சபிதா ஜெயகுமார்
செவித்திறன் குறைபாடுள்ள 18 வயது ஸ்ரீ ராமச்சந்திரன் விஜயன் 'ஃபேப்ரிக் ஆஃப் சிங்கப்பூர்' என்னும் தலைப்பிலான ஓவியத்திற்குப் பங்காற்றியுள்ளார்.
'லைட்ஹவுஸ் ஸ்கூல்' என்னும் சிறப்புத் தேவையுடையவர்களுக்கான பள்ளியில் பயிலும் ராமச்சந்திரன் மற்ற நான்கு மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து இந்த ஓவியப்படைப்பை உருவாக்கினார்.
'ஃபேப்ரிக் ஆஃப் சிங்கப்பூர்' சிங்கப்பூரின் பெருமைகளான பாரம்பரியம், தனித்துவ நவீன அம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி தேசத்தின் அடையாளத்தை படம்பிடித்துச் சித்திரித்துள்ளது.
"நான் ஜூவல் சாங்கி விமான நிலையத்தின் நீரூற்றுகளையும் மெர்லாயனையும் பார்க்கச் சென்றேன். அவற்றின் அழகு என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அவற்றை என் ஓவியத்தில் உள்ளடக்க ஆசைப்பட்டேன்," என்று விளக்கினார் ராமச்சந்திரன்.
ஓவியப் படைப்புகளை உருவாக்க வித்திட்ட பயிலரங்குகளில் கலந்துகொண்ட ராமச்சந்திரன், அவற்றின் மூலம் பல புதிய நண்பர்களைப் பெற்றதாகவும் அவர்கள் வரைந்த ஓவியங்களைக் கண்டு தாமும் மகிழ்ந்ததாகவும் பகிர்ந்துகொண்டார்.
"சிங்கப்பூரராக இருப்பதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். எனது பள்ளியையும் பிரதிநிதிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிங்கப்பூரின் பல சிறப்புக் கட்டடங்கள் குறித்தும் அவற்றை எவ்வாறு அழகாக வரைவது குறித்தும் நிறைய கற்றுக்கொண்டேன்," என்று குறிப்பிட்டார் ராமச்சந்திரன்.
"மாணவர்கள் பலர் சேர்ந்து இதில் பங்காற்றினோம். சிங்கப்பூர் சமுதாயத்தின் முக்கிய அங்கம் வகிக்கும் குழு உணர்வும் சிங்கப்பூர் குடிமக்கள் இன, மொழி, சமய வேறுபாடுகளை மறந்து பணியாற்றுவதும் நமது சிறப்புகள். அதைபோல் மாணவர்கள் நாங்களும் சேர்ந்து இதில் பங்காற்றினோம்," என்று தெரிவித்தார் ராமச்சந்திரன்.
உதவும் மனப்பான்மை கொண்டுள்ள ஸ்ரீ ராமச்சந்திரன், 'லீ குவான் இயூ சிறந்த மாணவர்' விருதை 2022ஆம் ஆண்டில் பெற்றார். அவரது முயற்சிகளில் சிறந்து விளங்கியதையும் செவித்திறன் குறைபாட்டைப் பின்னடைவாகக் கருதாமல் விடாமுயற்சியுடன் செயல்பட்டதையும் அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டது.
"தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டுள்ளேன். எதிர்காலத்தில் வேலைக்குச் சென்று என் சொந்தக் கால்களில் நிற்கவும் என் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கவும் விரும்புகிறேன். என்னை வெற்றிப் பாதையில் செல்ல தொடர்ந்து ஊக்குவிக்கும் என் பள்ளிக்கும் குடும்பத்தினருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்," என்று பூரிப்புடன் கூறினார் திரு ராமச்சந்திரன்.
2023ஆம் ஆண்டின் தேசிய தின அணிவகுப்பு செயற்குழு 'எஸ்ஜி எனேபல்' எனும் பிரிவினருக்கான நல்வாழ்வு நிலையத்துடன் இணைந்து நான்கு ஓவியப் படைப்புகளை வடிவமைத்துள்ளது. தேசிய தின அணிவகுப்பின்போது வருகையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் பைகளில் அவை இடம்பெறுகின்றன.
ஜூன் 15ஆம் தேதி துணைப் பிரதமரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங் சுவீ கியட் ஓவியப் படைப்புகளைத் தயாரித்த மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.
நிகழ்வில் கலந்துகொண்ட துணைப் பிரதமருடன் பேசியது தமக்குப் பெருமைக்குரிய தருணம் என்று ராமச்சந்திரன் குறிப்பிட்டார்.