் உரிமம் இருந்தாலும் பேருந்துகளில் உட்கார்ந்து சன்னல் வெளியே தோன்றும் காட்சிகளைக் கண்டு பயணம் செய்வது ஒரு தனி உணர்வுதான் என்கிறார் சந்தோஷ்.
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் சந்தோஷின் பொழுதுபோக்கு பலரையும் வியக்க வைப்பதுண்டு. வேறு சிலர் அவருடன் குப்பைக்கூடங்களுக்குத் துணையாகவே சென்றுள்ளதாகவும் சந்தோஷ் பகிர்ந்தார். சிறு வயதில் தொடங்கிய இந்த அபூர்வ ஆர்வம் இப்பொழுது சந்தோஷ் பலதரப்பட்ட பொருள்களைச் சேகரிக்கவும் ஊக்குவித்துள்ளது. பேருந்துப் பாகங்களில் தொடங்கி, தற்போது மிதிவண்டி, வாடகை உந்துவண்டி, ரயில், பழங்கால வாகனங்கள் போன்றவற்றைச் சேகரிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்.
தேசிய சேவை புரிந்து வரும் சந்தோஷ், வருங்காலத்தில் விளம்பரத் துறை சார்ந்த ஒரு பணியில் சேரத் திட்டமிட்டுள்ளார். அத்துடன் சிங்கப்பூர் வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் தான் சேகரித்த பொருள்களைக் காட்சிக்கு வைக்கும் விதமாக அருங்காட்சியகம் அல்லது உணவகம் ஒன்றைத் திறக்கவும் முனைப்புடன் உள்ளார்.