இளையர்களிடத்தில் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்தும் நோக்கில் அண்மையில் சிண்டா மூன்று நாள் மாநாடு ஒன்றை நடத்தியது. இந்த மாநாட்டில் 17 வயது முதல் 25 வயதிலான தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் முதல் முழுநேரப் பணியில் இருக்கும் இளையர்கள் வரை 60 பேர் பங்குகொண்டனர்.
குழுவுடன் இணைந்து பணியாற்றும் ஆற்றல், தொண்டூழிய முனைப்பு உள்ளிட்ட பல்வேறு பண்புகளை இளையர்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்கில் பலவகையான செயல்முறை நடவடிக்கைகள் இம்மாநாட்டில் இடம்பெற்றன.
2011ஆம் ஆண்டு சிண்டாவின் இளையர் அணியின் ஓர் அங்கமாகத் தொடங்கப்பட்ட இந்த மாநாடு, 11ஆவது முறையாக ஜூன் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் யுனிவர்சிட்டி டவுனில் நடைபெற்றது. மூன்று நாள்களும் இளையர்கள் அங்குத் தங்கி மாநாட்டில் கலந்துகொண்டனர்.
மாநாட்டின் முதல் நாளின் முத்தாய்ப்பாக ‘பிரவலேஜ் வாக்’ என்ற அங்கத்தின் மூலம் உடற்குறையுடையோர், வளர்ப்புப் பெற்றோர் பராமரிப்பில் வளரும் பிள்ளைகள் போன்ற பல்வேறு சாராரின் வாழ்க்கைமுறை பற்றிய புரிந்துணர்வும் விழிப்புணர்வும் பகிரப்பட்டது. இரண்டாம் நாளில், தற்போதைய சமூகத்தின் பிரச்சினைகளை இளையர்கள் புரிந்துகொள்ளும் வகையில், ‘மைண்ட்ஸ்’ எனப்படும் அறிவுசார் குறையுடையோருக்கான இயக்கம், ‘தய் குவான்’ தாதிமை இல்லம், மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் வெளிநாட்டு ஊழியர்களின் தங்குவிடுதிகள் ஆகிய இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
அங்கு வாழும் மக்களுடைய இன்னல்களையும் இயலாமைகளையும் புரிந்துகொண்ட இளையர்கள் மூன்றாம் நாள் மாநாட்டில் குழுக்களாக பிரிந்து, ‘ஐடியேஷன் சேலஞ்’ எனும் அங்கத்தில் அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தப் புத்தாக்க சிந்தனைகளையும் செயல்படுத்தக்கூடியத் தீர்வுகளையும் சமர்ப்பித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிண்டா செயலவைக் குழுவின் துணைத் தலைவரான திரு சர்ஜித் சிங், “இந்த மாநாடு இளையர்கள் தங்களைத் தாங்களே புரிந்துகொண்டு மேம்படுத்திக்கொள்ளும் ஒரு தளமாக உள்ளது. சமூக மேம்பாட்டினைக் கருத்தில் கொண்டு இன்னல்படும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த இளையர்கள் படைத்த தீர்வுகள் பாராட்டுதலுக்குரியது. வருங்கால இளைய சமூகத்தின் மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது,“ என்று கூறினார்.
இம்மாநாட்டில் பங்குகொண்ட சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கணினிப் பொறியியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் 17 வயது தினேஷ் தமிழ்ச்செல்வன், “இயல்பாகவே கூச்ச சுபாவம் உள்ள எனக்கு அறிமுகம் இல்லாதவர்களுடன் பழக சற்று சிரமமாக இருந்தது. ஆனால் முதல் நாளிலேயே நடைபெற்ற குழு நடவடிக்கைகள் எங்களுக்குள் புரிந்துணர்வையும் நட்பையும் ஏற்படுத்தியது. இறுதி நாளன்று மாநாடு அதற்குள் முடிந்துவிட்டதே என்று ஏக்கமாக இருந்தது,“ என்று கூறினார்.
அண்மையில் ‘ஏ’ நிலைத் தேர்வு முடித்து நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேரவிருக்கும் ராஜதர்ஷினி நெடுமாறன், 19, “இந்த மாநாட்டின் மூலம் இளையர்களான நாங்கள் எங்களுக்குண்டான சமூகப் பொறுப்புணர்வைப் புரிந்துகொண்டேன். இன்னல்களுக்கு மத்தியிலும் உற்சாகத்துடன் வாழும் பலரைச் சந்தித்தேன். அவர்கள் என் வாழ்வின் வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் எப்போதும் இருப்பார்கள்,“ என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிண்டாவின் பல நடவடிக்கைகளில் தொண்டூழியராக இருக்கும் தனியார் நிறுவன ஊழியரான கார்த்திகா குமரன், 19, “வெவ்வேறு வாழ்க்கை முறையையும் சூழலையும் சார்ந்த ஒத்த வயது நண்பர்களை ஒரே கூரையின் கீழ் சந்தித்தது புதுவித அனுபவமாக இருந்தது. எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும் சமூக பொறுப்புணர்வும் அதிகரித்துள்ளதாக உணர்கிறேன். என் நண்பர்களையும் இதுபோன்ற நிகழ்வுகளில் பங்குகொண்டு பயன்பெறப் பரிந்துரைக்கவுள்ளேன்,“ என்று கூறினார்.

