சபிதா ஜெயகுமார்
தனி ஒருவராக 2020ஆம் ஆண்டில் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கச் சிரமப்பட்டவர், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 'ஃபோர்ப்ஸ்' 30 வயதுக்குக் கீழ் உள்ள 30 முன்னணி இளையர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 28 வயது விஷ்ணு சரண் தொடங்கிய 'இன்விஜிலோ டெக்னாலஜிஸ்', செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் காணொளிப் பகுப்பாய்வுக் கட்டமைப்பு ஒன்றை வடிவமைத்துள்ளது.
உடனுக்குடன் கண்காணிப்பு மேற்கொண்டு கட்டுமானத் தளங்கள் போன்ற உயர் அபாயச் சூழல்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் துல்லிய விவரங்களைத் திரட்டி வழங்கும் ஆற்றல் அக்கட்டமைப்புக்கு உண்டு.
இந்தப் புத்தாக்கத் தொழில்நுட்பத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நிலப் போக்குவரத்து ஆணையம், ஜூரோங் நகராண்மைக் கழகம் முதலியவை நாடியுள்ளன.
"ஒரு வேலையிடத்தில் முக்கியமாக விளங்கும் பாதுகாப்பு அம்சம், கட்டுமானத் துறையில் தொடர்ந்து ஒரு சவாலாக உள்ளது. இளம் வயதிலிருந்தே வேலையிட விபத்துகளைப் பற்றி நான் அறிந்துள்ளேன். இது தொடர்பில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுத்தேன்," என்று கூறினார் விஷ்ணு.
சிறு வயதில் 'ஃபோர்ப்ஸ்' பட்டியல் பற்றி கேள்விப்பட்ட அவர், தற்போது அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது தனக்குப் பெருமை அளிப்பதாக கூறினார்.
தனது 26வது வயதில் 2020ஆம் ஆண்டு ஜூலையில் விஷ்ணு 'இன்விஜிலோ' நிறுவனத்தைத் தொடங்கினார்.
நிறுவனத்தின் ஆரம்பக் காலத்தில் அவருக்குத் துணையாக நிறுவனர் குழு இல்லை. அச்சமயத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றும் ஏற்பட்டது. மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டதுடன் கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டன. துவண்டு போன விஷ்ணு என்ன செய்வது என்ற குழப்பத்தில் திண்டாடினார்.
"சாதித்துக் காட்ட வேண்டும் என என் முழு உழைப்பையும் செலுத்தி நிறுவனத்திற்காக போராட முடிவெடுத்தேன். என் கனவை நான் விட்டுக் கொடுப்பதாக இல்லை," என்றார் விஷ்ணு.
தொடர்ந்து தடைகள் பல அவர் பாதையில் குறுக்கிட்டன.
"இளையர் தொடங்கிய தொழில் என நம்பிக்கையின்றி சேர்ந்த சில நாள்களிலேயே ஊழியர்கள் பலர் வேலையை விட்டனர், துறையிலிருந்த வயதில் மூத்தவர்கள் என்னை ஒதுக்கினர்," என்று குறிப்பிட்டார் அவர்.
திரு கோ சை குவான், திரு ஆலன் லோ ஆகிய இருவரும் வழிகாட்டிகளாக தன் வாழ்க்கையில் வந்தது ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
"என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்கள் இவர்கள். என் மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு நிறுவனத்தின் முதல் முதலீட்டாளர்களை ஈர்க்க உதவினர்," என்று தெரிவித்தார் விஷ்ணு.
அதையடுத்து டி. அனந்த குமார், 26, தலைமை தொழில்நுட்ப அதிகாரி, முதன்மை செயற்கை நுண்ணறிவு பொறியியலாளராக ப்ரியான்ஷ் மிஸ்ரா, 25, முதன்மை செயற்கை நுண்ணறிவு ஆய்வாளராக கோ ஜூன் ஹவ், 28 ஆகியோர் பக்கபலமாக இணைந்துகொண்டனர்.
"வேலையிடப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பெருமளவிலான கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் காணொளிக் கண்காணிப்பை அடுத்த ஆண்டு ஜூன் முதல் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அண்மையில் மனிதவள அமைச்சு அறிவித்தது. இந்த மாற்றத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி," என்று பகிர்ந்துகொண்டார் விஷ்ணு.
"புதுமையான பாதுகாப்புத் தீர்வுகள், தொழில்நுட்பங்கள் மூலம் பணியிடப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 'இன்விஜிலோ டெக்னாலஜிஸை' பாராட்டுகிறேன்," என்று கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அதிபர் ஹலிமா யாக்கோப் வாழ்த்தியிருந்தார்.
போட்டித்தன்மை மிகுந்த இன்றைய உலகில் இளையர்கள் மீள்திறனுடன் தங்களின் கனவுகளை நனவாக்க உழைக்க வேண்டும். வெற்றி பின்னால் எந்நேரமும் ஓடாமல் பலவித அனுபவங்களின் மூலம் தங்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார் விஷ்ணு.

