கருணாநிதி துர்கா
சிறு வயதிலிருந்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் நான்கு வயது முதல் ஏழு வயது வரையிலான பிள்ளைகளுக்காக 'புக் விசர்ட்ஸ்' வாசிப்பு இயக்கத்தை சிண்டா 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.
இந்த இயக்கத்தை வழிநடத்தும் தொண்டூழியர்கள் சிறார்களுக்காக நூல்கள் வாசித்து வாசிப்பின் நுணுக்கங்களையும் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் அவர்களிடையே வலியுறுத்துவர்.
16 வாரங்களுக்கு நடத்தப்படும் இந்நடவடிக்கையில் 13 வாசிப்பு அமர்வுகளை சிறார்களுக்காக தொண்டூழியர்கள் இணையம் வழி நடத்துவர்.
மற்ற மூன்று நாள்கள் தேசிய பொது நூலகங்களில் நடவடிக்கை ஏற்பாடு செய்யப்படும்.
கடந்த மாதம் 21ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியை சிண்டா, தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
கதை சொல்லும் நடவடிக்கை போன்ற பல சுவாரசியமான நடவடிக்கைகளுடன் தொடங்கியது 'புக் விசர்ட்ஸ்' இயக்கம்.
மேலும், தேசிய நூலக வாரியத்தின் பிரதிநிதிகள் அதன் உறுப்பினராகும் செயல்முறையை பற்றி பங்கேற்பாளர்களிடமும் சிறார்களின் பெற்றோர்களிடத்திலும் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சிகளின் மூலம் பெற்றோர்களும் பிள்ளைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
"இந்த வாசிப்பு இயக்கத்தில் சேர்ந்து எனது மகன் வாசிப்பதற்கும் தொண்டூழியர்களிடமிருந்து மேலும் பலவற்றைக் கற்றுக்கொள்வதற்கும் ஆர்வமாக இருக்கிறார். இந்நடவடிக்கையின் முடிவில் அவர் நூல்கள் வாசிப்பதில் நிச்சயம் உற்சாகமாக ஈடுபடுவார் என நம்புகிறேன்," என்று திரு வி. சுரேந்திரன் கூறினார்.
"சிறார்களிடையே வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதில் எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்," என்று நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படிக்கும் தொண்டூழியத் தலைவர் ஹசினா நஷருதீன், 22, கூறினார்.
இவ்வாண்டு ஐந்து தொண்டூழியத் தலைவர்களும் 18 தொண்டூழிய வாசிப்பாளர்களும் இந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.