சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியில் மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவியான கீர்த்தனா, அண்மையில் இந்தியாவிற்கு மேற்கொண்ட கல்விச் சுற்றுலா மூலம் வகுப்பறைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுக்கொண்டார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் 'ஸ்டியர்' (STEER) திட்டத்தின்கீழ், 21 வயது தங்கராஜா கீர்த்தனா சமூக, பண்பாட்டு, பொருளாதார ரீதியான மாற்றங்களைக் கண்டு வரும் நாடுகளைக் கல்விச் சுற்றுலா மூலம் அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.
கடந்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்ட பத்து நாள் சுற்றுலாவில் இந்தியாவின் கேரளா, டார்ஜிலிங், கோல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தார் இவர்.
கேரளாவின் ஆலப்புழா நகரத்துக்குச் சென்றிருந்தபோது படகு வீடுகளில் தங்கியிருந்த கீர்த்தனா அந்த நகரத்தின் எழிலைக் கண்டு மலைத்துப் போனபோதும் அங்கு போக்குவரத்து வெறும் நீர்வழிதான் என்பதை உணர்ந்தார்.
கிராமவாசிகள் மீன் பிடித்து வருமானம் ஈட்டி வருகின்றனர். அத்துடன் வெள்ளம் ஏற்பட்டால் மக்கள் அடைக்கலம் புகுவதற்குத் திடமானதொரு வீடும் இல்லை. மருத்துவம் சார்ந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கீர்த்தனா ஆலப்புழாவில் இருக்கும் செயின்ட் அந்தோனிஸ் மருத்துவமனையைப் பார்வையிட்டார்.
அறுவை சிகிச்சை செய்வதற்கு ஒரு சிறிய அறை கூட இல்லாதபோதும் இருக்கும் வசதிகளைக் கொண்டு மக்கள் அனுசரித்து வாழ்கின்றனர்.
அவர் அடுத்து டார்ஜிலிங் நகரத்தின் புறநகரில் அமைந்துள்ள லாமாகோவான் கிராமத்திற்குச் சென்றார்.
கரடுமுரடான சாலைகளும் செங்குத்தான மலைப் பாதைகளும் நிறைந்த அவ்விடத்தில் கிராமவாசிகள் தொலைவில் உள்ள ஓர் அருவியிலிருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டியிருந்தது. மலைப் பகுதியில் வாழ்வதால் மக்கள் குளிர் வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ளவும் வேண்டும். கிராமத்தில் ஐந்து நாள்கள் ஒரு பள்ளியின் அருகாமையில் இருக்கும் தங்குவிடுதியில் கீர்த்தனா தங்கினார்.
மவுண்ட் கார்மல் பள்ளிக்குச் சென்றிருந்த கீர்த்தனா, அங்கு மாணவர்கள் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே பயில முடியும் என்பதை அறிந்தார். மேற்படிப்புக்கு அவர்கள் டார்ஜிலிங் நகரத்திற்குச் செல்ல வேண்டும். சுற்றிலும் மலைகள் நிறைந்த பகுதி என்பதால் நெடுகிலும் செங்குத்தான பாதைகள்.
அதேபோல் மருத்துவச் சேவை நாடவும் கிராம மக்கள் ஒரு மணி நேரம் பயணித்து டார்ஜிலிங் செல்ல வேண்டும்.
அவ்வாறு நகரத்தில் இருந்த பிஜான்பாரி ரூரல் மருத்துவமனைக்குச் சென்ற கீர்த்தனா, மருத்துவமனையில் ஒரே ஒரு மருத்துவர் இருப்பதை அறிந்துகொண்டார். அறுவை சிகிச்சைக்கான அறை செயல்பாட்டில் இல்லை, சுகாதார வசதியும் அதிகமில்லை.
விழிப்புணர்வு ஏற்படுத்திய தனது கல்விச் சுற்றுலாவை அடுத்து இனி வரவிருக்கும் விடுமுறைக் காலங்களில் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் வசதிகுறைந்த மக்களுக்கு உதவும் முனைப்புடன் உள்ளார் இளையர் கீர்த்தனா.
செய்தி: அனுஷா செல்வமணி

