லோரோங் பக்கார் பத்துவில் அமைந்துள்ள ஓர் அமைதியான பகுதியில் ஜோஷுவா மரப்பலகைகளைத் துண்டாக்கி வடிவமைப்பதைக் காணலாம். கடந்த ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வருகிறார் 31 வயது ஜோஷுவா ராம் பிரகாஷ்.
வெறும் 40 வெள்ளி முதலீட்டில் யூடியூப், மரவேலை தொடர்பான புத்தகங்கள் ஆகியவற்றின் வழிகாட்டுதலோடு தனது தொழிலைத் தொடங்கினார் ஜோஷுவா. '25 டிக்ரீ வுட்வோர்க்ஸ்' எனும் அவரது மரவேலை வர்த்தகத்தை ஜோஷுவா தொடங்கியபோது அவரின் கையில் சுத்தியல், துளையிடும் கருவி ஆகிய அடிப்படைக் கருவிகள் மட்டுமே இருந்தன. தற்போது வீடுகளுக்கும் மற்ற வர்த்தகங்களுக்கும் மரவேலை தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துகிறார் இவர்.
பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் பயின்றுவந்த ஜோஷுவா, தனது மூன்றாம் ஆண்டில் படிப்பை நிறுத்திக்கொண்டு திருமணம் செய்துகொண்டார். அப்போது வருமானம் ஈட்டவேண்டிய சூழல் ஏற்பட்டது.
திடீரென ஒரு நாள் மனைவி லவ்லியுடன் குடியிருந்த வாடகை வீட்டில் மரமேசை ஒன்றைச் செய்யவேண்டும் என்ற ஆவல் அவருள் எழுந்தது. அதற்கு யூடியூப் கைகொடுத்தது.
"நானே உருவாக்கிய அந்த மேசையில் அமர்ந்தபோது அதில் கிடைத்த இன்பமே தனி," என்றார் அவர்.
தச்சுவேலை துல்லியமானது; நுணுக்கங்கள் நிறைந்தது. சிங்கப்பூரில் உள்ள தச்சர்கள் பலரும் தங்களது திறமையைத் தொழில் ரகசியமாக வைத்துக்கொள்ளும் நிலையில் தச்சுவேலை தொடர்பான நுட்பங்களைக் கற்றுக்கொள்வதில் தான் சிரமத்தை எதிர்நோக்கியதாகக் கூறினார் ஜோஷுவா. சிறிய சமூகமாக இருந்தாலும் போட்டித்தன்மை அதில் அதிகம் எனக் குறிப்பிட்டார்.
"சில நேரங்களில் என் வயதை அறிந்ததும் வாடிக்கையாளர்கள் திரும்பிச் சென்றுவிடுவார்கள். சிலர், இந்தியர் என அறிந்தவுடன் பின்வாங்கிவிடுவார்கள்," என்றார் அவர்.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள புகழ்பெற்ற மரவேலை கலைஞர்களை நேரில் சென்று சந்தித்துள்ள ஜோஷுவா, உலகெங்கிலும் இக்கலைக்கு உள்ள அங்கீகாரமும் வளங்களும் தன்னைப் பிரம்மிக்க வைப்பதாகத் தெரிவித்தார்.
"தினசரி நாம் பயன்படுத்தும் வீட்டுப் பொருள்களை உருவாக்குவதில் உள்ள உழைப்பை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. இதையெல்லாம் ரசிக்க வைக்கிறது இந்தத் தச்சர் பணி," என்றார் அவர்.
தொடர்ந்து சோதனை முயற்சிகளை மேற்கொண்டு தனது திறன்களை வளர்த்துக்கொண்டு வருவதாகவும் கூறினார் ஜோஷுவா.