அண்மைய காலமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் நடந்துவரும் பணிநீக்கம் ஊழியர்கள் பலரைப் பாதித்தபோதும் 22 வயது மகேஷ் நிவேதா லட்சுமி இத்துறையில் திறம்படச் செயல்படும் முனைப்பில் இருக்கிறார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பகுதிநேர இளங்கலைப் பட்டப்படிப்பு பயின்று வரும் லட்சுமி, இந்நிலையை அடைவதற்குப் பல இன்னல்களைக் கடக்க வேண்டியிருந்தது.
தமிழகத்தின் சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், தனது 11 வயதிலேயே தந்தையின் வேலை காரணமாக சிங்கப்பூர் வந்தார். லட்சுமியின் கல்விப் பாதை சிங்கப்பூரில் தொடங்கியது.
நார்த்லேண்ட் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலை ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தார். தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெறாத காரணத்தால் அவர் சாதாரண நிலை தொழில்நுட்பப் பிரிவுக்குத் தள்ளப்பட்டார். வகுப்பில் இருக்கும் மாணவர்களுடன் நட்பு கொள்ள திணறிய லட்சுமி, பள்ளி செல்லத் தயங்கினார். உச்சரிப்பு காரணத்தால் மற்ற மாணவர்களின் கிண்டலுக்கும் ஆளானார்.
பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதெல்லாம் வேதனையைச் சுமந்து வந்த லட்சுமிக்கு, அதே குமுறல் வாழ்வில் சாதிக்க உந்துதலாக அமைந்தது. ஓர் ஓரத்தில் முடங்கிப்போகாமல் ஆசிரியர்கள் மற்றும் மன ஆலோசகர்களின் உதவியுடன் அவர் மீள முயன்றார். தன் கவனத்தைக் கல்வியின் பக்கம் திருப்பினார்.
வழக்கநிலைத் தேர்வில் தேர்ச்சிபெற்று, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பயின்றார். குடும்ப உறுப்பினர்களும் நண்பர்கள் சிலரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவதால் அதைக் கண்டு உற்சாகம் அடைந்து தொழில்நுட்பக் கல்வி கழகத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் நைடெக் சான்றிதழ் பெற்றார் லட்சுமி.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்திலும் சிறப்பாகத் செய்ததால் அவர் தொடக்க கட்ட சேர்க்கை நடவடிக்கை மூலம் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்ந்து தகவல் தொழில்நுட்பத்தில் பட்டயம் பெற்றார்.
பட்டயம் பெற்றதும் லட்சுமி பலதுறைத் தொழிற்கல்லூரி மூலம் தேசிய கணினி அமைப்புமுறையில் (என்சிஎஸ்) ஒரு முழுநேர பணியை மேற்கொண்டார். இதில் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் பெரும் பங்காற்றியது. கல்விப் பயணத்துக்கு அதிக நேரத்தை அர்ப்பணிக்க வேண்டி இருந்தாலும் சிங்கப்பூரின் உள்ளூர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற வேண்டுமென்ற அடங்கா தீ லட்சுமி மனதில் எரிந்தது.
பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கு முன்னரும் நேரத்தைப் பயனுள்ளதாக்கிக்கொள்ள எண்ணிய லட்சுமி, பகுதிநேரமாக இந்தியாவில் இயங்கிவரும் 'ஸோஹோ கார்ப்பரேஷன்' நிறுவனத்தில் சிங்கப்பூரில் இருந்தவாறே பணிபுரிந்து தன் திறன்களை வளர்த்துக்கொண்டார்.
பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் லட்சுமி கடந்த ஒன்றரை ஆண்டாக முழுநேர வேலையை வாரத்திற்கு ஐந்து நாள்கள் சமாளித்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
சிங்கப்பூருக்கு வந்து வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் நிற்க கற்றுக்கொண்டதை வருணித்த லட்சுமி, "12 வயதில் உயர்நிலைப் பள்ளியில் நடந்ததை எண்ணி நான் கண்ணீர் வடித்திருந்தால் இன்று என் தங்கைக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க முடியாது. சிங்கப்பூரில் ஒரு எதிர்கலாத்தை அமைத்துக்கொண்டு முதுகலைப் பட்டம் பயிலும் லட்சியத்துடன் இருக்கிறேன்," என்றார் லட்சுமி.
தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த பணிநீக்கம் தனது கனவைச் சிதைக்காது என்று உறுதிபட நம்பும் லட்சுமி, திறன் மேம்பாட்டில் ஈடுபட்டு வந்தால் இந்தத் துறையில் நிலைத்து நிற்கலாம் என்று உறுதிபட நம்புகிறார்.
செய்தி: அனுஷா செல்வமணி

